Sarathkumar :படம் எடுத்து மொத்த பணமும் போச்சு.. காசு இல்லாம நடுரோட்ல நின்னேன்.. சரத்குமார் பேட்டி!
சென்னை : பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் மகத்தான் வெற்றிக்கு பிறகு, இரண்டாவது பாகம் வரும் ஏப்ரல் 28ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.
படத்திலிருந்து ஏற்கனவே 'அக நக' பாடல் கடந்த மார்ச் 20-ம் தேதி வெளியானது. இளங்கோ கிருஷ்ணன் எழுத்தில், சக்திஸ்ரீ கோபாலன் பாடிய பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்து உள்ள சரத்குமார் தனது வாழ்க்கையில் கடந்து வந்த பாதையை நினைவு கூர்ந்துள்ளார்.

சரத்குமார் பேட்டி : அதில், பொன்னியின் செல்வன் படத்தில், பழுவேட்டரையர் கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்ததற்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிச்ச வானம் கொட்டட்டும் படத்துல நடிச்சிட்டிருந்தேன். படத்தின் ஷூட்டிங் நடந்த கொண்டிருந்த போது மணிரத்னம் பல முறை அங்கு வந்து இருக்கிறார். ஒரு நாள் திடீர்னு கூப்பிட்டு பொன்னியின் செல்வன்ல பெரிய பழுவேட்டரையர் கேரக்டர் பண்றீங்களா? என்று கேட்டார்.
கதையின் முக்கியமான ரோல் : உண்மையில் அந்த கதாபாத்திரம் தான் கதையில் ஒரு முக்கிய பங்கு என்பதை இந்த கதையை படித்தவர்களுக்கு நன்றாக தெரியும். அந்த கேரக்டரை எனக்கு கொடுத்ததற்கு ரொம்ப நன்றி, அதே போல ஐஸ்வர்யா ராயின் நந்தினி கதாபாத்திரமும் ராஜதந்திரம், சூழ்ச்சி என ஒட்டுமொத்தத்தையும் அழகாக வெளிப்படுத்தி இருப்பார்.

பல முறை தற்கொலை செய்திருப்பேன் : மேலும் தனது சொந்த வாழ்க்கை குறித்து பேசிய சரத்குமார், இன்றைய இளம் தலைமுறையினர் மார்க் குறைவாக எடுத்தால், காதலில் தோல்வி அடைந்தால் தற்கொலை என தவறான முடிவை எடுத்துவிடுகிறார்கள். இந்த உலகத்திற்கு நீங்கள் வந்தது எதற்காக என்று நீங்கள் புரிந்து கொள்ளவே பல ஆண்டு ஆகும். வாழ்க்கையை உணர்ந்து சிறப்பாக வாழ வேண்டும். அப்படி எல்லாம் பார்த்தால் நான் பல முறை தற்கொலை செய்து இருக்க வேண்டும்.
காசு இல்லாமல் ரோட்டில் நின்றேன் : நான் எடுத்த படம் நஷ்டம் அடைந்து தெருவிற்கு வந்துவிட்டேன், அனைத்து பொருட்களையும் விற்றுவிட்டேன் என் கையில் ஐந்து ரூபாயை தவிர வேறு காசு இல்லை, மவுண்ட் ரோட்டுல வீட்டிற்கு வர ஆட்டோவில் ஏறிவிட்டு, அந்த மீட்டரையே பார்த்துக்கொண்டு இருந்தேன் அந்த மாதிரி நேரத்திலையும் அந்த பிரச்சனையை நான் எதிர்கொண்டேன். அந்த நேரத்தில் என் நண்பன் இரவு 12 மணிக்கு வந்து 150 ரூபாய் கொடுத்து எனக்கு உதவி செய்தார்

பிரச்சனைகளை எதிர்கொள்ளுங்கள் : அந்த பிரச்சனையில் இருந்தும் நான் மீண்டு வந்தேன், பிரச்சனை வந்துவிட்டது என்று நாம் சோர்ந்து போய் தன்னம்பிக்கையை இழந்து விட்டால், நம் உடம்பே நமக்கு எதிரியாக மாறி நம்மை எப்போது முடக்கலாம் என்று பார்த்துக்கொண்டு இருக்கும், நாம் தன்னம்பிக்கையை இழந்தோம் என்றால் நோயை கொடுத்து நம்மை காலி செய்துவிடும். இதனால், யாரும் தன்னம்பிக்கையை விடாமல் இதுவும் கடந்து போகும் என்று அனைத்து பிரச்சனைகளையும் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்றார்.


Click it and Unblock the Notifications











