SK21: மாவீரன் படத்துக்காக தொடர் பிரமோஷன்ஸ்.. மீண்டும் SK21 சூட்டிங்கில் இணைந்த சிவகார்த்திகேயன்!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், யோகிபாபு, சரிதா, மிஷ்கின் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியாகியுள்ளது மாவீரன்.
டாக்டர், டான் படங்களின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு பிரின்ஸ் படம் சொதப்பலாக அமைந்தது.
இந்நிலையில் மாவீரன் படத்திற்கு ரசிகர்கள் மிகுந்த வரவேற்பை கொடுத்து வருகின்றனர். அடுத்த வீட்டுப்பையன் லுக்கிலேயே இந்தப் படத்தில் அதிரடி கிளப்பியுள்ளார் சிவகார்த்திகேயன்.

SK21 சூட்டிங்கில் மீண்டும் இணைந்த சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து சிறப்பான கதைக்களங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். முன்னதாக அவரது தயாரிப்பு மற்றும் நடிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான் படங்கள் வித்தியாசமான ஜானர்களில் ரசிகர்களை கவர்ந்தது. தயாரிப்பாளராகவும் இந்தப் படங்கள் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தன. இந்தப் படங்களை தொடர்ந்து கடந்த தீபாவளியையொட்டி வெளியான பிரின்ஸ் படம் அவருக்கு சொதப்பியது. கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கத்தில் மாவீரன் படம் கடந்த 14ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசானது. படத்தில் சிவகார்த்திகேயனுடன், அதிதி ஷங்கர், யோகிபாபு, சரிதா, மிஷ்கின் உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். படம் ரசிகர்களை கவர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்தப் படத்தில் பக்கத்து வீட்டு பையன் போன்ற அப்பாவித்தனத்துடன் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன்.
துவக்கத்தில் அவரது கேரக்டர் பயந்தாங்கொள்ளித் தனமாக காட்டப்படுகிறது. இது சிவகார்த்திகேயனுக்கு சிறப்பாக பொருந்துகிறது. சிவகார்த்திகேயன் தற்போது கமல் தயாரிப்பில் எஸ்கே21 படத்தில் நடித்து வருகிறார். மாவீரன் பிரமோஷன்களுக்காக முன்னதாக சென்னை வந்த அவர், சென்னையில் நடைபெற்ற ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். தொடர்ந்து கொச்சி, பெங்களூரு உள்ளிட்ட தென்னிந்திய நகரங்களிலும் அவர் படத்திற்கான பிரமோஷன்களை மேற்கொண்டார்.
அவர் சென்ற இடங்களில் எல்லாம் ஆயிரக்கணக்கான ரசிகர்களை அவரது நிகழ்ச்சியை பார்ப்பதற்காக வந்திருந்தனர். மற்ற மாநிலங்களிலும் ரசிகர்களிடம் அவர்மேல் உள்ள ஈர்ப்பையே இது காட்டியது. தொடர்ந்து துபாய், மலேசியா என வெளிநாடுகளிலும் மாவீரன் படத்திற்கான ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சிகளை நடத்தி, அவற்றில் சிறப்பாக பங்கேற்று, ரசிகர்களிடையே பேசினார் சிவகார்த்திகேயன். வெளிநாடுகளிலும் ரசிகர்களின் அதிகமான ஆதரவை பார்க்க முடிந்தது.

இந்நிலையில் தற்போது படத்தின் ப்ரமோஷன்கள் நிறைவடைந்து, ரிலீசும் ஆகியுள்ள நிலையில். மீண்டும் எஸ்கே 21 படத்தின் சூட்டிங்கிற்காக காஷ்மீர் புறப்பட்டு சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அவர் விமானநிலையத்திற்கு வந்த வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. காஷ்மீரில் இந்தப் படத்தின் சூட்டிங் அதிகமான நாட்கள் திட்டமிடப்பட்டுள்ளது. படத்தில் ராணுவ மேஜராக சிவகார்த்திகேயன் நடித்துவருகிறார். அவருக்கு சாய் பல்லவி ஜோடியாகியுள்ளார்.


Click it and Unblock the Notifications











