பிரின்ஸ் கதை இதுதாங்க.. போட்டுடைத்த சிவகார்த்திகேயன்.. கார்த்திக்கும் வாழ்த்து!
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன், உக்ரைன் நாட்டை சேர்ந்த நடிகை மரியா மற்றும் சூரி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது பிரின்ஸ்.
இந்தப் படம் தீபாவளியையொட்டி வரும் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தீபாவளிக்கு வெளியாகும் சிவகார்த்திகேயனின் முதல் படம் இது.
இதனிடையே இந்தப் படத்தின் பிரமோஷன்களில் பிரின்ஸ் மூவி டீம் சிறப்பான வகையில் ஈடுபட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய காமெடி சென்சால் ரசிகர்களை கட்டிப் போட்டு வருகிறார். இவரது படங்களில் துவக்கம் முதலே காமெடி கலாட்டாக்களை உலவவிட்டு அதன்மூலமே படத்தை வெற்றி பெற வைத்து வருகிறார். ஆரம்ப காலங்களில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்கள் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தன.

ஹாட்ரிக் கொடுக்குமா பிரின்ஸ்?
டாக்டர் மற்றும் டான் படங்களை நடித்தும் தயாரித்தும் வெளியிட்ட சிவகார்த்திகேயன் இரண்டிலும் வெற்றி பெற்றார். இரண்டு படங்களும் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்து அவருக்கு வெற்றியை பெற்றுத் தந்தன. இதையடுத்து தற்போது தீபாவளியையொட்டி வரும் 21ம் தேதி பிரின்ஸ் படம் வெளியாகவுள்ளது. இந்தப் படமும் வெற்றி பெற்று அவருக்கு ஹாட்ரிக்கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

150 நடிகைகளிடம் ஆடிஷன்
இந்தப் படத்தில் உக்ரைன் நாட்டை சேர்ந்த மரியா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகியுள்ளார். இதையொட்டி பல நாடுகளை சேர்ந்த 150 நடிகைகளிடம் ஆடிஷன் நடத்தப்பட்டுள்ளதாகவும் இறுதியில் மரியாவை இறுதி செய்ததாக சமீபத்திய பேட்டியில் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

சிறப்பாக வேலை வாங்கிய இயக்குநர்
அவருக்கு தமிழ் தெரியாத நிலையில், தான் கூறுவதை புரிந்துக் கொள்ள அவர் மிகுந்த சிரமப்பட்டதாகவும் ஆனால் இயக்குநர் மட்டும் எங்கிருந்தோ வந்து உடனடியாக காட்சிகளை மரியாவிற்கு விளக்கிவிட்டு வேலை வாங்கிவிடுவார் என்றும் சிவகார்த்திகேயன் நகைச்சுவையுடன் தெரிவித்தார்.

குடும்பத்துடன் பார்க்கலாம்
இந்தப் படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற படக்குழு படத்தின் பல்வேறு சுவாரஸ்யங்களை பகிர்ந்துக் கொண்டது. இதையடுத்து பிரஸ்மீட்டில் பேசிய சிவகார்த்திகேயன், இந்தப் படம் கலர்புல்லான, ஜாலியான குடும்பத்துடன் சென்று பார்க்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

காத்திருக்கும் சர்ப்பிரைஸ்கள்
படத்தில் ரசிகர்களுக்கு சர்ப்பிரைஸ்கள் காத்திருப்பதாகவும் இயக்குநர் அனுதீப் படத்தில் புதுமையான வகையில் காமெடியை பயன்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்த சிவகார்த்திகேயன், இதற்கு ரசிகர்கள் எப்படி ரியாக்ட் செய்கிறார்கள் என்பதை பார்க்க தான் மிகுந்த ஆவலாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

கதையை சொன்ன சிவகார்த்திகேயன்
ஒரு இந்திய இளைஞன் பிரிட்டிஷ் பெண்ணை காதலிக்கும் சிம்பிளான கதைக்களத்தில்தான் சிறப்பான காமெடியை அனுதீப் புகுத்தியுள்ளதாகவும் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து தன்னுடைய படத்தினுடன் வித்தியாசமான கதைக்களத்துடன் ரிலீசாகவுள்ள கார்த்தியின் சர்தார் படத்திற்கும் அவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











