சுதந்திர போராட்ட வீரராக மாஸ் காட்டிய நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.. மறக்க முடியாத ஆளுமை!
சென்னை: இந்தியாவின் 78வது சுதந்திர தினத்தை எதிர்நோக்கி இருக்கிறோம். சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்காக நாடு முழுவதும் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளன. இந்த நாளில் வீடுதோறும் தேசிய கொடியை ஏற்றி இந்த நாளை மறக்க முடியாத நாளாக மாற்றும்படி பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்திலும் சுதந்திர தினத்தையொட்டி பல்வேறு கலைநிகழ்ச்சிகள், அணிவகுப்புகள் உள்ளிட்டவை திட்டமிடப்பட்டு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுதந்திரதினக் கொண்டாட்டங்களுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், ஒவ்வொரு மாநிலமும் அதற்கென சிறப்பாக தயாராகி வருகின்றன.

சுதந்திர தினக் கொண்டாட்டம்: இந்தியாவின் 78வது சுதந்திரத் தினம் இன்னும் சில தினங்களில் கொண்டாடப்பட உள்ளது. இதற்கென மத்திய அரசு சார்பில் டெல்லியில் அணிவகுப்புகள் உள்ளிட்டவை திட்டமிடப்பட்டு வருகின்றன. இதே போல தமிழகம் உள்ளிட்ட ஒவ்வொரு மாநிலமும் சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கு தனித்தனியாக தயாராகி வருகின்றன. தமிழ்நாட்டிலும் கலைநிகழ்ச்சிகள், அணிவகுப்புகள் உள்ளிட்டவை திட்டமிடப்பட்டு வருகின்றன. இந்த நல்ல நாளில் வீடு தோறும் தேசிய கொடியை ஏற்றி மறக்க முடியாத நாளாக மாற்றும்படி பிரதமர் மோடி நாட்டு மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
சுதந்திர போராட்டம்: சுதந்திர போராட்டத்தை மையமாக கொண்டு தமிழில் பல படங்கள் வெளியாகியுள்ள நிலையில், கண்ணுக்கு தெரியாத அந்த மாவீரர்களை நம் கண்முன்னே நிறுத்திய பெருமை சில நடிகர்களையே சேரும். அந்த வகையில் இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் நடிகர் சிவாஜி கணேசன், சுதந்திர போராட்ட காலகட்டத்தில் அதில் ஈடுபட்ட பல தலைவர்களை, இவர்கள் இப்படித்தான் வீறு கொண்ட சிங்கங்களாக இருந்திருப்பார்களோ, பிரிட்டீஷ் அரசிற்கு எதிராக கர்ஜித்திருப்பார்களோ என்ற பிம்பத்தை நம் கண்முன்னே கொடுத்தவர் நடிகர் சிவாஜி கணேசன். அந்த வகையில் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்றாலும் தன்னுடைய நடிப்பின்மூலம் சுதந்திர போராட்ட தியாகியாகவே கருதப்பட்டவர்.
சுதந்திர போராட்ட வீரராக சிவாஜி: இவரது படங்களில் வீரபாண்டிய கட்டபொம்மன், பகத் சிங், கொடி காத்த குமரன், வ.உ.சி போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை நாம் பாக்க முடிந்தது. அடிமை தளத்தில் இருந்து நாட்டு மக்களை மீட்ட இத்தகைய தியாக உள்ளங்கள் இப்படித்தான் இருந்திருப்பார்கள் என்ற ஒரு வடிவத்தை தன்னுடைய நடிப்பின்மூலம் கொடுத்திருந்தார் சிவாஜி கணேசன். அவர் எப்படி இதை சாத்தியப்படுத்தியிருப்பார் இதற்காக அவர் எவ்வளவு தூரம் ஹோம் வொர்க் செய்திருப்பார் என பல்வேறு யோசனைகள் எழுந்தாலும் இதையெல்லாம் மீறி சுதந்திர போராட்ட வீரர்களின் பிம்பத்தை நம் கண்முன்னே கொண்டுவந்தவர் என்ற விஷயம் மட்டுமே முன் வைக்கப்படுகிறது.
வீரபாண்டிய கட்டபொம்மன்: சிவாஜி கணேசன் நடிப்பில் கடந்த 1959ம் ஆண்டிலேயே வெளியானது வீரபாண்டிய கட்டபொம்மன். நெஞ்சை நிமிர்த்தி, பிரிட்டீஷ் அரசுக்கு எதிராக கொடி தூக்கிய கட்டபொம்மனை இளம் தலைமுறையினருக்கும் தெரியவைத்தார் சிவாஜி கணேசன். கண்களை உருட்டி, பிரிட்டீஷ் அரசாங்கத்திற்கு எதிராக மாமனா மச்சானா மானங்கெட்டவனே என உருமும் தருணத்தை பார்ப்பவர்களின் மெய்சிலிர்ப்பதை கட்டுப்படுத்த முடியாது. நிஜத்திலும் கட்டபொம்மன் இப்படித்தான் பேசியிருப்பார் என நினைக்க வைக்கும்வகையில் இந்த டயலாக்கும் வீரபாண்டிய கட்டபொம்மனும் அந்த கேரக்டருக்கு உயிரூட்டிய சிவாஜி கணேசனையும் எந்த காலத்திலும் மறக்க முடியாது, பிரிக்கவும் முடியாது.
கப்பலோட்டிய தமிழன்: இதேபோல கப்பலோட்டிய தமிழனாய் வரலாற்றில் கவனம் பெற்ற வஉசிதம்பரனாரின் வாழ்க்கையையும் நம் கண்முன்னே சிறப்பான வகையில் கொண்டுவந்தவர் சிவாஜி கணேசன். மிகப்பெரிய செல்வந்தனாக இருந்த வஉசி, பிரிட்டீஷ் அரசிற்கு எதிராக கடல் வணிகம் செய்யும்வகையில் கப்பல் ஓட்டிய கதையை இந்தப் படத்தில் தன்னுடைய உடல்மொழியால் சிறப்பாக்கியிருந்தார் சிவாஜி கணேசன். வஉசியின் தியாகம் மற்றும் சுயநலமில்லாமல் நாட்டிற்காக போராடிய கதையை இந்தப் படத்தின்மூலம் ரசிகர்கள் தெரிந்துக் கொள்ள முடிந்தது. தற்போதும் இந்தப் படங்கள் ரசிகர்களுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
சுதந்திர போராட்ட வீரர்கள்: வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம் என்ற சுதந்திரக் கனவை இந்தப் படமும் அதன் பாடலும் மிகச்சிறப்பாக வெளிக் கொண்டு வந்தன. இதேபோல இயக்குநர் மாதவன் இயக்கத்தில் கடந்த 1973ம் ஆண்டில் வெளியானது ராஜபார்ட் ரங்கதுரை. நாடகக் கலைஞனாக இந்தப் படத்தில் நடித்திருந்தாலும் பகத் சிங், கொடி காத்த குமரன் என பல சுதந்திர போராட்ட வீரர்களை இந்தப் படத்தில் கண் முன்னே கொண்டு வந்திருந்தார் சிவாஜி கணேசன். இதேபோல 1963ம் ஆண்டில் வெளியான ரத்தத்திலகம் படத்திலும் சீன ராணுவத்திற்கு எதிராக போராடும் ராணுவ வீரராக கவனம் பெற்றிருந்தார்.
சிவாஜி கணேசனின் பங்கு: திருலோக சந்தர் இயக்கத்தில் வெளியான பாரத விலாஸ் படத்திலும் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக இருப்பதன் அவசியத்தை வலியுறுத்தியிருப்பார். இவ்வாறு தன்னுடைய படங்களில் தான் ஏற்று நடித்த கேரக்டர்கள் மூலம் சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை வெளிக்காட்டிய சிவாஜி கணேசனின் இந்த பங்கு மிகவும் சிறப்பாக பார்க்கப்படுகிறது. 78வது சுதந்திர தினத்தை கொண்டாடவுள்ள இந்த தருணத்தில் அவரது இந்த கலைச்சேவை உற்று நோக்க வேண்டிய ஒன்று.


Click it and Unblock the Notifications











