twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வடிவேலு புகார் - நடிகர் சிங்கமுத்து திடீர் கைது

    By Sudha
    |

    Singamuthu
    சென்னை: நடிகர் வடிவேலுவின் மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் நடிகர் சிங்கமுத்து நேற்று திடீரென கைது செய்யப்பட்டு 13 நாள் சிறைக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    வடிவேலு, சிங்கமுத்து இருவரும் இணை பிரியா நண்பர்களாக, திரையில் வெடிச் சிரிப்பை வரவழைக்கும் காமெடி விருந்து படைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் நிலப் பிரச்சினை காரணமாக இருவரும் எதிரெதிர் துருவங்களாக மாறிப் போயினர். கொலை மிரட்டல் புகார்களைக் கூறும் அளவுக்கு இருவருக்குள்ளும் பிரச்சினை முற்றியது.

    வடிவேலு, சிங்கமுத்து மீது ஏற்கனவே 3 வழக்குகள் போட்டுள்ளார். 2 வழக்கு போலீஸ் விசாரணையிலும், ஒரு வழக்கு சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டிலும் விசாரணையில் உள்ளது. ரூ.1 கோடி நில மோசடி செய்து விட்டதாக வடிவேலு கொடுத்த புகாரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மோசடி வழக்கு ஒன்றை சிங்கமுத்து மீது பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கில் சிங்கமுத்து முன்ஜாமீன் வாங்கியுள்ளார்.

    அடுத்து சைதாப்பேட்டை கோர்ட்டில் கிரிமினல் வழக்கு ஒன்றையும் வடிவேலு, சிங்கமுத்து மீது போட்டுள்ளார். 3-வதாக கடந்த மாதம் வடிவேலுவின் மேலாளர் சங்கர் கொடுத்த புகாரின் பேரில் சிங்கமுத்து மீதும், படஅதிபர் கண்ணன் மீதும் சென்னை விருகம்பாக்கம் போலீசார் கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கிலும் சிங்கமுத்து கைதாகாமல் தப்பித்து முன் ஜாமீன் பெற்று விட்டார்.

    இந்த நிலையில் நேற்று காலையில் நடிகர் வடிவேலுவின் மேலாளர் சங்கர் மீண்டும் ஒரு புகார் மனுவை விருகம்பாக்கம் போலீசில் கொடுத்தார். சென்னை சாலிகிராமம் வேதவல்லி தெருவில் உள்ள வடிவேலுவின் அலுவலகத்தில் இருந்த போது, சிங்கமுத்து நேரில் வந்து தன்னை கொலை மிரட்டல் விடுத்ததாக அந்த புகாரில் சங்கர் தெரிவித்து இருந்தார். இந்த புகார் அடிப்படையில் விருகம்பாக்கம் போலீசார் சிங்கமுத்து மீது 2-வதாக ஒரு கொலை மிரட்டல் வழக்கை பதிவு செய்தனர்.

    இந்த புகார் கொடுக்கப்பட்டதும், இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டதும், மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. வழக்கமாக இதுபோல் புகார் கொடுக்கும்போது வடிவேலு பத்திரிகைகளுக்கு தெரிவிப்பது வழக்கம். நேற்று அதுபோல் தெரிவிக்கவில்லை.

    இந்த நிலையில், நேற்று பிற்பகல் 2.30 மணி அளவில் சென்னை ராமாவரம், கோத்தாரி நகர் 8-வது தெருவில் உள்ள தனது வீட்டில் மதியம் சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது சிங்கமுத்து வீட்டுக்கு போலீஸார் சென்று அதிரடியாக கைது செய்தனர்.

    கைதான தகவல் வெளியிலும் தரப்படவில்லை. மாலை நாலரை மணி வரையில் இது குறித்து யாருக்குமே தெரியவில்லை. சிங்கமுத்துவை சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு கொண்டு சென்ற போதுதான் பத்திரிகைகளுக்கு தகவல் பரவியது.

    மாலை 5.30 மணிக்கு சைதாப்பேட்டை 18-வது கோர்ட்டில் மாஜிஸ்திரேட் மலர்விழி முன்பு சிங்கமுத்துவை போலீசார் ஆஜர்படுத்தினார்கள். விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட், சிங்கமுத்துவை வருகிற 28-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.

    அப்போது, சிங்கமுத்து, தான் வருமானவரி கட்டுபவர் என்றும், எனவே தனக்கு சிறையில் முதல் வகுப்பு ஒதுக்க வேண்டும் என்றும் மாஜிஸ்திரேட்டிடம் கோரிக்கை வைத்தார். அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அறிவழகன் உடனடியாக ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார்.

    பின்னர் சிங்கமுத்துவை போலீஸார் பாதுகாப்புடன் புழல் சிறைக்குக் கொண்டு போய் அடைத்தனர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X