ராட்சசன் இயக்குனரின் கூட்டணியில் சிவகார்த்திகேயனின் அடுத்த படம் தயாராகிறது!
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் திரைப்படத்தில் கல்லூரி மாணவனாக நடித்து வருகிறார்.
Recommended Video
டான் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருக்க அதைத் தொடர்ந்து மீண்டும் ஒரு அறிமுக இயக்குனரின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
இந்த நிலையில் புதிதாக ராட்சசன் பட இயக்குனரின் கூட்டணியில் சிவகார்த்திகேயன் வித்தியாசமான கதையில் நடிக்க இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பெரும் குழப்பத்திற்கு பின்
நடிகர் சிவகார்த்திகேயனின் ஒவ்வொரு திரைப்படங்களும் வசூலை வாரி குவித்து வருகிறது. நம்ம வீட்டுப் பிள்ளை குடும்பங்கள் கொண்டாடும் மிகச்சிறந்த குடும்பப் படமாக வெளியாகி வசூல் மழையை பொழிந்தது. அதைத் தொடர்ந்து தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்த டாக்டர் திரைப்படம் கொரோனா சூழலால் திரையரங்குகளில் வெளியாகுமா இல்லை ஓடிடியில் வெளியாகுமா என பெரும் குழப்பத்திற்கு பின் வெற்றிகரமாக திரையரங்குகளில் வெளியானது.

காமெடிக்கு முக்கியத்துவம்
மருத்துவ துறையிலுள்ள மாஃபியாக்களை பற்றிய படமாக இருந்தாலும் படம் முழுக்க காமெடிகள் நிறைந்திருக்க ரசிகர்களின் சிரிப்பலைகள் அரங்கம் முழுவதும் அதிர்கிறது . நெல்சன் திலீப்குமார், சிவகார்த்திகேயன் கூட்டணி முதல் முறையாக இணைந்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக இதில் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளதால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் இப்படம் வெகுவாக கவர்ந்து வெற்றி நடைபோடுகிறது.

சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக
டாக்டர் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் இப்பொழுது அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் டான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி,சூரி, சிவாங்கி, புகழ்,ஆர் ஜே விஜய் மற்றும் ஹீரோயின் பிரியங்கா அருள் மோகன் என பலர் இந்த படத்தில் நடித்து வர இதில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடித்துள்ளார்.

ராட்சசன் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில்
டான் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் தருவாயில் அடுத்த படம் அறிமுக இயக்குனர் அசோக் என்பவரின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார் என கூறப்பட்டது. இந்த படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த நிலையில் ராட்சசன் பட இயக்குனர் ராம்குமார் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்கும் புதிய திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக கோலிவுட்டில் செய்திகள் வலம் வருகின்றன.

காத்திருக்க முடியாது
ராட்சசன் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு ராம்குமார் தனுஷ் கூட்டணியில் திரைப்படம் உருவாகிறது என கூறப்பட்டது. ஆனால் தனுஷ் பல்வேறு படங்களில் மிக பிஸியாக இருப்பதால் கிட்டத்தட்ட ஓராண்டாக இயக்குனர் ராம்குமார் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு மேலும் காத்திருக்க முடியாது என முடிவெடுத்த ராம்குமார் இப்பொழுது சிவகார்த்திகேயனுடன் புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











