ரொம்ப உதவி செய்வார்.. போண்டா மணி சொந்தமெல்லாம் நல்லா இருக்கு.. கஷ்டத்துல வரல.. சிங்கமுத்து எமோஷனல்
சென்னை: கோலிவுட்டில் பிரபல காமெடி நடிகராக வலம் வந்த போண்டா மணி நேற்று முன் தினம் உயிரிழந்தார். சிறுநீரக பிரச்னையில் இருந்த அவர் வீட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பலரையும் சோகத்தில் தள்ளியுள்ளது. குறிப்பாக சிங்கமுத்து ரொம்பவே எமோஷனல் ஆகியிருக்கிறார். இந்த சூழலில் போண்டா மணியின் மறுபக்கம் குறித்து அவர் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.
இந்த வருடம் சினிமா நடிகர்களுக்கு போதாத காலம்தான்போல. மயில்சாமி, மாரிமுத்து, மனோபாலா உள்ளிட்ட மிகச்சிறந்தவர்கள் எல்லாம் உயிரிழந்தனர். 2023ஆம் ஆண்டு முடிய இன்னும் சில நாட்களே இருக்கும் சூழலில் போண்டா மணியும் உயிரிழந்திருக்கிறார். இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட அவர் அகதியாக தமிழ்நாட்டுக்கு வந்து சினிமா வாய்ப்பு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் அறிமுகம்: தமிழ்நாடு வந்து ரொம்பவே கஷ்டப்பட்டு ஒருவழியாக பாக்யராஜின் பவுனு பவுனுதான் மூலம் திரைப்படத்தில் அறிமுகமானார் போண்டா மணி. கேத்தீஸ்வரன் என்ற இயற்பெயர் கொண்ட அவர் வறுமையின் காரணமாக போண்டா சாப்பிட்டே ஷூட்டிங்கில் கலந்துகொண்டதால் அவர் போண்டா மணியாக மாறினார் என்று கூறப்படுவதுண்டு.
வடிவேலுவுடன் காம்போ: பவுனு பவுனுதான் படத்துக்கு பிறகு பல படங்களில் நடித்த அவர் வடிவேலுவின் க்ரூப்பில் சேர்ந்தார். சிங்கமுத்து காமெடி காட்சிகளை எழுத வடிவேலு அதை டெவலப் செய்ய; ஷாட்டின்போது போண்டா மணி, அல்வா வாசு, பாவா லட்சுமணன், முத்துக்காளை போன்ற நடிகர்கள் உறுதுணையாக இருக்க பல காமெடி காட்சிகள் மெகா ஹிட்டடித்திருக்கின்றன. வடிவேலு - போண்டா மணி காம்போ பெரிதாகவே கொண்டாடப்பட்டது.
உடல்நலம்: தொடர்ந்து பல படங்களில் நடித்துக்கொண்டிருந்த போண்டா மணிக்கு சிறுநீரக பிரச்னை ஏற்பட்டது. அதனையடுத்து சிகிச்சை எடுத்து வந்த அவர் தனக்கு உதவ வேண்டும் என கோரிக்கை வைத்தார். ஆனால் வடிவேலு கண்டுகொள்ளவில்லை. மாறாக விஜய் சேதுபதி, பார்த்திபன் உள்ளிட்டோர் போண்டா மணிக்கு உதவினர். இருந்தாலும் மணியை வறுமையின் கோர கரங்கள் இறுக பிடித்துவிட்டன.
உயிரிழப்பு: சூழல் இப்படி இருக்க நேற்று முன் தினம் அவர் தனது வீட்டில் உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். ஆனால் வடிவேலு வரவில்லை என்பது கவனிக்கத்தக்கது. போண்டா மணிக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். மகளை ஐசரி வேல் பொறுப்பெடுத்து படிக்க வைத்துக்கொண்டிருக்கிறார். மகன் படிக்கவில்லை. எனவே அவருக்கு ஒரு வேலையை செட் செய்து கொடுக்க வேண்டுமென போண்டா மணிக்கு நெருக்கமானவர்கள் உறுதி எடுத்திருக்கிறார்கள்.
சிங்கமுத்து பேட்டி: இந்நிலையில் போண்டா மணிக்கு திருமணம் செய்து வைத்தவரும், அவருக்கு மிக மிக நெருக்கமானவருமான நடிகர் சிங்கமுத்து எமோஷனலாக போண்டா மணியின் மறுபக்கத்தை பேசியிருக்கிறார். தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "போண்டா மணி ரொம்பவே கஷ்டப்பட்டவர். அவர் வாய்ப்பு தேடும்போது எங்களது கடைக்கு வந்து சாப்பாட்டுக்கு காசு வாங்கிக்கொண்டு போவார்.

உதவுவார்: அவர் கோபக்காரர்தான். ஆனால் நல்ல குணமுடையவர். கடுமையான உழைப்பாளி. நான் எந்த கம்பெனிக்கும் சென்று வாய்ப்பு கேட்கமாட்டேன். ஆனால் அவர் அனைத்து கம்பெனிகளுக்கும் போவார். முக்கியமாக நிறைய ஊர்களில் ப்ரோகிராம்களை பிடிப்பதும் போண்டா மணிதான். அப்படி பிடித்துவிட்டு கொட்டாச்சி உள்ளிட்ட கஷ்டப்படும் நடிகர்களை அந்த ப்ரோகிராம்களுக்கு அழைத்து சென்று வருவாய்க்கு வழி செய்வார். அந்த வகையில் நிறைய உதவி செய்தவர் அவர்.
சொந்தம் நல்லாத்தான் இருக்கு: போண்டா மணியின் சொந்தம் எல்லாம் நல்லாத்தான் இருக்கும். இன்னும் அவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். சிலோனில் கடைக்கூட வைத்திருக்கிறார்கள். ஆனால் இவர் கஷ்டத்தில் இருக்கும்போது அவர்கள் யாருமே வரவில்லை. எதாவது பிரச்னை என்றால் என்னிடம்தான் வருவார். வருடா வருடம் வந்து என்னிடம் ஆசீர்வாதமும் வாங்கிவிட்டு போவார்" என்றார்.


Click it and Unblock the Notifications











