மறைந்த நடிகர் சேதுராமனின் கிளினிக்கை திறந்து வைத்த சந்தானம்.. அந்த போட்டோவை வெளியிட்டு உருக்கம்!
சென்னை: மறைந்த நடிகர் சேதுராமனின் ஸ்கின் கிளினிக்கை நடிகர் சந்தானம் திறந்து வைத்துள்ளார்.
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகமானவர் சேதுராமன். தொடர்ந்து வாலிப ராஜா, சக்கப்போடு போடு ராஜா, 50 50 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இளம் நடிகரான சேதுராமன் கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி இரவு திடீர் கார்டியாக் அரெஸ்ட்டால் மரணமடைந்தார். அவரது திடீர் மரணம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

நடிகர் சேதுராமன்
நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பரான சேதுராமன் திரைத்துறையை சேர்ந்த பலருடனும் நெருங்கிய நட்பு பாராட்டி வந்தார். தோல் சிகிச்சை நிபுணரான அவர் சென்னை அண்ணா நகரில் Zi Clinic என்கிற தோல் சிறப்பு மருத்துவமனையை நடத்தி வந்தார்.

ஒரு பெண் குழந்தை
சேதுராமன் இறந்த போது அவரது மனைவி கர்ப்பிணியாக இருந்தார். கர்ப்பிணி மனைவியையும் ஒன்றரை வயது பெண் குழந்தையும் இருந்த நிலையில் சேதுராமன் அகால மரணமடைந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

ஆண் குழந்தை பிறந்தது
கடந்த ஆகஸ்ட் மாதம் சேதுவின் மனைவி உமையாளுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நடிகர் சந்தானம் சேதுராமனின் Zi Clinic கிளையை சென்னை ஈசிஆரில் திறந்து வைத்துள்ளார். இதன் கட்டுமானப் பணிகள் நடைபெற்ற போதுதான் நடிகர் சேது மரணமடைந்தார்.

திறந்து வைத்ததில் மகிழ்ச்சி
இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சந்தானம், என் நெருங்கிய நண்பரான சேதுராமனின் ஸீ கிளினிக்கை ஈசிஆரில் அவரது பிறந்தநாளில் திறந்து வைத்ததில் மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளார்.

ஒன்றாக இருந்த போட்டோ
மேலும் இருவரும் ஒன்றாக இருந்த போட்டோவையும் ஷேர் செய்துள்ளார் சந்தானம். சேதுராமனின் இறுதிச்சடங்கில் நடிகர் சந்தானம் பங்கேற்றார். அப்போது நண்பரான சேதுராமனின் உடலை கதறியப்படியே சுமந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications