சிவகார்த்திகேயன்.. குணம் மாறாமல் மிடில் க்ளாஸிலிருந்து உழைப்பால் வந்த டாப் க்ளாஸ்

சென்னை: சினிமாவில் வெல்வதற்கு திறமையும், உழைப்பும் வேண்டும். ஆனால் வென்றவர் வென்ற இடத்திலேயே நீடிப்பதற்கும், வென்றவரை அடுத்தவர்கள் நினைவிலிருந்து நீக்காமல் இருப்பதற்கும் அடுத்தவரை மதிக்க வேண்டும். அதைத்தான் சிவகார்த்திகேயன் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார். ஏனெனில் அவர் நேரடியாக டாப் க்ளாஸிலிருந்து வந்து தற்போது மற்றொரு டாப் க்ளாஸில் அமரவில்லை

'உழைத்தால் எவரும் முன்னேறலாம் எடுத்துக்காட்டு இந்த சினிமாதான்'.. இந்த வரிகளை குசேலன் படத்தில் வாலி எழுதியிருப்பார். இந்த வரி பலருக்கு பொருந்திப்போகும். அப்படி பொருந்திப்போகும் பலரில் சிவகார்த்திகேயன் தனித்துவமானவர். யாருமே உழைத்தால்தான் எதிலும் முன்னேற முடியும் என்பது உண்மைதான். ஆனால் சினிமாவில் கொஞ்சம் அதிகம் மெனக்கெட்டு உழைக்க வேண்டும். ஏனெனில் இங்கு பலருக்கு உடனடியாக சினிமா கதவு திறந்துவிடுவதில்லை. அப்படியே திறந்தாலும் உழைப்பு இல்லை என்றால் உடனடியாக அவரை வெளியில் தள்ளி கதவை மூடிக்கொள்ளும் சினிமா.

சிவகார்த்திகேயன் எனும் அசுர உழைப்பாளி

சிவகார்த்திகேயன் எனும் அசுர உழைப்பாளி

திருச்சியில் சராசரி நடுத்தர குடும்பத்தில் பிறந்தாலும் சிவகார்த்திகேயனின் கனவு விண் அளவு இருந்தது. காவல் துறை அதிகாரியாக தந்தை இருந்ததால் என்னவோ கடும் கட்டுப்பாடுகளை உடையது சிவகார்த்திகேயனின் வீடு. பலரைப் போல் பொறியியல் படிக்கும்போது அவருக்கும் கலை தாகம் எடுக்க பல குரல் கலை அவரது தாகத்தை தீர்த்தது. அதன்படி பல கல்லூரி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்ட பரிசுகளை வென்றவர் ஏதேனும் பெரிதாக சாதிக்க வேண்டும் என்ற வேட்கையில் சுற்றிக்கொண்டிருந்தார். ஆனால் வீட்டில் அதற்கான அனுமதி கிடைக்காமல் இருக்க பொய் சொல்லிவிட்டு சென்னை வந்து கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டிலையும் வென்றார்.

ஒரு குடும்பம் தடை போடும்போது அதை மீறுவதற்கு பலருக்கும் தைரியம் வராது. அந்த தைரியம் வரவேண்டுமென்றால் தனது திறமை மீது அபரிமிதமான நம்பிக்கை இருக்க வேண்டும். அந்த நம்பிக்கை சிவகார்த்திகேயனுக்கு இருந்தது. அதனால்தான் பொய் சொல்லிவிட்டு வந்து உண்மையான கலைஞனாக பரிணமித்தார்.

படிப்படியாக சிவகார்த்திகேயன் ஏறிய படிகள்

படிப்படியாக சிவகார்த்திகேயன் ஏறிய படிகள்

சிவகார்த்திகேயன் இப்போது சினிமாவில் டாப் 10 நடிகர்களுக்குள் ஒருவராக இருக்கலாம். ஆனால் அவர் இந்த இடத்துக்கு ஜெட் பிடித்தோ, லிஃப்ட்டில் ஏறியோ வரவில்லை. படிப்படியாக ஒவ்வொரு அடியையும் பார்த்து நிதானமாக நம்பிக்கையுடனும் வைத்து இந்த இடத்திற்கு வந்தார். ஒரு நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆகிவிட்டால் மட்டும் போதாது அதை எப்படி அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்பதற்கு சிவகார்த்திகேயன்தான் மிகச்சிறந்த உதாரணம். வென்றுவிட்டோம் சென்றுவிடலாம் என்று இல்லாமல் அடுத்தடுத்து தனக்கு கிடைத்த வாய்ப்பை எல்லாம் மிகச்சரியாக பயன்படுத்தினார் சிவா.

விஜய் டிவியில் நடந்த நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராகும் கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொண்ட சிவா அதில் பல புதுமைகளை நிகழ்த்தினார். சொல்லப்போனால் தொகுப்பாளர்களுக்கு ஹியூமர் சென்ஸ் அவசியம் என்ற எழுதப்படாத விதியை முதல் முதலில் கொண்டு வந்தவர் சிவகார்த்திகேயன். அவர் அடிக்கும் டைமிங்குகள்ம், நிகழ்ச்சியை நடத்தி செல்லும் விதங்களும் செட்டுக்குள் நின்றுகொண்டிருந்த சிவாவை விஜய் அவார்ட்ஸ் எனும் பிரமாண்ட மேடைக்கு ஏற்றியது.

பிரமாண்ட மேடையில் சிவகார்த்திகேயன்

பிரமாண்ட மேடையில் சிவகார்த்திகேயன்

பொதுவாக மேடை ஏறினால் தொடை நடங்கும் என பலர் கூறுவதுண்டு. ஆனால் சிவகார்த்திகேயன் அதிலும் தனது முத்திரையை பதித்தார். ஒரு விஜய் அவார்ட் நிகழ்ச்சியில் வைரமுத்து விருது வாங்கியபோது, வைரமுத்துவின் குரலிலேயே,"நீங்கள் மட்டும் கள்ளிக்காட்டில் பிறக்காமல் கலிஃபோர்னியாவில் பிறந்திருந்தால் ஹாலிவுட்டிலும் தவிர்க்காமல் வைத்திருப்பார்கள் 6 பாடல்கள்" என கூறியதும் அரங்கமே அதிர்ந்தது. அதுமட்டுமின்றி இவரிடம் என்னமோ இருக்கிறது என திரைத்துறையினரும் சிவாவின் மீது கவனத்தை குவித்தனர். அதன் மூலம் திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்தன.

சிவகார்த்திகேயனுக்காக திறந்த கோடம்பாக்கத்தின் கதவு

சிவகார்த்திகேயனுக்காக திறந்த கோடம்பாக்கத்தின் கதவு

சிவகார்த்திகேயனிடம் மிகப்பெரிய ப்ளஸ்ஸாக பார்க்கப்பட்டது அவர் பேட்டி எடுத்தாலும் சரி, மேடை ஏறினாலும் சரி தன் எதிரே அமர்ந்திருப்பவர்களை வசீகரித்துவிடுவார். அவரது பேச்சில் நகைச்சுவை இருக்கும் ஆனால் வன்மம் இருக்காது; எல்லோரையும் நக்கல் அடிப்பார் ஆனால் அடுத்தவரின் மனதை புண்படுத்தமாட்டார். இப்படித்தான் பல செலிபிரிட்டிகள் சிவாவின் நகைச்சுவை மீதும், திறமை மீதும் மையல் கொண்டனர். அதன் விளைவாக 2012ஆம் ஆண்டு வெளியான 3 படத்தில் தனுஷுக்கு நண்பராகவும், அதே ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான மெரினா படத்தில் கதாநாயகனாகவும் அறிமுகமானார்.

விமர்சனங்களை சந்தித்த சிவகார்த்திகேயன்

விமர்சனங்களை சந்தித்த சிவகார்த்திகேயன்

இயற்கை படைத்த பூமியே இங்கு அவ்வப்போது தடுமாறும்போது சிவகார்த்திகேயன் தடுமாறாமலா இருப்பார். அவரும் ஆரம்பத்தில் தடுமாறினார்தான். அந்த தடுமாற்றம் பலருக்கு மகிழ்ச்சியைத்தான் கொடுத்தது. ஏனெனில் சிவகார்த்திகேயன் ஹீரோவானது கோலிவுட்டில் பலருக்கு பிடிக்கவில்லை என்பதுதான் நிதர்சனம். அதனால் பலரும், சிவகார்த்திகேயனுக்கு சினிமாவில் வாழ்க்கை கொஞ்ச வருடங்கள்தான். சில வருடங்களில் அவரே காணாமல் போய்விடுவார் என்றெல்லாம் ஆரூடம் கூறினர்.

ஆனால் தடுமாறினாலும் தடம் மாறாத சிவகார்த்திகேயன் தனது பயணத்தில் மட்டுமே கவனம் செலுத்தினார். சில படங்கள் வெற்றியடைந்தன; சில படங்கள் தோல்வியடைந்தன. இருப்பினும் சிவா சினிமாவுக்கு அடிப்படையான நடனம், சண்டைகள் என அனைத்திலும் கற்று தேர்ந்தார். அதன் விளைவாக இப்போது அவர் கோலிவுட்டின் டாப் 10 ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். 100 கோடி ரூபாய் வசூலிக்கும் ஹீரோவாகவும் இருக்கிறார்.

நா. முத்துக்குமாருக்கு நன்றி மறக்காத சிவகார்த்திகேயன்

நா. முத்துக்குமாருக்கு நன்றி மறக்காத சிவகார்த்திகேயன்

நன்றி மறப்பது என்பது உலகம் முழுவதும் எல்லோரிடமும் பெருகிவிட்ட ஒன்றாக மாறிவிட்டது. அதுவும் சினிமாவில் அது அதிகமாகவே நடக்கும். ஆனால் சிவகார்த்திகேயன் இதில் விதிவிலக்கு. சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த முதல் படமான மெரினாவுக்கு பாடல்கள் எழுதியவர் மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமார். தனது முதல் படத்தில் பாடல் எழுதிய நா. முத்துக்குமாரை இன்றுவரை மறக்காத சிவகார்த்திகேயன்; தான் எழுதும் பாடல்களுக்கு பெறும் ஊதியத்தை நா. முத்துக்குமாரின் குடும்பத்துக்கு கொடுத்துவருகிறார்.

அதுமட்டுமின்றி நா. முத்துக்குமாரின் பிள்ளைகளுடைய எதிர்காலத்துக்கு எப்போதும் துணை நிற்பேன் என்றும் உறுதி எடுத்திருக்கிறார். இதெல்லாம் சினிமாவில் சிலருக்கு அரிதிலும் அரிதாகத்தான் தோன்றும். அந்த அரிதான சிலரில் சிவகார்த்திகேயனும் ஒருவர்.

நட்பின் இலக்கணம் சிவகார்த்திகேயன்

நட்பின் இலக்கணம் சிவகார்த்திகேயன்

எந்த நிலை சென்றாலும் வந்த வழியையும், துணை நின்றவர்களையும் மறக்கக்கூடாது. அப்படி சிவகார்த்திகேயனுக்கு துணையாக அவரது நண்பர்கள் இருந்திருக்கின்றனர். அவர்களில் முக்கியமானவர் அருண்ராஜா காமராஜ். கல்லூரி காலத்திலிருந்தே சிவாவுடன் பழகியவர். ஆனால் அவர் சினிமாவில் வெல்லும் முன்பாகவே சிவகார்த்திகேயன் ஒரு இடத்தை பிடித்துவிட்டார். உச்ச இடத்திற்கு சென்ற பிறகு நண்பனை துச்சமாக நினைக்காமல் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாகவே நண்பனை இயக்குநராக அறிமுகப்படுத்தி மகிழ்ச்சியடைந்தார்.

அதேபோல் நெல்சன் திலீப்குமாரையும் இன்னமும் மறக்காத சிவகார்த்திகேயன் அவருக்குரிய மரியாதையை கொடுத்து பழகிவருகிறார். கனா படத்தில் நெல்சன் என்ற கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் தோன்றுவது மூலம் உணர்ந்துகொள்ளலாம் நெல்சன் மீது அவர் வைத்திருக்கும் அன்பின் அடர்த்தியை.

மிடில் க்ளாஸிலிருந்து உழைப்பால் வந்த டாப் க்ளாஸ்

மிடில் க்ளாஸிலிருந்து உழைப்பால் வந்த டாப் க்ளாஸ்

சினிமாவில் வெல்வதற்கு திறமையும், உழைப்பும் வேண்டும். ஆனால் வென்றவர் வென்ற இடத்திலேயே நீடிப்பதற்கும், வென்றவரை அடுத்தவர்கள் நினைவிலிருந்து நீக்காமல் இருப்பதற்கும் அடுத்தவரை மதிக்க வேண்டும். அதைத்தான் சிவகார்த்திகேயன் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார். ஏனெனில் அவர் நேரடியாக டாப் க்ளாஸிலிருந்து வந்து தற்போது மற்றொரு டாப் க்ளாஸில் அமரவில்லை. சராசரியான மிடில் க்ளாஸிலிருந்து தனது உழைப்பால் இந்த டாப் க்ளாஸுக்கு வந்திருக்கிறார். அதனால் சிவகார்த்திகேயனுக்கான இந்த டாப் க்ளாஸ் இன்னும் பல காலங்களுக்கு நீடிக்கும். நாளை பிறந்தநாள் கொண்டாடும் சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X