பார்த்து ஆறுதல் கூட சொல்ல முடியவில்லையே.. பிரபலத்தின் மரணத்தால் உடைந்த சிம்பு.. உருக்கமான அறிக்கை!
சென்னை: பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் வி.சுவாமிநாதன் கொரோனாவால் மரணமடைந்த செய்தியை கேட்டு உடைந்து போயுள்ளார் நடிகர் சிம்பு.
லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பல முன்னணி நடிகர்களை வைத்து ஏராளமான படங்களை தாயரித்துள்ளது.
அந்த நிறுவனத்தின் சார்பில் அன்பே சிவம், புதுப்பேட்டை, உன்னைத்தேடி, உன்னை நினைத்து, சிலம்பாட்டம் போன்ற பல படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.

நடிகரும் ஆவார்
சுவாமிநாதன் தயாரிப்பாளராக மட்டுமின்றி நடிகராகவும் வலம் வந்தார். விஜயின் பகவதி மற்றும் புதுக்கோட்டையிலிருந்து சரவணன் ஆகிய படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார். இவரது மகன்தான் கும்கி மற்றும் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நடித்த அஷ்வின்.

கொரோனாவால்
இந்நிலையில் லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் வி.சுவாமிநாதன் சமீபத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் சுவாமிநாதன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

பெரும் அதிர்ச்சி
அவரது மரணம் தமிழ் திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்தனர். அந்த வகையில் நடிகர் சிம்புவும், தயாரிப்பாளர் சுவாமிநாதனின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உருக்கமான அறிக்கை
அதில் தயாரிப்பாளர் சுவாமிநாதன் குறித்த நினைவுகளை உருக்கமாக பகிர்ந்துள்ளார் சிம்பு. அவர் தெரிவித்திருப்பதாவது, தயாரிப்பாளர் சுவாமிநாதன் எனக்கு மிகவும் நெருக்கமானவர். மென்மையான மனிதர். புத்திசாலி. எந்த நேரத்தில் யாரை வைத்து என்ன மாதிரி படம் பண்ண வேண்டும் என்பதில் தெளிவானவர்.

பத்திரமாக பார்த்துக்கொண்டார்
நட்புக்கு இலக்கணமானவர். சிலம்பாட்டம் பட களத்தில் என்னை பத்திரமாகப் பார்த்துக் கொண்டவர். இலங்கையில் படப்பிடிப்பு நடைபெற்றது. எனது தேவைகளையறிந்து சகோதரனைப் போல் நடத்தி படப்பிடிப்பையும் முடித்து வந்தார்.

நேரில் கூட பார்க்க முடியவில்லை
நிறைய நினைவலைகள் உள்ளன. ஆனால் இப்படியொரு சில நாட்களில் விடைபெற்று செல்வாரென தெரியாது. மருத்துவமனை சென்று பார்த்து ஆறுதல் கூட சொல்ல முடியாத ஒரு நோயோடு போராடியிருக்கிறார் என்பது வேதனைக்குரியது. அஸ்வின் மற்றும் அசோக் அவர்களும் என்றும் எந்த காலத்திலும் நாங்கள் உறுதுணையாக இருப்போம்.

இளைப்பாறட்டும்
அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், சுற்றத்திற்கும் திரையுலகினருக்கும் என் ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மரணமடைந்த அவரின் ஆன்மா இறைவன் மடியில் இளைப்பாறட்டும் என வேண்டிக்கொள்கிறேன். இவ்வாறு நடிகர் சிம்பு தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











