டிடி ரிட்டர்ன்ஸ் ஹிட்.. சம்பளத்தை உயர்த்திய சந்தானம்.. எத்தனை கோடி தெரியுமா?
சென்னை: Santhanam (சந்தானம்) டிடி ரிட்டர்ன்ஸ் படம் ஹிட்டானதை அடுத்து சந்தானம் சம்பளத்தை உயர்த்திவிட்டதாக கூறப்படுகிறது.
சின்னத்திரையில் அறிமுகமாகி பின்னர் சிம்பு மூலம் திரைத்துறைக்குள் வந்தவர் நடிகர் சந்தானம். காமெடி நடிகராக அறிமுகமாகி அதகளம் செய்தவர். அவரது டைமிங் காமெடிகள் அனைத்துமே வயிறு வலிக்க சிரிக்க வைத்தவை. குறிப்பாக கவுண்டமணி எப்படி டைமிங்கில் அடுத்தவர்களுக்கு பல்பு கொடுப்பாரோ அதே ஃபார்முலாவை சந்தானம் ஃபாலோ செய்து சிரிப்பு பட்டாசை பற்ற வைத்தார்.

சந்தானம் இல்லாமல் ஒரு படம் இல்லை: வடிவேலு பீக்கில் இருந்தபோது எப்படி அவர் இல்லாமல் ஒரு படம்கூட வெளியாகாதோ அதேபோல்தான் சந்தானம் பீக்கில் இருந்தபோதும் நிலைமை இருந்தது. எந்தப் படத்தில் பார்த்தாலும் சந்தானம் நடித்திருப்பார். அதுமட்டுமின்றி பல படங்கள் சந்தானத்தின் காமெடிக்காகவே ஓடிய கதையும், பல அறிமுக ஹீரோக்கள் சந்தானத்தின் துணையோடு முதல் படத்தில் தப்பித்த கதையும் உண்டு.
ஹீரோ சந்தானம்: ஒருகட்டத்தில் காமெடியிலிருந்து விலகி கதாநாயகனாக நடித்தார் சந்தானம். அவர் ஹீரோவாக நடித்த பெரும்பாலான படங்கள் பெரிதாக ஓடவில்லை. இருந்தாலும் ஹீரோவாக ஒரு ஹிட்டாவது கொடுத்துவிட வேண்டும் என்பதில் முனைப்போடு இருக்கிறார். அவர் நடிப்பில் கடைசியாக குலு குலு படம் வெளியானது. அப்படமும் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இதற்கிடையே சந்தானம் மீண்டும் காமெடி நடிகராக மாற வேண்டும் என ரசிகர்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்துவருகின்றனர்.

டிடி ரிட்டர்ன்ஸ்: இந்தச் சூழலில் டிடி ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார் சந்தானம். ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியிருக்கும் படம் சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. படம் பல இடங்களில் வெடித்து சிரிக்க வைப்பதாகவும் படம் ஹிட்டாகிவிட்டதாகவும் ரசிகர்கள் கூறுகின்றனர். விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கிறது. 12 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி 16 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சந்தானமும் ஹேப்பியாக இருக்கிறார்.
சந்தானம் சம்பளம்: இந்நிலையில் டிடி ரிட்டர்ன்ஸ் படத்துக்கு பிறகு சந்தானம் தனது சம்பளத்தை உயர்த்திவிட்டதாக கூறப்படுகிறது. அதன்படி இதுவரை 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய சந்தானம் தற்போது தனது சம்பளத்தை 8 கோடியாக ஃபிக்ஸ் செய்திருக்கிறாராம். அதேபோல் இந்தப் படத்தின் ரிலீஸுக்கு முன்னதாகவே தயாரிப்பாளர் ஒருவர் அவரிடம் அட்வான்ஸ் கொடுக்க சென்றதாகவும் ஆனால் சந்தானமோ டிடி ரிட்டர்ன்ஸுக்கு பிறகு வாருங்கள் என சொல்லி அனுப்பிவைத்தாராம். அதற்கு காரணம் என்னவென்றால் நிச்சயம் இந்தப் படம் ஹிட்டடித்துவிடும். எனவே சம்பளத்தை உயர்த்தலாம் என்ற கணக்கு போட்டுதான் அவர் இப்படி செய்திருக்கிறார் என்றும் ஒரு தகவல் உலாவுகிறது.


Click it and Unblock the Notifications











