அயோத்தி கதை என்னுடையதுதான்.. ஆணித்தரமாக சொல்லும் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்
சென்னை: அயோத்தி படத்தின் கதை குறித்து சர்ச்சை உருவாகியிருக்கும் சூழலில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனை நடிகரும், இயக்குநருமான சசிக்குமார் சந்தித்தார்.
சுப்ரமணியபுரம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி கவனம் ஈர்த்தவர் சசிக்குமார். முதல் படமே அனைவரிடமும் பாராட்டைப் பெற்றது. அதனையடுத்து ஈசன் படத்தை இயக்கினார். இந்தப் படமும் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து படங்கள் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் முழுநேர நடிகராகிவிட்டார் சசிக்குமார்.

சசிக்குமார் நடித்திருக்கும் அயோத்தி
தொடர்ந்து ஹீரோவாக நடித்துவரும் சசிக்குமார் சமீபத்தில் நடித்த படம் அயோத்தி. மந்திரமூர்த்தி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தை மதத்தை தாண்டி மனிதத்தை பேசுகிறது என அனைவரும் கொண்டாடிவருகின்றனர். சசிக்குமாரின் நடிப்பையும், படத்தின் மேக்கிங்கையும் பலரும் பாராட்டிவருகின்றனர். மேலும் அயோத்தி படம் சசிக்குமாருக்கு ஒரு கம்பேக் படமாக அமைந்திருக்கிறது என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர்.

அயோத்தி சந்தித்திருக்கும் கதை சர்ச்சை
படம் பெரும் வரவேற்பைப் பெற்றாலும் படத்தை சுற்றி ஒரு சர்ச்சை எழுந்திருக்கிறது. அதாவது இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியானபோது எழுத்தாளர் நரன், தனது வாரணாசி கதையை அப்படியே எடுத்து வைத்திருக்கிறார்கள் என குறிப்பிட்டிருந்தார். அவரைத் தொடர்ந்து மாதவராஜ் என்ற எழுத்தாளரும் நான் எழுதிய கதையை அயோத்தி படமாக எடுத்து வைத்திருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை முன் வைத்தார். ஆனால், அயோத்தி படத்தின் கதை தன்னுடையது என எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கூறிவருகிறார். இப்படி இந்தக் கதைக்கு மூன்று எழுத்தாளர்கள் சொந்தம் கொண்டாடிவருகிறார்கள்.

கதை என்னுடையதுதான் - எஸ்.ராமகிருஷ்ணன் ஆணித்தரம்
இந்தச் சூழலில் நடிகர் சசிக்குமார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன சந்தித்தார். இதுகுறித்து எஸ்.ராமகிருஷ்ணன் தனது முகநூல் பக்கத்தில், "அயோத்தி திரைப்படம்
சிறந்த இயக்குநரும் நடிகருமான சசிகுமார் இன்று சாலிகிராமத்திலுள்ள எனது அலுவலகம் வந்திருந்தார். நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அவரது நடிப்பில் இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் நேற்று வெளியாகியுள்ள அயோத்தி திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தின் கதை என்னுடையது. திரைப்படத்திற்காகவே இதனை எழுதினேன்.
படம் மிகுந்த உணர்ச்சிப் பூர்வமான வரவேற்பை பெற்றுள்ளது.
திரையரங்கினை விட்டு வெளியே வரும் பலரும் கண்ணீர் மல்கப் பாராட்டுகிறார்கள். ஊடகங்கள் படத்தைக் கொண்டாடுகின்றன. திரையுலகினை சேர்ந்த பலரும் எனக்குத் தொலைபேசியில் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. அயோத்தி திரைப்படத்தின் வெற்றிக்கு சசிகுமார் காட்டிய தீவிர அக்கறையும் ஈடுபாடுமே முக்கியக் காரணம். கதையை மட்டுமே முதன்மைப்படுத்தித் தனது கதாபாத்திரத்தைச் சரியாக உள்வாங்கி அவர் திறம்பட நடித்துள்ளார்.
அவரது ComeBack film என மக்கள் கொண்டாடுகிறார்கள். இயக்குநர் மந்திரமூர்த்தி உணர்வுப் பூர்வமாகப் படத்தை உருவாக்கியது பாராட்டுக்குரியது. தேர்ந்த நடிகர்கள். சிறந்த இசை, கச்சிதமான படத்தொகுப்பு எனப் படம் நன்றாக உருவாக்கப்பட்டுள்ளது. நல்லதொரு படத்தை உருவாக்கிய தயாரிப்பாளர் டிரைடன்ட் ரவீந்திரனை மனம் நிறைந்து பாராட்டுகிறேன். இன்று அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளச் சசிகுமார் வந்திருந்தார். அவருடன் இணைந்து இன்னொரு திரைப்படம் எழுதுகிறேன். புதிய படத்திற்கான கதை குறித்துப் பேசினோம்" என குறிப்பிட்டுள்ளார்.

எழுத்தாளர் நரன் வைத்திருக்கும் குற்றச்சாட்டு
முன்னதாக, நரன் தனது முகநூல் பக்கத்தில், "கடந்த 8 நாட்களாக என் மகள் உடல்நலக் குறைவின் காரணமாக சென்னை சிம்ஸில் அனுமதித்த காரணத்தால் ( அதன் பின் தொடர்ச்சியான பயணமும்...) இதில் பெரிதாகக் கவனம் ஏதும் செலுத்தவில்லை. நிறைய நண்பர்கள் அந்த Trailer ஐப் பார்த்துவிட்டு 'வாரணாசி' கதையைப் போலவே இருப்பதாகச் சொன்னார்கள். பார்த்துவிட்டு எனக்கும் அப்படித்தான் தோன்றியது. தயாரிப்பாளரிடம் ஃபோன் செய்து கேட்டபோது அவர் இயக்குநரின் எண் அனுப்பிப் பேச சொன்னார். நானும் அவரிடம் என் தரப்பு சந்தேகத்தைச் சொல்லிப் படத்தைப் பார்க்க அனுமதிக்க முடியுமா ? என்று கேட்டதற்கு அவர் படத்தைக் காட்ட முடியாதென மறுத்து விட்டார்.
வேண்டுமானால் கேஸ் போட்டுக் கொள்ளுங்கள் என்றும் சொல்லி விட்டார். அதன் பிறகுதான் கதை எழுத்தாளர் எஸ். ராவினுடையது என்று சொன்னார்கள். நான் அவருக்கும் பேசினேன். அவர் இது தனது கதை என்றும், பலவருடங்களுக்கு முன்பே அதை எழுதியதாகவும் சொன்னார்.
'அந்தக் கதை வாசிக்கக் கிடைக்குமா ?' என்று கேட்டதற்கு, 'சினிமாவிற்கான கதையை நான் எப்போதும் எழுதுவதில்லை. அதைச் சொல்ல மட்டுமே செய்வேன்' என்று சொன்னார். (தயாரிப்பாளர் தன்னிடம் எழுத்தாளர் 2 பக்கக் கதை கொடுத்ததாகவும் அதற்கு 8 லட்சம் பணம் கொடுத்ததாகவும் சொல்லி விட்டார். எழுத்தாளர் . மாதவராஜ் அந்த 2 பக்கத்தை வாங்கிப் பார்த்தால் தெரியும்).
நான் அதன் பின் என் மகளின் ஆஸ்பத்திரி காரியங்களைப் பார்க்கப் போய்விட்டேன் .
எனது 'வாரணாசி' கதையை வாங்கியிருக்கும் முக்கியமான இயக்குநரும் இந்தப் பிரச்சனையை அதன் போக்கில் விட்டு விடச் சொல்லி விட்டார். அதன் பின் நிறைய பத்திரிகை நண்பர்கள் இது பற்றிக் கேட்ட போதும் நான் இந்தப் படம் குறித்து விவாதிக்க மறுத்து விட்டேன். இப்போது படம் வெளியாகியிருக்கிறது. பார்த்தாகிவிட்டது . எனது கதையின் சில காட்சிகளும் கதை மாந்தருக்கான Character Designs ம் அதில் அப்படியே இருக்கிறது. இரண்டு கதைக்கும் நிறைய பொதுத் தன்மைகள் இருக்கின்றன என்றே வைத்துக் கொள்ளலாம். ஆனால் எழுத்தாளர் மாதவராஜின் கதை 75 சதவிகிதம் அப்படியே இருக்கிறது.
என்னை விடுங்கள். எழுத்தாளர் மாதவராஜ்க்கு, எஸ்.ரா செய்தது மிகப் பெரிய துரோகம். சக எழுத்தாளரின் படைப்பை எந்த மனக் குறுகுறுப்பும் இல்லாமல் திருடி எடுத்துக் கையாண்டிருக்கிறார்.
பெரிய எழுத்தாளர் என்ற போர்வையில் யாரும் அவரை ( எஸ் .ரா ) ஒன்றும் சொல்ல மாட்டார்கள் . அவரிடம் எனக்கு இந்த அனுபவம் ஒன்றும் புதிதல்ல" என குறிப்பிட்டிருந்தார்.

எழுத்தாளர் மாதவராஜ் வைத்திருக்கும் குற்றச்சாட்டு
முன்னதாக, மாதவராஜ் தனது முகநூல் பக்கத்தில் அயோத்தி படம் நேற்று பார்த்து விட்டேன். தீராத பக்கங்களில் - 2011ல் எழுதியதுதான் மூலக்கதை. அப்படியே இருக்கிறது.
திரைக்கதையில் மாற்றம் செய்திருக்கிறார்கள். பெயர்களில் மாற்றங்கள் இருக்கின்றன. பீகாரில் இருந்து வந்தவர்களாக குறிப்பிட்டு இருந்தேன். அதை அயோத்தியாக மாற்றி இருக்கிறார்கள். ஒரு கிராம வங்கி ஊழியராக பாதிக்கப்பட்டவரைச் சொல்லி இருந்தேன். சடங்கு சம்பிரதாயங்களில் ஊறிய ஒரு சங்கியாக அந்த வட இந்திய மனிதரை காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். இரண்டு மகள்களும், ஒரு மகனும் என பதிவு செய்திருந்தேன்.
ஒரு மகளும், மகனும் என காட்டி இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவிய தமிழ்நாட்டு மனிதர்களாக எங்கள் வங்கியின் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த சாமுவேல் ஜோதிக்குமாரையும், சுரேஷ் பாபுவையும் குறிப்பிட்டு இருந்தேன். இதில் விபத்துக்குள்ளான கார் டிரைவரின் நண்பனான சசிக்குமாரும் இன்னொருவரும் உதவுவதாக சித்தரித்து இருக்கிறார்கள். ரம்ஜான் பண்டிகை மற்றும் மங்காத்தா பட ரிலீசை ஒட்டிய ரசிகர்களின் கொண்டாட்டங்களாய் வெளியுலகம் இருந்ததை குறிப்பிட்டு இருந்தேன். இதில் தீபாவளி கொண்டாட்டங்களாய் காட்டி இருக்கிறார்கள்.
ராமேஸ்வரம் வந்த வடநாட்டு குடும்பம் கார் விபத்தில் சிக்குவது, அந்த குழந்தைகளின் அம்மா இறந்துபோவது, நிலமும் மொழியும் வேறான மதுரையிலிருந்து அந்த குடும்பத்தை கடும் சிரமங்களுக்கு இடையே விமானத்தில் எப்படி அனுப்பி வைத்தனர் என்னும் மையக்கதை அப்படியே இருக்கிறது.
'தங்களைப் பிடித்து உலுக்கி, கட்டியழுது, அவர்களின் கைகளையும், உடலையும் தாங்கிப் பிடித்து, கூடவே இருந்து ஆதரவு தரக்கூடிய சொந்த மனிதர்களும், மண்ணுமே அவர்களுக்கு அப்போது தேவை' என்னும் வரிகளை அப்படியே காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.
பதிவின் இறுதியில், உதவி செய்த சாமுவேல் ஜோதிக்குமாரையும், சுரேஷ் பாபுவையும், கையெடுத்துக் கும்பிட்டு, "நீங்க எல்லாம் யார் சார். எங்கிருந்து வந்தீங்க சார். எங்களுக்கு ஏன் சார் ஹெல்ப் பண்ணனும் ? " என அந்த வடநாட்டு மனிதர் பேசுவதாக எழுதியிருந்தேன். மனிதாபிமானத்தின் மகத்துவத்தை அப்படி உணர்த்தி இருந்தேன். படத்தில் "தம்பி, உங்க பேர் என்ன?' என கேட்பார். உதவி செய்த சசிகுமார், "மாலிக்' என சொல்வார்.
படத்தை இன்னும் சிறப்பாகவும், நேர்த்தியாகவும் எடுத்து இருக்க முடியும் என்றாலும் - நல்ல சினிமா. நிச்சயம் பாராட்டலாம். வரவேற்கலாம். ஆனால் படத்திற்கு நான் எழுதிய பதிவே அச்சாணி என்பதில் கொஞ்சம் கூட சந்தேகம் இல்லை" என நீண்ட பதிவை வெளியிட்டிருக்கிறார். இப்படி நரனும், மாதவ்ராஜும் இந்தக் கதை எஸ்.ராவுடையது இல்லை என தொடர்ந்து கூறிவரும் சூழலில் அயோத்தி கதை என்னுடையதுதான் என ஆணித்தரமாக ராமகிருஷ்ணன் செய்திருக்கும் பதிவு இந்த விவகாரத்தில் மேலும் சர்ச்சையை கூட்டியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











