Sevvazhai Rasu Passes Away: 'பருத்திவீரன்' புகழ் செவ்வாழை ராசு காலமானார்.. பிரபலங்கள், ரசிகர்கள் அஞ்சலி!
சென்னை: பல திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராகவும் காமெடி நடிகராகவும் நடித்த செவ்வாழை ராசு உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 71. தேனி மாவட்டத்தை சேர்ந்த செவ்வாழை ராசு பல தமிழ் திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராகவும் காமெடி நடிகராகவும் நடித்து வந்தார்.

அமீர் இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக அறிமுகமான பருத்திவீரன் திரைப்படத்தில் செவ்வாழை என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ்பெற்ற செவ்வாழை ராசு பாரதிராஜாவின் கிழக்குச் சீமையிலே படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். மைனா, கந்தசாமி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றுள்ளார்.
செவ்வாழை ராசு காலமானார்:
இந்நிலையில் சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி 70 வயதில் காலமானார். இவருக்கு மூன்று மகன்கள் இருக்கின்றனர்.
இன்னும் சற்று நேரத்தில் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் உள்ள கோரையூத்து கிராமத்திற்கு உடல் எடுத்து வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
செவ்வாழை ராசு என்கிற பெயர் வரக் காரணம்:
தேனியை சேர்ந்த இவரது பெயர் ராசு மட்டும் தானாம். பிறந்த போது சிவப்பாக இருந்த நிலையில், பலரும் இவரை செவ்வாழை என அடைமொழி வைத்து அழைக்க ஆரம்பிக்க, சினிமாவில் வெறும் ராசுவாக அல்லாமல் செவ்வாழை, செவ்வாழை ராசுவென்றே அழைக்கப்பட்டு வருகிறேன் என பழைய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
நடிகர் விஜய்யின் வேலாயுதம் படம் தனக்கு 100வது படம் என்றும் 140 படங்களில் இவர் நடித்துள்ளதாகவும் அந்த பேட்டியில் தெரிவித்து இருந்தார். உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த செவ்வாழை ராசு இன்று இயற்கை எய்திய நிலையில், அவரது குடும்பத்தினரும் திரையுலக நண்பர்களும் ரசிகர்களும் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் செவ்வாழை ராசு காமெடியாக நடித்த காட்சிகளை ஷேர் செய்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பணத்துக்காக நடிக்க வரவில்லை என்றும் பொழுதுபோக்கிற்காகவே நடிக்க வந்தேன் என்றும் கோடி ரூபாய் கொடுத்தாலும் நெகட்டிவ் ரோலில் நடிக்க மாட்டேன் என்பதையும் கொள்கையாக வைத்து நடித்து வந்தவர் செவ்வாழை ராசு என அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











