பீப் பாடல் சர்ச்சை.. நடிகர் சிம்புவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம்!
சென்னை: பீப் பாடல் விவகாரம் தொடர்பாக நடிகர் சிம்புவுக்கு எதிராக கோவை காவல்துறையினர் பதிவு செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
கடந்த 2015ம் ஆண்டில் நடிகர் சிம்பு பெண்களை பற்றி ஆபாசமாக பாடியதாக கூறி இணையத்தில் பீப் சாங் ஒன்று வெளியானது.
அந்த பாடலுக்கு எதிராக மகளிர் அமைப்புகள் மற்றும் பலர் கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தனர்.

பீப் சாங் சர்ச்சை
கடந்த 2015ம் ஆண்டு இணையத்தில் லீக்கான பீப் பாடல் பெரும் சர்ச்சையை கிளப்பியது. அந்த பாடலை சிம்பு எழுதி பாடினார் என்றும் அந்த பாடலுக்கு அனிருத் இசையமைத்தார் என்றும் இரு வழக்குகள் தொடரப்பட்டன. இந்நிலையில், அதில் ஒரு வழக்கில் இருந்து நடிகர் சிம்பு விடுதலை ஆகி உள்ளார்.

எதிர்ப்பு
இதனை தொடர்ந்து பாடல் படிய சிம்பு மற்றும் இசையமைத்த அனிருத் ஆகியோருக்கு எதிராக பெண்கள் அமைப்புகள் போராட்டம் நடத்தின. இருவரது புகைப்படங்களையும் செருப்பால் அடித்து தீயில் போட்டு கொளுத்தி தங்களின் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சிம்பு, அனிருத்துக்கு எதிராக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

சிம்பு மீது வழக்கு
இந்த புகாரின் அடிப்படையில் கோவை ரேஸ் கோர்ஸ் மற்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவுசெய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் தனக்கு எதிரான இரு வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி நடிகர் சிம்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

வழக்கு ரத்து
இந்த மனு நீதிபதி சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, கோவை மாஸிஸ்திரேட்டின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யபட்டது. விசாரணையில் நடிகர் சிம்புவுக்கு எதிரான புகாருக்கு ஆதாரம் இல்லை என்பதால் கோவை ரேஸ் கோர்ஸில் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

ஒரு வாரத்தில்
மேலும், நடிகர் சிம்பு மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கு தொடர்பாக காவல் துறை ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைத்தார். சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கம் நடிகர் சிம்பு மீது விதித்திருந்த ரெட் கார்டை நீக்கி அவரை மீண்டும் நடிக்க அனுமதித்த நிலையில், தற்போது பீப் சாங் சர்ச்சையில் இருந்தும் ஃப்ரீ ஆகி உள்ளார் சிம்பு.


Click it and Unblock the Notifications











