150 வயது வரை உயிருடன் இருப்பேன்னு சொன்ன சரத்குமாருக்கு பிறந்தநாள்.. மிஸ் யூ போஸ்ட் போட்ட ராதிகா!
சென்னை: ஜூலை 14, 2025 அன்று, தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், அரசியல்வாதியுமான சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் தனது 71-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள், அரசியல் ஆதரவாளர்கள் மற்றும் திரையுலக நண்பர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் அவரது மனைவி ராதிகா சரத்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சரத்குமார் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தும், அவருடன் இந்த நாளில் இருக்க முடியாததை நினைத்து வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த 1954-ம் ஆண்டு ஜூலை 14-ல் புதுதில்லியில் பிறந்த சரத்குமார், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்து, 150-க்கும் மேற்பட்ட படங்களில் தனது முத்திரையைப் பதித்தவர். முதலில் வில்லன் வேடங்களில் கலக்கி வந்த சரத்குமார், 1992-ல் வெளியான 'சூரியன்' படத்தில் கதாநாயகனாக களமிறங்கினார். முதல் படமே அவருக்கு வெற்றிவாகை பெற்றுக் கொடுக்க, அதன் பின்னர் டாப் கியரில் பிசியான நடிகராக மாறினார். 'நாட்டாமை' (1994), 'நட்புக்காக' (1998), 'சூரியவம்சம்' (1997) போன்ற படங்களில் அவரது நடிப்பு அவரை 'சுப்ரீம் ஸ்டார்' என்ற பட்டத்துடன் புகழின் உச்சிக்கு அழைத்துச் சென்றது.

இதில் சூரியவம்சம் படம் எவர் கிரீன் பட்டியலில் இடம் பெற்றுள்ள படம் எனலாம்.சரத்குமார் தனது நடிப்பிற்காக இரண்டு தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளையும், மூன்று பிலிம்ஃபேர் விருதுகளையும் பெற்றுள்ளார். மேலும், தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
அரசியல் வாழ்க்கை: சரத்குமார் 1996-ல் திமுகவில் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். பின்னர், அதிமுகவில் இணைந்து 2006 வரை பணியாற்றினார். 2007-ல் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை (AISMK) தொடங்கி, 2011-ல் தென்காசி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். 2024-ல் அவரது கட்சி பாஜகவுடன் இணைந்தது, ஆனால் எதிர்பார்த்த பொறுப்பு கிடைக்காததால், மீண்டும் தனது கட்சியை புத்துயிர் பெறச் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
150 ஆண்டுகள்: சரத்குமார், கடந்த 2023-ல் மதுரையில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில், "150 வயது வரை உயிருடன் இருப்பேன், அதற்கான வித்தையைக் கற்று வைத்துள்ளேன்" என்று கூறி சமூக வலைத்தளங்களில் வைரலானார். அவரது 71வது பிறந்தநாளிலும் கூட அந்தக் கருத்து மீண்டும் பேசு பொருளாகியது. அவருக்கு ரசிகர்கள் தொடங்கி திரைத்துறையைச் சேர்ந்தவர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அப்படி இருக்கும்போது அவரது மனைவி ராதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ள வாழ்த்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

ராதிகா சரத்குமார்: அதாவது, " இந்த நாளில் நான் உங்களை ரொம்பவும் மிஸ் செய்கிறேன். எனது எண்ணங்கள் முழுக்க நீங்கள் மட்டுமே இருக்கிறீர்கள். நீண்ட ஆயுளுடனும், நிம்மதியுடனும், ஆரோக்கியத்துடனும் இருக்க எனது இதயப்பூர்வமான வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவோடு சரத்குமாருடன் அவர் எடுத்துக் கொண்ட பழைய புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











