A.K - S.K: வேற லெவல்! கார் ரேஸில் பறக்கும் அஜித்குமார்.. சிவகார்த்திகேயன் சொன்ன முக்கியமான விஷயம்
சென்னை: நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக உள்ளார். இவரது படம் எப்போது ரிலீஸ் ஆனாலும் தியேட்டர்கள் திருவிழாபோல மாறிவிடும். இவரது நடிப்பில் இந்த ஆண்டு குட் பேட் அக்லி, விடாமுயற்சி ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து, இரண்டு படங்களும் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இதில் குட் பேட் அக்லி படம் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாகவே அறிவிப்பு வெளியானது. இப்படியான நிலையில், அஜித்குமார் துபாயில் நடைபெற்று வரும் 24 மணி நேர கார் பந்தையத்தில் கலந்து கொண்டுள்ளார். இன்று போட்டி தொடங்குவதால் அவருக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
நடிகர் அஜித்குமாருக்கு சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல் கார் பந்தயத்தில் கலந்து கொள்வது, பைக் பந்தயத்தில் கலந்து கொள்வதில் ஆர்வம் கொண்டவர். அதிலும் குறிப்பாக கார் பந்தயம் என்றால் அஜித்குமாருக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. இப்படியான நிலையில் இந்த ஆண்டு துபாயில் நடக்கும் ஜி.டி.3 ரக கார் பந்தயத்தில் அஜித்குமார் கலந்து கொண்டுள்ளார்.

இந்தப் பந்தயத்தில் கலந்து கொள்ள அவர், தானே சொந்தமாக ஒரு அணியை உருவாக்கியுள்ளார். அணியின் உரிமையாளராகவும், அணியின் கேப்டனாகவும் அஜித் செயல்படுகின்றார். மேலும் அணியில் அவருடன் சேர்த்து மொத்தம் 4 வீரர்கள் உள்ளனர். அஜித் தற்போது களமிறங்கியுள்ள கார் பந்தயமானது, மொத்தம் 24 மணி நேரங்கள் தொடர்ந்து நடைபெறும். இதில் அதிக தொலைவினை கடக்கும் அணிகள் அடுத்த கட்டத்திற்கு தேர்வாகும். நேற்று நடைபெற்ற தகுதிச் சுற்றில் அஜித்தின் அணி 7வது இடம் பிடித்தது.
அஜித்குமார்: அஜித்துக்கு இந்த ஆண்டு மிகவும் முக்கியமான ஆண்டாக உள்ளது. அவரது இரண்டு படங்கள் ரிலீஸ், கார் ரேஸ் பந்தயத்தில் கவனம் செலுத்துவது என மிகவும் முக்கியமான ஆண்டாக இது மாறியுள்ளது. இந்த போட்டி வரும் அக்டோபர் மாதம் வரை நடைபெறவுள்ளது. மேலும் அஜித்குமார் இனி வரும் காலங்களில் ரேஸ் நடக்கும் காலகட்டங்களில் படங்களில் நடிக்க மாட்டேன் என பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது ரசிகர்களுக்கு ஒரு வகையில் மகிழ்ச்சியையும் ஒரு வகையில் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
விபத்து: பயிற்சியின்போது அஜித்குமாரின் கார் விபத்துக்குள்ளானது. ஆனால், அவருக்கு எதுவும் ஏற்படாததால், கார் ரேஸில் அவர் கலந்து கொள்கின்றார். அஜித் பயிற்சி எடுத்தபோது, அவரது கார் பக்கவாட்டுச் சுவரில் மோதி காற்றில் பறந்தது. இது தொடர்பான வீடியோ வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது மட்டும் இல்லாமல், நல்வாய்ப்பாக இந்த விபத்தினால் அஜித்துக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.

சிவகார்த்திகேயன்: இப்படியான நிலையில் இன்று தொடங்கவுள்ள இந்த கார் ரேஸ் பந்தயத்தில் கலந்து கொள்ளும் அஜித் மற்றும் அவரது அணிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ அன்பிற்குரிய அஜித்குமார் சார். துபாயில் நீங்கள் கலந்து கொள்ளும் 24 மணி நேர கார் பந்தயத்திற்காக வாழ்த்துகள். உங்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையும் அதற்காக உங்களது அர்பணிப்பும் என்னைப் போன்ற பலருக்கு ஊக்கமாக உள்ளது. இந்த கார் பந்தயத்திலும் நீங்கள் மாபெரும் வெற்றியைப் பெற எனது வாழ்த்துகள் சார்” என பதிவிட்டுள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











