புற்றுநோய்க்கு தீவிர சிகிச்சை.. கடும் கஷ்டத்தில் நடிகர் தவசி.. அவசரமாக உதவிய சிவகார்த்திகேயன்!
சென்னை: சிகிச்சைக்கு பண உதவி கேட்ட நடிகர் தவசிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் உதவி செய்துள்ளார்.
Recommended Video
சிவகார்த்திகேயனின், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்தவர் தவசி. இதில் அவர் நடிப்பு பேசப்பட்டது.
கிழக்குச் சீமையிலே தொடங்கி, அண்ணாத்த வரை ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

அழகர்சாமியின் குதிரை
ரஜினி முருகன் படத்தில் பஞ்சாயத்து செய்யும் பெரியவராக நடித்திருப்பார். அழகர்சாமியின் குதிரை படத்தில் உள்ளூர் கோடாங்கியாக நடித்து சிரிக்க வைத்தவர். கொம்பன் படத்திலும் நடித்திருக்கிறார். லாக்டவுனுக்கு முன்பு வரை நடிகர் ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடித்து வந்தார்.

தவசிக்கு புற்றுநோய்
தவசிக்கு உணவுக்குழாயில் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. நோய் தீவிரம் அடைந்ததால் உடல் நிலை பாதிக்கப்பட்டது. உடல் மெலிந்து பரிதாபமாகக் காட்சி அளிக்கும் அவர், தற்போது மதுரை நரிமேட்டில் உள்ள திமுக எம்.எல்.ஏ, சரவணனின், சரவணா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பணமின்றி தவிப்பு
சிகிச்சைக்கு போதிய பணமின்றி தவிப்பதாகவும் நடிகர்கள், திரையுலகினர் தனக்கு உதவ வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். அவருக்கு தொடர்ந்து 6 மாதங்களுக்கு மேல் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதால், அதிக பணம் தேவைப்படுவதாகக் கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன்
இதையடுத்து, தவசியின் சிகிச்சைக்கு சரவணா மருத்துவமனை சார்பில் திருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏ டாக்டர் சரவணன், தனது சூர்யா தொண்டு நிறுவனம் மூலம் உதவி வருகிறார். இந்நிலையில், நடிகர்கள் சிவகார்த்திகேயன், சூரி ஆகியோர் அவருக்கு உதவியுள்ளனர்.

ஆபத்து இல்லை
தவசியின் சிகிச்சைக்காக நடிகர் சூரி முதற்கட்டமாக 20 ஆயிரம் ரூபாயை வழங்கியுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் தனது சார்பில் 25 ஆயிரம் ரூபாய் வழங்கி இருக்கிறார். 'தற்போது அவர் உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கிறது. ஆபத்து இல்லை என்று அவர் மகள் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











