நீண்ட தாடியுடன்.. பொங்கலுக்குப் பின் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனுக்கு செல்கிறார் சரத்குமார்...
சென்னை: மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் பட ஷூட்டிங்கில் பொங்கலுக்குப் பிறகு நடிகர் சரத்குமார் கலந்துகொள்கிறார்.
கல்கியின் பிரமாண்ட வரலாற்று நாவலான பொன்னியின் செல்வனை படமாக்குகிறார் இயக்குனர் மணிரத்னம். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது.
இதில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வராயா லட்சுமி உட்பட ஏராளமான நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர்.

கீர்த்தி சுரேஷ்
இந்நிலையில், இதில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த கீர்த்தி சுரேஷ் திடீரென விலகினார். ரஜினிகாந்த் படத்தில் நடிப்பதற்காக அவர், இதில் இருந்து விலகியதாகக் கூறப்பட்டது.

படகு பயிற்சி
படத்துக்காக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி படகு ஓட்டி பயிற்சி பெற்றுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஜெயமோகன் வசனம் எழுதுகிறார். இதன் ஷூட்டிங் தாய்லாந்து காடுகளில் நடந்து வருகிறது.

கார்த்தி, ஜெயம் ரவி,
இதில் கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் பங்குகொள்ளும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. அடுத்து விக்ரம் உள்ளிட்ட நடிகர்கள் இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாதம் அங்கு செல்ல இருக்கின்றனர்.

முக்கிய வேடத்தில்
இதற்கிடையே, இந்த படத்தில் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதற்காக அவர் நீண்ட தாடி வளர்த்து வருகிறார். அவர் பொங்கலுக்குப் பிறகு பொன்னியின் செல்வன் பட ஷூட்டிங்கில் இணைகிறார் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











