இதை யார்கிட்ட கேட்கணுமோ அங்க கேளுங்க.. என்கிட்ட வந்து ஏன் கேட்குறீங்க: நிருபரிடம் சீறிய சித்தார்த்!
பத்திரிகையாளர் ஒருவரிடம் சித்தார்த் கோபமாக பேசியது தி லயன் பட விழாவில் சலசலப்பை ஏற்படுத்தியது.
சென்னை: தி லயன் பட செய்தியாளர் சந்திப்பின் போது, நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு நடிகர் சித்தார்த் கோபமாக பதிலளித்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
தி லயன் கிங் படம் வரும் 19ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகிறது. இப்படத்தின் தமிழ் பதிப்பில், சிம்பா கதாபாத்திரத்திற்கு நடிகர் சித்தார்த்தும், வில்லன் ஸ்கார் கதாபாத்திரத்திற்கு அரவிந்த்சாமியும் குரல் கொடுத்துள்ளனர். ரோபோ சங்கர், சிங்கம்புலி உள்ளிட்டோரும் மற்ற மிருகங்களுக்கு குரல் கொடுத்துள்ளனர்.
படத்தை விளம்பரப்படுத்துவதற்காக நடிகர்கள் சித்தார்த், அரவிந்த்சாமி, ரோபோ சங்கர், சிங்கம்புலி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது செய்தியாளர்கள் கேட்ட ஒரு கேள்விக்கு நடிகர் சித்தார்த் கோபமாக பதிலளித்தார்.

ஹாலிவுட் தொழில்நுட்பம்:
செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது, "தி லயன் கிங் படத்தில் சிம்பா கதாபாத்திரத்திற்கு குரல் கொடுக்க அதன் பட்ஜெட் தான் காரணம். தமிழில் இப்படி ஒரு படம் வருவதற்கு இன்னும் 25 ஆண்டுகள் ஆகும். அந்த அளவுக்கு தொழில்நுட்பத்தில் ஹாலிவுட் வளர்ந்து இருக்கிறது.

கிராபிக்ஸ் உதவி:
மிருகங்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அதன் உரிமைகளுக்காக நிறைய குரல் கொடுத்திருக்கிறேன். தற்போது விலங்குகளை வைத்து படம் எடுப்பது சிரமமாக தான் உள்ளது. ஆனால் அதுவும் நல்லது தான். கிராபிக்ஸ் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இன்றைய காலகட்டத்தில் மிருங்களை இம்சிக்காமல் படம் எடுக்கலாம்", என சித்தார் கூறினார்.

நடிகர்களின் நிலை:
அதன்பின்னர் செய்தியாளர் ஒருவர் சித்தார்த்திடம், "ஒரு ஆங்கிலப்படத்துக்கு விளம்பரம் செய்ய அனைத்து நடிகர்களும் வருகிறீர்கள். ஆனால் பல கோடி ரூபாய் செலவு செய்து தமிழிலும் படம் எடுக்கிறார்கள். ஆனால் நிறைய ஹீரோக்கள் அவர்களது படங்களை விளம்பரப்படுத்த வருவதில்லை. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" என கேள்வி கேட்டார்.

கோபப்பட்ட சித்தார்த்:
செய்தியாளரின் இந்த கேள்வியை கேட்டு சித்தார்த் கோபமானார். "நான் நடிக்கும் எல்லாப் படத்து விளம்பர நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டுதான் இருக்கிறேன். இந்த கேள்வியை நீங்கள் என்னிடம் கேட்கக்கூடாது. யாரிடம் கேட்க வேண்டுமோ அவர்களிடம் கேட்க தவறிவிடுகிறீர்கள்", என கோபமாக பதில் அளித்தார். இதனால் நிகழ்ச்சியில் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து செய்தியாளர் சந்திப்பு முடிக்கப்பட்டுவிட்டது.


Click it and Unblock the Notifications











