Sivakarthikeyan: இரட்டிப்பு மகிழ்ச்சி.. ஏஆர் முருகதாசுடன் கூட்டணியை உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன்
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது எஸ்கே21 படத்தில் நடித்துவருகிறார். படத்தின் காஷ்மீர் ஷெட்யூல் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் சென்னையில் அடுத்தக்கட்ட சூட்டிங் துவங்கவுள்ளது.
இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் ஏஆர் முருகதாஸ், வெங்கட் பிரபு என அடுத்தடுத்த இயக்குநர்களின் கீழ் அவர் நடிக்கவுள்ளார்.
இதனிடையே நீண்ட நாட்களாக ரிலீஸ் தள்ளிப்போகும் அவரது அயலான் படமும் பொங்கல் ரிலீசாக வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்கே23 படத்தில் ஏஆர் முருகதாசுடன் இணைவது குறித்து உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த சிறப்பான கதைக்களங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ஆங்கராக, காமெடியனாக துவங்கிய அவரது பயணம், காமெடி நாயகனாக, அதிரடி ஆக்ஷன் நாயகனாக மாறியுள்ளது. இயக்குநர்களின் பேவரைட் சாய்சாக சிவகார்த்திகேயன் உள்ளார். தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத் தயாரிப்பில் எஸ்கே21 படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
இந்தப் படத்தின் சூட்டிங் காஷ்மீரில் துவங்கிய நிலையில், தொடர்ந்து 75 நாட்கள் சூட்டிங் நடத்தப்பட்டுள்ளது. படத்தில் ராணுவ வீரனாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். படத்தின் போர்க்காட்சிகளும் காஷ்மீர் ஷெட்யூலில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை திரும்பியுள்ள படக்குழுவினர், இன்னும் சில தினங்களில் இங்கு அடுத்தக்கட்ட சூட்டிங்கை துவங்கவுள்ளனர். இதில் படத்தின் நாயகி சாய் பல்லவியும் இணையவுள்ளார்.
முன்னதாக இந்தப் படத்திற்காக வித்தயாசமான ஹேர்ஸ்டைலில் சிவகார்த்திகேயன் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தொப்பி போட்டு தன்னுடைய ஹேர்ஸ்டைலை அவர் மறைத்திருந்தார். தற்போது சென்னை திரும்பியவுடன் வழக்கமான ஹேர்ஸ்டைலுடன் காணப்படுகிறார். அதனால் அவர் படத்தில் இருவேறு ஹேர்ஸ்டைலுடன் காணப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை விரைவில் முடித்துவிட்டு அவர் அடுத்ததாக ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் இணையவுள்ளார்.
முன்னதாக விஜய், அஜித், சூர்யா, விஜயகாந்த் என முன்னணி ஹீரோக்களை கொண்டு படங்களை கொடுத்த ஏஆர் முருகதாஸ், சரியான வாய்ப்பிற்காக காத்திருந்த நிலையில், தற்போது சிவகார்த்திகேயனுடன் அவரது எஸ்கே23 படத்தில் இணையவுள்ளார். இந்தப் படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. எஸ்கே21 படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு, இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் இணையவுள்ளார்.

இதனிடையே இன்றைய தினம் பிறந்தநாளை கொண்டாடிவரும் ஏஆர் முருகதாஸிற்கு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன். தன்னுடைய எஸ்கே23 படத்தில் ஏஆர் முருகதாசுடன் இணைவது குறித்து தனக்கு மிகவும் உற்சாகமாக உள்ளதாக தெரிவித்துள்ள சிவகார்த்திகேயன், தனக்கு ஏஆர் முருகதாஸ் கதை சொன்ன விதம் இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்ததாகவும் கூறியுள்ளார். படத்தில் இணைவதற்காக தான் காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் ஏஆர் முருகதாஸ் -சிவகார்த்திகேயன் கூட்டணி உறுதியாகியுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்த ஆண்டில் துவங்கவுள்ளது. அனிருத் இசையமைக்கவுள்ள இந்தப் படத்தில் சிவகார்த்தகேயனுக்கு மிருணாள் தாக்கூர் ஜோடியாகியுள்ளார். தெலுங்கு தயாரிப்பாளர் என்வி பிரசாத் தயாரிக்கவுள்ள இந்தப் படம் ஆக்ஷன் என்டர்டெயினராக உருவாகவுள்ளது. இந்தப் படம் சிவகார்த்திகேயனை அடுத்த லெவலுக்கு எடுத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











