SK: தமிழ் சினிமா கொண்டாடும் டூரிஸ்ட் ஃபேமிலி.. மொத்த டீமையும் அழைத்து பாராட்டிய பராசக்தி ஹீரோ!
சென்னை: அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் கடந்த 1ஆம் தேதி வெளியான படம் டூரிஸ்ட் ஃபேமிலி. சசிகுமார், சிம்ரன், பக்ஸ் பகவதி பெருமாள், ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிப் படமாக மாறியுள்ளது. இந்நிலையில் படக்குழுவினரை நடிகர் சிவகார்த்திகேயன் அவரது அலுவலகத்துக்கு வரவழைத்து பாராட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் இருக்கும் தயாரிப்பு நிறுவனங்களில் மிகவும் முக்கியமான தயாரிப்பு நிறுவனமாக மாறிவரும் நிறுவனம் என்றால் அது மில்லியன் டாலர்ஸ் நிறுவனத்தைச் சொல்லலாம். குட் நைட், லவ்வர் மற்றும் டூரிஸ்ட் ஃபேமிலி என கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டுமே தயாரித்து வருகிறார்கள். குறிப்பாக அவர்களின் தயாரிப்பில் ஒரு படம் வருகிறது என்றாலே அது ஃபீல் குட் மூவி ஆகத்தான் இருக்கும் என்கிற நல்ல நம்பிக்கையை தயாரிப்பு நிறுவனம் ஏற்படுத்திவிட்டது. இது மட்டும் இல்லாமல், தமிழ் சினிமாவின் தரத்தை மேம்படுத்துவதோடு, மற்ற தயாரிப்பு நிறுவனங்களுக்கு முன்னுதாரணமாக இருந்து வருகிறது.

அவர்கள் தயாரிப்பில் உருவான டூரிஸ்ட் ஃபேமிலி படம் தான் தற்போது தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறக்கும் படம். சசிகுமார், சிம்ரன், எஸ்.எஸ். பாஸ்கர் என கைதேர்ந்த நடிகர்களைக் கொண்டு, ஆரவாரமில்லாத, அழுத்தம் திருத்தமான ஒரு படத்தை அவ்வளவு சிறப்பாக கொடுத்துள்ளார்கள். அவர்களின் தயாரிப்பில் இதுவரை வெளியான மூன்று படங்களையும் இயக்கியவர்கள் மூவரும் புதுமுக இயக்குநர்கள்தான்.
சிவகார்த்திகேயன்: டூரிஸ்ட் ஃபேமிலி படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல், ரசிகர்கள் விமர்சனத்தால் நாளுக்கு நாள் இந்த படத்திற்கான வசூல் என்பது அதிகரித்து வருகிறது. மொத்த படமும் அனைத்து வயதிலும் இருப்பவர்களுக்கான படமாகவும் எடுக்கப்பட்டுள்ளது குடும்ப ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்து இழுத்துள்ளது. படத்தில் இடம் பெற்றுள்ள காமெடி, செண்டிமெண்ட், காதல், ரொமான்ஸ் என அனைத்து காட்சிகளுக்கும் தியேட்டரில் அப்லாஸ்கள் வந்து கொண்டே இருந்தது.

பாராட்டு: இந்நிலையில் படக்குழுவினரை தனது அலுவலகத்திற்கு அழைத்து பாராட்டியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். " செம ரைட்டிங், நல்ல மேக்கிங், படம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்திருந்தது. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அழகழகாக வடிவமைத்து, எல்லோருடனும் கனெக்ட் செய்துவிட்டீர்கள். அனைத்து கதாபாத்திரமும் சிறப்பாக இருந்தது. அனைவரும் மனதுக்கு மிகவும் நெருங்கியவர்களாக மாறிவிட்டார்கள்" என்று படக் குழுவினரைப் பாராட்டியுள்ளார்.
பராசக்தி: இந்த நிகழ்வில், படத்தின் இயக்குநர் , படத்தின் ஒளிப்பதிவாளர், எடிட்டர், தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினர் என பலரும் கலந்து கொண்டார்கள். இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பான வீடியோவை டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் தயாரிப்பு நிறுவனமான மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தங்களது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்கள். சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் அவரது நடிப்பில் வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி மதராஸி படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications











