பெப்சி கோரிக்கையை ஏற்று, சினிமா தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சம்...சிவகுமார், சூர்யா, கார்த்தி உதவி
சென்னை: பெப்சி அமைப்பு விடுத்த கோரிக்கையை ஏற்று நடிகர் சிவகுமார் குடும்பம், சினிமா தொழிலாளர்களுக்காக ரூ.10 லட்சத்தை வழங்குகிறது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ். பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. அதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தியா முழுவதும் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. டி.வி.சீரியல்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

ஆர்.கே.செல்வமணி
இந்த ரத்து காரணமாக, இந்தியா முழுவதும் சினிமா தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். சினிமாவில் தினசரி ஊதியம் பெற்று வாழ்க்கை நடத்தும் ஊழியர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். அவர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவ வேண்டும் என்று தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத் (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி கோரிக்கை வைத்திருந்தார்.

வேண்டுகோள்
இதுபற்றி அவர் வெளியிட்ட அறிக்கையில், இன்று காலை லைட்மேன் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் போன் செய்து, சாப்பாடு இல்லாமல் குழந்தைகள் கஷ்டப்படுவதாகச் சொன்னார். அந்த வேதனையை வார்த்தைகளால் எழுத முடியாது. அதனால், இன்று திரைப்படத்துறையில் நல்ல நிலையில் இருக்கும் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு வேண்டுகோள் வைக்கிறேன்.

உதவ வேண்டும்
தொழில்நுட்ப கலைஞர்களுக்கு அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் அதன் உரிமையாளர்களுக்கும் இந்த வேண்டுகோளை வைக்கிறேன். நமது சம்மேளனத்தில் 25 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களில் ஒரு வேளை சோற்றுக்கு கஷ்டப்படும் தொழிலாளர்கள் 15 ஆயிரம் பேர் இருப்பார்கள். ஒரு குடும்பத்துக்கு ஒரு மூட்டை அரிசி தந்தால் அவர்கள் கஞ்சி சோறாவது சாப்பிட்டு உயிர் வாழ இயலும்.

நடிகர் சிவகுமார்
பத்தாயிரம் உறுப்பினர்களுக்கு ஒரு மூட்டை அரிசி அளிப்பதாக இருந்தால், ஒரு மூட்டை 1250 ரூபாய் என வைத்தால் ரூ. 2 கோடி ஆகிறது. இதற்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்' என்று கூறியிருந்தார். இந்த கோரிக்கையை ஏற்று நடிகர் சிவகுமார், சூர்யா, கார்த்தி குடும்பத்தினர் ரூ.10 லட்சம் ரூபாயை, பெப்சி அமைப்புக்கு வழங்குவதாக அறிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











