Sivakarthikeyan - சிவகார்த்திகேயன் ஏமாற்றிவிட்டார்.. பரபரப்பை கிளப்பும் மூத்த நடிகர்
சென்னை: Sivakarthikeyan (சிவகார்த்திகேயன்) சிவகார்த்திகேயன் தன்னை ஏமாற்றிவிட்டதாக மூத்த நடிகர் செம்புலி ஜெகன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.
சின்னத்திரையில் நடந்த ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக பங்கேற்று பிறகு வெற்றியாளராக மாறி தொகுப்பாளராக ஜொலித்தவர் சிவகார்த்திகேயன். இவரது லுக்கையும், டைமிங்கையும் பார்த்த தனுஷ் தனது 3 படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் மெரினா படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இருப்பினும் அடுத்தடுத்து பட வாய்ப்பு கிடைத்தது.

சிறுவர், சிறுமிகளை கவர்ந்த சிவா: தொடர்ந்து அவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், மான் கராத்தே உள்ளிட்ட படங்கள் ஹிட்டாக சிறுவர்களையும், சிறுமிகளையும் கவர்ந்த ஹீரோவாக வளர்ந்தார் சிவா. கமர்ஷியல் பாதையை தேர்ந்தெடுத்து அதில் தற்போது தெளிவாக பயணம் செய்துகொண்டிருக்கிறார். மேலும் அவர் நடித்த டாக்டர், டான் ஆகிய படங்கள் 100 கோடி ரூபாயை வசூலித்து சிவகார்த்திகேயனை டாப் 10 ஹீரோக்கள் வரிசையில் நிறுத்தியது.
அடிவாங்கிய பிரின்ஸ்: இரண்டு படங்கள் தொடர்ந்து 100 கோடி ரூபாய் வசூலித்த உற்சாகத்தில் பிரின்ஸ் படத்தில் நடித்தார். தெலுங்கிலும் தனது மார்க்கெட்டை உயர்த்தலாம் என்ற நோக்கத்தில் நடித்த பிரின்ஸ் படம் பெரும் தோல்வி அடைந்தது. அவரது கரியரில் சீமராஜா என்ற மிகப்பெரிய தோல்வி படத்துக்கு பிறகு பிரின்ஸ் மாபெரும் தோல்வி படமாக அமைந்தது. தோல்வியோடு மட்டுமின்றி ஒரு வாரத்திலேயே திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டது.
காப்பாற்றுமா மாவீரன்: பிரின்ஸ் தோல்விக்கு பிறகு மடோன் அஷ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இதில் ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்திருக்கிறார். முதலில் ஆகஸ்ட் மாதம் வெளியாவதாக இருந்த மாவீரன்; ஜெயிலர் வருகையால் ஒரு மாதம் முன்னதாகவே ஜூலை 14ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. தற்போது கமல் ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் புதிய படத்தில் நடித்துவருகிறார் சிவகார்த்திகேயன்.
மூத்த நடிகர் குற்றச்சாட்டு: இந்நிலையில் 80,90களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த செம்புலி ஜெகன் சிவகார்த்திகேயன் மீது குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், "ஒரு படம் இயக்குவதற்காக முதலில் சிவகார்த்திகேயனை அணுகினேன். அப்போது அவர் அது இது எது நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்தார். அவரை அழைத்து மேக்கப் டெஸ்ட் இருக்கிறது. உடனே செட்டுக்கு வர வேண்டும் என அழைத்தேன்.

நிச்சயதார்த்தம்: ஆனால் நான் அழைத்த நாளில்தான் அவருக்கு திருச்சியில் நிச்சயதார்த்தம் இருந்தது. அதனை முடித்துவிட்டு மாலை 3 மணிக்கு கிளம்பி செட்டுக்கு வந்துவிட்டார். மேக்கப் டெஸ்ட்டை முடித்துவிட்டு 15 நாள்கள் படப்பிடிப்பும் நடத்தப்பட்டது. ஆனால் அந்தப் படம் அப்படியே நின்றுவிட்டது. இதற்கிடையே அவருக்கு 30 லட்சம் ரூபாய் கொடுத்தேன்.
அவரும் எதுவும் சொல்லாமல் கிளம்பிவிட்டார். அப்போதிலிருந்து அவர் என்னிடம் பேசுவது இல்லை. நானும் பேசுவது இல்லை. இதுவரைக்கும் ஒரு ஃபோன்கூட செய்யவில்லை" என்றார். அவரது குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











