சரத்பாபு உயிரிழப்பு... ரஜினிகாந்த் குட் புக்கில் இருக்கும் வெகு சிலரில் இவரும் ஒருவர்
சென்னை: Sarath Babu Death News in Tamil: (சரத்பாபு உயிரிழப்பு) நடிகர் ரஜினிகாந்த்தின் குட் புக்கில் சரத்பாபு இருந்திருப்பது தற்போது தெரியவந்திருக்கிறது.
தெலுங்கில் ராமராஜ்யம் படத்தின் நடிகராக அறிமுகமான சரத்பாபுவுக்கு தமிழ் சினிமா பெரிய அடையாளத்தை கொடுத்தது. இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கிய பட்டண பிரவேசம் என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான சரத்பாபு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 400 படங்கள்வரை நடித்திருக்கிறார்.
உடல்நலக்குறைவு: சரத்பாபு கடைசியாக தமிழில் வசந்தமுல்லை படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர் ஓய்வில் இருந்தார். ஆனால் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக முதலில் பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு ஹைதராபாத்தில் இருக்கும் ஏஐஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை எடுத்துவந்தார்.

உயிரிழந்த சரத்பாபு: கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக சரத்பாபு உயிரிழந்துவிட்டார் என தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அதனை அவரது குடும்பத்தினர் மறுத்தனர். இந்நிலையில் சிகிச்சையில் இருந்த அவர் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 72. ஹைதராபாத்தில் இருக்கும் அவரது உடல் சென்னை தி.நகரில் இருக்கும் அவர் வீட்டுக்கு எடுத்து வரப்படும் என்றும், சென்னையில்தான் அவரது இறுதிச்சடங்கு நடக்கும் என்றும் கூறப்படுகிறது.
சரத்பாபுவின் மறுபக்கம்: சரத்பாபு முதலில் ரமா பிரபா என்ற நடிகையை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் அந்த திருமணம் விவாகரத்தில் முடிய தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான எம்.என்.நம்பியாரின் மகளான சினேகாவை திருமணம் செய்துகொண்டார். சினேகாவுடனான திருமண வாழ்க்கையும் பாதியில் முடிந்தது. ரமா பிரபா - சரத்பாபு தம்பதிக்கு ஒரு மகன், மகள், சினேகா - சரத்பாபுவுக்கு ஒரு மகன், மகள் இருக்கிறார்கள். நம்பியார் போலவே சபரிமலைக்கு தொடர்ந்து மாலை போட்டவர் சரத்பாபு என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினியுடனான கெமிஸ்ட்ரி: ஹீரோவாக நடிக்க விரும்பாத சரத்பாபு தொடர்ந்து குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்தார். குறிப்பாக அவர் ரஜினியுடன் நடித்த அத்தனை படங்களும் காலங்கடந்து நிற்பவை. முள்ளும் மலரும் படத்தில் ரஜினியுடன் முதல்முறையாக நடித்த சரத்பாபு அதன் பிறகு நெற்றிக்கண், வேலைக்காரன், முத்து, அண்ணாமலை, பாபா உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவற்றில் பாபா தவிர்த்து அத்தனை படங்களும் மெகா ஹிட்டானவை என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் குட் புக்கில் சரத்பாபு: தனது படங்களில் ஏதேனும் ஒரு கேரக்டரை சரத்பாபுவுக்கு கொடுக்க சொல்வாராம் ரஜினிகாந்த். அப்படி சரத்பாபுவை ஃபிக்ஸ் செய்துவிட்டு படக்குழு சார்பில் அவருக்கு ஃபோன் செய்து உங்களை நடிக்க வைக்க ரஜினி சார் சொல்லியிருக்கிறார் என கூறுவார்களாம்.
அதற்கு உடனே சரத்பாபு அவர் கூப்பிட்டா வந்துதானே ஆகணும் வருகிறேன் என சொல்லிவிடுவாராம். சரத்பாபு சினிமாவில் யாருடைய வாய்ப்பையும் கெடுக்காமல், யாரையும் தொந்தரவு செய்யாமல் இருந்ததால் ரஜினி தன்னுடைய குட் புக்கில் இடம் கொடுத்திருக்கும் வெகு சிலரில் சரத்பாபுவும் ஒருவராம்.


Click it and Unblock the Notifications











