எஸ்.கே ஃபேன்ஸ் ரெடியா? இந்த சன் டே உங்களோடதுதான்; சூப்பர் அப்டேட் காத்திருக்கு!
சென்னை: தமிழ் சினிமாவில் கால் பதிப்பதற்கு முன்னர் விஜய் டிவி வாயிலாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கான ஒரு அரியாசனத்தை ஏற்படுத்திக் கொண்டவர் நடிகர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களில் போட்டியாளராக கலந்து கொண்டு அதன் பின்னர் அது இது எது நிகழ்ச்சியின் தொகுப்பாளராக மாறி அதற்கடுத்து விஜய் டிவியின் தவிர்க்க முடியாத தொகுப்பாளராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர் சிவகார்த்திகேயன்.
சின்னத்திரை டூ வெள்ளித்திரை
சிவகார்த்திகேயன் ஒரு ஒரு நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருக்கிறார் என்றால் அவரைக் கண்டு ரசிப்பதற்கு மட்டுமே அந்த நிகழ்ச்சியை பார்த்த ரசிகர்கள் தமிழ்நாட்டில் ஏராளம். இப்படி சின்னத்திரையில் ஜொலித்துக் கொண்டிருந்த சிவகார்த்திகேயனை வெள்ளித்திரைக்கு அழைத்து வந்தவர் இயக்குநர் பாண்டிராஜ். கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான மெரினா திரைப்படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன் பின்னர் தனுஷின் 3 படத்தில் தனுஷுக்கு நண்பனாக நடித்திருந்தார். தொடர்ந்து காமெடியான ஜனரஞ்சகமான படங்களில் நடித்துவந்த சிவகார்த்திகேயன் அதன் பின்னர் கொஞ்சம் சீரியஸான படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது சிவகார்த்திகேயன் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துளார். இதுமட்டும் இல்லாமல் பாடல்கள் எழுதுவது, பாடல்கள் பாடுவது மற்றும் படங்கள் தயாரிப்பதிலும் சிவகார்த்திகேயன் ஈடுபட்டு வருகின்றார். இவர் தயாரித்து நடித்திருந்த கனா திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பைப் பெற்றது. இவரது தயாரிப்பில் அடுத்து வெளியாகவுள்ள திரைப்படங்களில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் சூரி நடிப்பில் உருவாகியுள்ள கொட்டுக்காளி.

S.K.23
இதை அடுத்து சிவகார்த்திகேயன் தற்போது இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த படத்தில் நடித்து வருகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி ஸ்வந்த் நடிக்கின்றார். இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் கேமியோ செய்கின்றார் என்றும் கேஜிஎஃப் படத்தில் மாஸான வில்லனாக வந்த சஞ்சய் தத் இந்த படத்திலும் வில்லனாக நடிக்கவுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அனிருத் இந்த படத்திற்கு இசை அமைக்கின்றார்.

S.K.23 அப்டேட்
ஏற்கனவே படக்குழு தரப்பில் இருந்து கடந்த மே 13ஆம் தேதி படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியதாக அறிவிப்பு வெளியானது. சில தினங்களுக்கு முன்னர் கூட படப்பிடிப்புத் தளத்தில் சிவகார்த்திகேயன் இருந்ததைப் போன்ற வீடியோக்களும் இணையத்தில் உலா வந்தது. இந்நிலையில் படத்தைத் தயாரிக்கும் ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ் தனது எக்ஸ் பக்கத்தில், இன்று அதாவது ஜூன் மாதம் 9ஆம் தேதி மலை 6 மணிக்கு சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் குறித்த அட்டகாசமான அப்டேட் வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளது.
இதுவரை இந்த படத்தின் டைட்டில் வெளியிடப்படாததால், படத்தின் டைட்டில் என்ன என்பது தொடர்பான அப்டேட்டாக இருக்குமே என ரசிகர்கள் வட்டாரத்திலும் கோலிவுட் வட்டாரத்திலும் பேச்சுகள் அடிபடுகின்றது.
அமரன்
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாக தயாராக உள்ள திரைப்படம் அமரன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை கமல்ஹாசன் மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்துள்ளனர். சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கின்றார். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இந்தத் திரைப்படம் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்வில் நடந்த சம்பவங்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. அமரன் படத்தினை வரும் செப்டம்பர் 27ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications











