கனவு கண்டேன்.. கல்யாணம் முடிச்சேன்.. கனவுல மரியா எப்படி வந்தாங்க தெரியுமா?.. ஷாரிக் சீக்ரெட்!
சென்னை: ரியாஸ்கான் -உமா ரியாஸின் மூத்த மகன் ஷாரிக் ஹாசனுக்கு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. மரியா ஜெனிஃபரை காதலித்து திருமணம் செய்துள்ளார் ஷாரிக். மரியாவிற்கு 9 வயதில் ஜாரா என்ற மகள் உள்ள நிலையில், அவரது அப்பாவாக இருப்பதில் அதிக விருப்பம் உள்ளதாக ஷாரிக் உற்சாகம் தெரிவித்துள்ளார்.
முதன்முதலில் ஜிம்மில்தான் மரியாவை பார்த்ததாகவும், அவரைப்பார்த்து தான் சிநேகமாக சிரித்த நிலையில், அவர் கண்டுக்கொள்ளாமல் போனது, கடுப்படித்ததாகவும் தொடர்ந்து அவர்தான் தன்னுடைய மனைவி என்று தான் முடிவெடுத்ததாகவும் ஷாரிக் தனது பேட்டியில் கூறியுள்ளார். அடுத்தடுத்து யூடியூப் சேனல்களுக்கு ஷாரிக் மற்றும் மரியா இருவரும் இணைந்து பேட்டிகளை கொடுத்து வருகின்றனர்.

நடிகர் ஷாரிக் ஹாசன்: நடிகர் ரியாஸ்கான் மற்றும் அவரது மனைவி உமா ரியாஸ் இருவரும் காதலித்து திருமணம் செய்தவர்கள். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ள நிலையில், இருவரும் தொடர்ந்து சினிமா, சீரியல்கள், சின்னத்திரை நிகழ்ச்சிகள் என மிகவும் பிசியாக காணப்படுகின்றனர். இவர்களின் மூத்த மகன் ஷாரிக்கிற்கு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் நடந்தது. மிகவும் விமரிசையாக நடந்த இந்த திருமணத்தில் சினிமா மற்றும் சின்னத்திரை வட்டாரங்களை சேர்ந்த பல பிரபலங்களும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். மணமகள் மரியாவை ஷாரிக், நீண்ட நாட்களாக காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
ஷாரிக் & மரியா காதல்: மரியாவிற்கு 9 வயதில் ஜாரா என்ற மகள் உள்ள நிலையில், அவர் தன்னை அப்பா என்று கூப்பிட வேண்டும் என்று தான் ஏங்கியதாகவும், அவரும் இயல்பாகவே தன்னை அப்பா என்று கூப்பிட்டதாகவும் ஷாரிக் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். முதன்முதலில் ஜிம்மில் வைத்து தான் மரியாவை சந்தித்ததாகவும் அவரது முதல் சந்திப்பிலேயே அவரை மிகவும் பிடித்துவிட்டதாகவும் ஆனால் அவர் தன்னை கண்டுக் கொள்ளாமல் விலகி சென்றதாகவும் ஷாரிக் கூறியுள்ளார். இதனால் அவர்தான் தன்னுடைய வாழ்க்கை துணை என்பதில் தான் தீவிரமானதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஷாரிக் & மரியா திருமணம்: தொடர்ந்து பெற்றோர் சம்மதத்துடன் தான் மரியாவை திருமணம் செய்துக் கொண்டதாகவும் மரியாவை காட்டிலும் ஜாராவிடம் தன்னுடைய பெற்றோர் மிகுந்த அன்புடனும் பாசத்துடனும் உள்ளதாகவும் ஷாரிக் மேலும் கூறியுள்ளார். மேலும் மரியாவை பார்த்துவிட்டு சென்றபின்பு தனக்கு ஒரு கனவு வந்ததாகவும் கல்யாண உடையில் தானும் மரியாவும் வலம் வருவதாகவும் தாங்களும் தங்களை சுற்றிலும் அனைவரும் அதே வெள்ளை நிற உடையில் இருப்பதாக அந்த கனவு தனக்கு சிலிர்ப்பை ஏற்படுத்தியதாகவும் இதை போய் அப்படியே மரியாவிடம் கூறியதாகவும் அவர் இதை விளையாட்டாக எடுத்துக் கொண்டதாகவும் ஷாரிக் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கனவு + காதல் + திருமணம்: என்ன ஜோக் பண்றீங்களான்னு மரியா தன்னிடம் கேட்டதாகவும் ஷாரிக் கூறியுள்ளார். இதையடுத்து மரியா வெளியூருக்கு செல்ல முயன்றதாகவும் அப்போது, தானும் கூடவே வருவேன்னு அடம்பிடித்து உடன்சென்றதாகவும் ஷாரிக் தெரிவித்துள்ளார். இதனிடையே, தன்னிடம் ஷாரிக் ஐ லவ் யூ என்று கூறவே இல்லை என்றும் எடுத்தவுடன் திருமணம் செய்வதை பற்றியே அவர் பேசியதாகவும் வாழ்க்கை முழுவதும் தன்னுடன் இருக்க விரும்புவதாக ஷாரிக் தெரிவித்ததாகவும் மரியா தங்களின் காதல் கதையை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் தன்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் மறைந்த நிலையில், உடன் ஆதரவாக இருந்த ஷாரிக்கின் கையை பிடித்து தான் அவரை காதலிப்பதாக அழுதபடி கூறியதாகவும் மரியா தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











