Yogi babu: CSKவை தொடர்ந்து KKR.. யோகிபாபுவிற்கு ஓகே சொன்ன ஷாருக்கான்!
சென்னை: நடிகர் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் நடிப்பில் வரும் செப்டம்பர் 7ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது ஜவான் படம்.
ஷாருக்கான் -அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள இந்தப் படம் உலகளவில் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது.
கடந்த இரு மாதங்களுக்கு முன்பே இந்தப் படத்தின் ரிலீஸ் திட்டமிடப்பட்ட நிலையில், சூட்டிங் நிறைவடையாததால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது.

கேகேஆர் அணியில் யோகிபாபுவை சேர்த்துக் கொள்ள ஷாருக்கான் ஒப்புதல்: நடிகர் ஷாருக்கான் பாலிவுட் பாட்ஷாவாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். இவரது பல படங்கள் இவருக்கே போட்டியாக அமைந்தவை. ஒவ்வொரு படமும் இவரது மற்ற படங்களின் கலெக்ஷனை முறியடித்து மற்ற படங்களுக்கு சவாலாக அமைந்தவை. தன்னுடைய சொந்த பிரச்சினைகள் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக ஷாருக்கானின் படங்கள் எதுவும் ரிலீசாகாத நிலையில் கடந்த ஜனவரியில் இவரது பதான் படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.
ஷாருக்கான், தீபிகா படுகோன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான பதான் படம் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து 1000 கோடி ரூபாய் வசூலை தாண்டி சாதனை செய்தது. இந்நிலையில் பதானை தொடர்ந்து இந்த ஆண்டிலேயே ஷாருக்கானின் இரண்டாவது படம் ரிலீசாகவுள்ளது. நடிகர் அட்லியுடன் ஷாருக்கான் கூட்டணி அமைத்து வரும் செப்டம்பர் 7ம் தேதி வெளியாகவுள்ளது ஜவான் படம். இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் படத்தின் நடிகர், நடிகைகள், இயக்குநர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சியில் பேசிய யோகிபாபு, அட்லியுடன் தான் இணைந்துள்ள ஜவான் படம் குறித்து மிகுந்த உற்சாகம் தெரிவித்துள்ளார். இந்தி கற்றது குறித்து பேசிய அவர், கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு ஷாருக்கானுடன் தான் பேசிய இந்தி டயலாக்கை பேசிக்காட்டி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். தொடர்ந்து அட்லியுடன் தான் இந்தப் படத்தில் இணைந்தது குறித்தும் பேசினார்.
தெறி படத்தில் தன்னுடைய போர்ஷன்கள் கட் செய்யப்பட்ட நிலையில், ஜவான் படத்திற்காக தன்னை அட்லி கூப்பிட்டதாகவும் எதைப்பற்றியும் பேசாமல் தான் படத்தில் நடிக்க சென்றதாகவும் யோகி பாபு கூறினார். தமிழில் ஆளுமையான இயக்குநராக இருந்த அட்லி, தற்போது பாலிவுட்டிலும் தனது ஆளுமையை நிரூபித்துள்ளதாக யோகிபாபு கூறினார். விரைவில் அவர் ஹாலிவுட்டிற்கும் போவார் என்றும் கூறினார்.

முன்னதாக தோனியின் தயாரிப்பில் வெளியான LGM படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட யோகிபாபுவிற்கு, அந்தப் படத்தின் தயாரிப்பாளர் தோனி, சிஎஸ்கேவில் விளையாட வாய்ப்பளிப்பதாக கூறியிருந்தார். அந்த வகையில், தற்போது கேகேஆர் அணியில் யோகிபாபுவிற்கு விளையாட வாய்ப்பளிப்பீர்களா என நிகழ்ச்சியின் ஆங்கர் பாவனா, ஷாருக்கானிடம் கேட்க, உடனடியாக உற்சாகமாக தலையாட்டினார் ஷாருக்கான்.
இதையடுத்து தொடர்ந்து பேசிய யோகிபாபு, பாவனாவிடம் என்னம்மா, என்னை கேட்காமல் நீயே ஷாருக்கானிடம் அக்ரிமெண்ட் போடுகிறாயே என்று கேட்க அந்த இடமே மிகுந்த கரகோஷத்திற்கு உள்ளானது. இதையடுத்து யோகிபாபுவின் மைண்ட் வாய்ஸ் கேட்டே தான் ஷாருக்கானிடம் இந்த கோரிக்கையை வைத்ததாக பாவனா கூறினார். தொடர்ந்து குறிப்பாக இசையமைப்பாளர் அனிருத்திற்கும் விஜய் சேதுபதிக்கும் தன்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொண்டார் யோகிபாபு.


Click it and Unblock the Notifications











