என்னை கவர்ந்த முதல்வரின் சிறுவயது புகைப்படம்.. இதுவரை நான் பார்த்ததில்லை.. சிவகார்த்திகேயன் பேச்சு!
திருச்சி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சியை நடிகர் சிவகார்த்திகேயன் பார்வையிட்டார்.
திருச்சியில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் எங்கள் முதல்வர் எங்கள் பெருமை என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சி நடைபெறுகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் நடைபெறும் இந்த கண்காட்சியை பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் பார்வையிட்டு வருகின்றனர்.

எங்கள் முதல்வர் எங்கள் பெருமை : இந்த கண்காட்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற கூட்டங்கள், தொடங்கி வைத்த திட்டங்கள் உள்பட பல்வேறு நிகழ்வுகளின் 400க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. கண்காட்சியை பிரபல திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன் திங்கள்கிழமை மாலை பார்வையிட்டார். அப்போது அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி மாநகர மேயர் மு.அன்பகழன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
அனைவருக்கும் நன்றி : இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சிவகார்த்திகேயன், நான் பிறந்து வளர்ந்த இந்த ஊரில் இப்படி ஒரு கண்காட்சி அமைந்து இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த கண்காட்சியை பார்க்க வந்ததில் எனக்கு மகிழ்ச்சி. இதற்கு அழைப்பு விடுத்த அமைச்சர் கே.என்.நேருக்கு அவர்களுக்கு மனமார்த்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு அரசு ஊழியரின் மகன் என்ற முறையில், அமைச்சர், மேயர் ஆகியோருடன் இணைந்து இந்த கண்காட்சியை பார்வையிடுவதில் எனக்கு பெருமை அடைகிறேன்.

என்னை கவர்ந்த புகைப்படம் : அந்த கண்காட்சியில் முதல்வரின் சிறு வயது புகைப்படத்தை என்னை மிகவும் கவர்ந்தது, அந்த படத்தை நான் இதுவரை நான் பார்த்ததே இல்லை, மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதையும் தத்ரூபமாக காட்சிப்படுத்தி இருந்தார்கள் அதைப்பார்ப்பதற்கு பிரம்மிப்பாக இருந்தது.
பல தியாகம் : இந்த கண்காட்சியைப் பார்த்து வாழ்க்கையில் பெரிய உயரத்தை அடைய வேண்டுமானால் நிறைய வலிகளையும், தியாகத்தையும் தாண்டித்தான் வர வேண்டும் என்பது தெரிகிறது. பெரிய ஆளுமை கொண்ட மாபெரும் தலைவரின் மகனாக இருந்தாலும், வாழ்க்கையில் நிறைய விஷயங்களைத் தாண்டி, நிறைய சாதனைகளைப் புரிந்து இந்த இடத்திற்கு முதல்வர் முக ஸ்டாலின் வந்துள்ளார் ,இந்த கண்காட்சியை அனைவரும் தவறாமல் வந்து பாருங்கள் என் சிவகார்த்திகேயன் பேசினார்.


Click it and Unblock the Notifications











