சூப்பர்ஸ்டார் முதல் சிம்பு வரை.. அனைவரையும் கவர்ந்த மாரிமுத்து.. குத்து டைம்ல நடந்த அந்த சம்பவம்!
சென்னை: இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் நடிகர் சிம்பு வரை சினிமா பிரபலங்கள் பலரும் தங்கள் ஆழ்ந்த இரங்கல்களை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
பரியேறும் பெருமாள் இயக்குநர் மாரி செல்வராஜ் நேரில் சென்று மாரிமுத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் நடிகர் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் மாரிமுத்துவின் மரணம் தன்னை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியதாக பதிவிட்டுள்ளார். மேலும் மாரிமுத்து உடன் பணியாற்றிய ஞாபகங்கள் எல்லாம் அப்படியே மலரும் நினைவுகளாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மாரடைப்பு காரணமாக இன்று காலை உயிர் இழந்த நடிகர் மாரிமுத்துவுக்கு பொதுமக்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களிலும் நேரிலும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் மாரிமுத்து நடித்திருந்த நிலையில், "மாரிமுத்து ஒரு அருமையான மனிதர். அவருடைய இறப்பு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய மனமார்ந்த அஞ்சலி." என இரங்கல் தெரிவித்து இருந்தார்.

இயக்குநர் நெல்சன் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் மாரிமுத்துவின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், நடிகர் சிம்புவும் தற்போது தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மாரிமுத்து உடன் பணியாற்றியதாக சிம்பு குறிப்பிட்ட நிலையில், குத்து படத்தில் இருவரும் பணியாற்றிய நிகழ்வுகளை ஒரு பேட்டியில் மாரிமுத்து பேசியிருந்ததை தற்போது சிம்புவின் ட்வீட்டுக்கு கீழ் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த த்ரோபேக் பேட்டியில், நடிகர் சிம்புவும் தானும் இரவு நேரங்களில் ரோட்டு கடைகளுக்குச் சென்று ஃப்ரைட் ரைஸ் எல்லாம் சாப்பிடுவோம் என மாரிமுத்து பேசியுள்ளார். மேலும், குத்து படம் ரிலீசான சமயத்தில் தியேட்டருக்கு என்னைக் கூட்டிக்கொண்டு சென்றார்.

முகத்தில் கர்ச்சீப் கட்டிக்கொண்டு ரசிகர்களுடன் ரசிகராக அந்த படத்தை பார்த்தார். வெளியே வரும்போது ஒரு ரசிகர் கர்ச்சீப்பை அவிழ்த்து விட்டார். அவ்வளவுதான் அங்க ஒரே கூட்டமா கூடிட்டாங்க.. சிம்புவுக்கு சினிமாவில் எல்லாமே தெரியும்.. பிறந்த சில நாட்களிலேயே நடிக்க ஆரம்பித்தவர்.

மன்மதன் படத்தில் எல்லாம் அனைத்து வேலைகளையும் சிம்புவே தனி ஆளாக நின்று செய்து முடித்தார். ஆனால் அதை எல்லாம் தற்போது ஏன் அவர் வீணடித்துக் கொண்டிருக்கிறார் என்று தான் தெரியவில்லை. அதை சரியாக பயன்படுத்தினால் அவரது ரேஞ்சு வேற லெவலில் இருக்கும் என மாரிமுத்து பேசிய பேட்டியை ரசிகர்கள் ஷேர் செய்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











