Nandhan: கண் கலங்கிட்டேன்.. வேகமாக கைதட்டினேன்.. நந்தன் படத்துக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு!
சென்னை: இயக்குநர் இரா. சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் நந்தன். இந்தப் படம் இன்று அதாவது செப்டம்பர் 20ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது. படத்தில் கதையின் நாயகனாக சசிகுமார் நடித்துள்ளார். இயக்குநர் இரா.சரவணன் ஏற்கனவே கத்துக்குட்டி, உடன்பிறப்பே ஆகிய படங்களை இயக்கி கவனம் ஈர்த்தவர். படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். சசிக்குமாருடன் சமுத்திரகனி உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். இந்நிலையில் இன்று படம் பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன் படம் குறித்து தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே படத்தினைப் பார்த்த விமர்சகர்கள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் படத்தை பாராட்டி வருகின்றனர். படத்தின் ரிலீஸ்க்கு முன்னர் இயக்குநர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். செய்தியாளர்கள் தரப்பில் இருந்து, முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி தமிழ்நாட்டின் பொற்கால ஆட்சி என ஆளும் கட்சியினர் கூறி வருகின்றார்கள். அப்படி இருக்கும்போது, முதலமைச்சர் ஸ்டாலினின் புகைப்படத்தை படத்தில் வைத்துள்ளீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு " நான் பொய் சொல்லவில்லை. படத்தில் காண்பிக்கப்பட்டுள்ள தேதியில் நான் 2024ஆம் ஆண்டைத்தான் காட்சிப் படுத்தியுள்ளேன். 2024ஆம் ஆண்டினை படத்தில் காட்டிவிட்டு வேறு ஒருவரை முதலமைச்சராக என்னால் காட்ட முடியாது. இப்போது சாதிய கொடுமைகள் நடைபெறுகின்றது. முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியிலும் சாதிய கொடுமைகள் நடைபெறுகின்றது. இந்தப் பிரச்னைகள் இன்னும் தீர்ந்தபாடில்லை. முதலமைச்சர் ஸ்டாலினின் புகைப்படத்தை வேறு உள்நோக்கத்துடன் படத்தில் காட்சிப்படுத்தவில்லை" என பதில் அளித்தார். இவரது பதில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. குறிப்பாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி குறித்து நேரடியாகவே விமர்சனம் செய்துள்ளார் என பேச்சு எழுந்தது.
சிவகார்த்திகேயன்: இந்நிலையில் இன்று படம் பார்த்த நடிகரும் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் படம் குறித்து தனது விமர்சனத்தைக் கூறினார். அப்போது, “ படத்தில் சசிக்குமார் அண்ணன் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என நினைத்துக் கொண்டுதான் படம் பார்க்கச் சென்றேன். படம் எப்படியும் ராவாக இருக்கப்போகின்றது என நினைத்தேன். படத்தின் முதல் காட்சியிலேயே இயக்குநர் ரா. சரவணன் என்னை பிரமிப்பில் ஆழ்த்திவிட்டார். எனக்கு இருக்கும் சினிமா அறிவுக்கு இந்தப் படத்தின் முதல் காட்சி பிரமிப்புதான். அதன் பின்னர் சசிக்குமார் அண்ணன் தனது வெள்ளந்தியான நடிப்பில் என்னை மேலும் பிரமிக்க வைத்துவிட்டார்.
அழுதேன்: படம் ராவாக இருக்கும் என எனக்குத் தெரியும். ஆனால் உண்மை இவ்வளவு நெருக்கமாக படம் இருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. படம் பார்த்தப்ப நிறைய இடத்தில் சிரிச்சேன். நிறைய இடத்தில் யோசிச்சேன். நிறைய இடத்தில் கண் கலங்கினேன். கடைசியா வேகமா கைத்தட்டினேன். இது எல்லாவற்றையும் ஏற்படுத்தியது இரா. சரவணனின் எழுத்தும் மேக்கிங்கும்தான். நந்தன் அருமையான படைப்பு” என பேசியுள்ளார். இந்த வீடியோவை படத்தின் இயக்குநர் இரா. சரவணன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











