இந்தியன் 2 சாதனை படைக்கும்.. டிரைலர் வெளியீட்டு விழாவில் சித்தார்த் பேச்சு!
சென்னை: இந்தியன் 2 படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில், கமல்ஹாசன், சித்தார்த், அனிருத், இயக்குநர் ஷங்கர், பாபி சிம்ஹா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய சித்தார்த், இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு முக்கியமான திரைப்படம், இப்படம் நிச்சயம் வரலாறு படைக்கும் என்றார்.
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 96ஆம் ஆண்டு வெளியாகி திரைப்படம் இந்தியன். இப்படத்தில் கமல்ஹாசன், மனீஷா கொய்ராலா, கந்தூரி, நாசர், சுகன்யா, கவுண்டமணி, செந்தில், மனோரமா என பலர் நடித்திருந்தனர். இந்த படத்தை சினிமா பிரியர்கள் அனைவரும் கொண்டாடினார்கள். இப்படம் தியேட்டரில் மகத்தான வசூலை பெற்றது. இதையடுத்து, இப்படம் சுமார் 27 ஆண்டுகளுக்கு பின் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என 2018ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு, 2019ம் ஆண்டு முதல் படப்பிடிப்பு தொடங்கியது.

கிரேன் விபத்து: இப்படத்தின் படப்பிடிப்பு 2020ம் ஆண்டு நடந்த கொண்டிருந்த போது, கிரேன் சரிந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 2 பேர் உயிரிழந்தனர். இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதையடுத்து, கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. பின் ஷங்கருக்கும் தயாரிப்பு நிறுவனத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டு அது நீதிமன்றம் வரை சென்று ஒரு கட்டத்தில் இந்தியன் 2 திரைப்படம் கைவிடும் நிலைக்கே சென்றுவிட்டது. இதையடுத்து, உதயநிதி ஸ்டாலின் இந்தியன் 2 படத்தை கையில் எடுத்து தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரிப்பதாக அறிவித்ததை அடுத்து படத்தின் வேலைகள் தொடங்கப்பட்டு, கிட்டத்தட்ட 6 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு இந்தியன் 2 படம் ஜூலை 12ந் தேதி படம் வெளியாக உள்ளது.
பிடித்தமான படம்: இந்நிலையில், சென்னையில் இன்று இந்தியன் 2 படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பேசி நடிகர் சித்தார்த், இயக்குனர் ஷங்கர் சார், 21 வருஷத்துக்கு முன்னாடி பாய்ஸ் படத்தின் மூலம் எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்தார். இப்போது மீண்டும் என் மீது நம்பிக்கை வைத்து இந்தியன் 2 படத்தில் அதுவும் கமல்ஹாசன் உடன் நடிக்க வாய்ப்பு கொடுத்து இருக்கிறார். இதற்காக அவருக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறன்.
இந்தியன் திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்தமான திரைப்படம். எனக்கு கமல்ஹாசன் ஆக வேண்டும் என்பது தான் ஆசை. இந்தியன் 2 திரைப்படம், இன்றைய காலகட்டத்திற்கு நம் அனைவருக்கும் ஒரு முக்கியமான படம். குறிச்சி வச்சிக்கோங்க, தாத்தா வராரு கதறவிட போறாரு. இப்படம் நிச்சயம் வரலாறு படைக்கும் என்றார் நடிகர் சித்தார்த். இந்த விழாவில் கமல், சித்தார்த், அனிருத், பாபி சிம்ஹா, இயக்குநர் சங்கர் மற்றும் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications











