Congratulations Major Mugund.. வெளியானது அமரன் படத்தின் சாய் பல்லவி இன்ட்ரோ.. க்யூட்!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் அமரன் படம் மிகச்சிறப்பான வகையில் உருவாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தை இயக்கியுள்ளார் ராஜ்குமார் பெரியசாமி. இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் மனைவி இந்துவாக நடித்துள்ளார் சாய் பல்லவி.
இந்தப் படம் தீபாவளி ரிலீசாக வரும் அக்டோபர் 31ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். அவரது கெட்டப் தற்போது வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர்.

நடிகர் சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயன் டிவியிலிருந்து வெள்ளித்திரைக்கு நடிகராக வந்த நிலையில், தனுஷுடன் இணைந்து 3 படத்தில் காமெடியனாக நடித்திருந்தார். அவரது பாடி லேங்குவேஜ் மற்றும் தனுஷ் -ஸ்ருதிஹாசன் காதலால் அல்லல்படுவது உள்ளிட்டவை பார்த்தவர்களை வெகுவாக ரசிக்க வைத்தது. சிறிது நேரமே இந்தப் படத்தில் அவர் வந்திருந்தாலும் ஏராளமான ரசிகர்களை ரசிக்க வைத்திருந்தார். அடுத்த காமெடியன் சினிமாவிற்கு கிடைத்து விட்டார் என்றே கொண்டாட செய்திருந்தார். ஆனால் தான் காமெடியனாக மட்டுமில்லாமல் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாகவும் மாறி ரசிகர்களை கவர்வேன் என்பதை தற்போது சாத்தியப்படுத்தியுள்ளார் சிவகார்த்திகேயன்.
அமரன் படம்: தொடர்ந்து மெரினா உள்ளிட்ட படங்களில் நடித்த சிவகார்த்திகேயனுக்கு, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்கள் சிறப்பாக கைக்கொடுக்க, சூரியுடன் இணைந்து காமெடியில் அதகளம் செய்திருந்தார். இந்நிலையில் காமெடியை விட்டுவிடாமல் அதிலேயே சிறப்பாக பயணித்துவந்த சிவகார்த்திகேயன் தற்போது முழுமையான அதிரடி ஆக்ஷன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் காமெடி ட்ராக்கிற்கு அவசியம் இருக்குமா என்பது சந்தேகம்தான். படம் வரும் அக்டோபர் 31ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் தீபாவளி கொண்டாட்டமாக ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சாய் பல்லவி இன்ட்ரோ: மேஜர் முகுந்தின் வாழ்க்கையை மையமாக வைத்து பயோபிக்காக உருவாகியுள்ளது அமரன் படம். இந்தப் படத்தின் அதிகப்பட்சமான சூட்டிங் காஷ்மீரில் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில் இன்றைய தினம் படத்தில் முகுந்தின் மனைவியாக இந்து ரெபெக்கா வர்கீஸாக நடித்துள்ள நடிகை சாய் பல்லவியின் இன்ட்ரோவை தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ளது. இதில் கடந்த 2015ம் ஆண்டில் குடியரசு தின விழாவில் பங்கேற்ற முகுந்தின் மனைவியை காட்டிவிட்டு, அவரது பேச்சையும் பதிவு செய்துவிட்டு, அப்படியோ அதில் சாய் பல்லவியை பொருத்தியுள்ளது படக்குழு. இது பார்ப்பதற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகார்த்திகேயன் -சாய் பல்லவி கெமிஸ்ட்ரி: தொடர்ந்து இந்த இன்ட்ரோ வீடியோவில் சாய் பல்லவியின் அழகான தருணங்கள் காட்டப்படுகின்றன. அவர் முகுந்தே என்று கூறுவதை பார்க்க பார்க்க கொள்ளை அழகாக காணப்படுகிறது. சிவகார்த்திகேயன், அணிவகுப்பில் போவதும், அவருக்கு congratulations என்று சாய் பல்லவி கூறுவதுமாக இந்த வீடியோ தொடர்கிறது. கேப்டன் முகுந்த், மேஜர் முகுந்த் என்று சாய் பல்லவி அடுத்தடுத்த பாராட்டுக்களை கூறுவதும் அதற்கு சிவகார்த்திகேயன், சாரி, சாரி மேஜர் முகுந்த் மகிழ்ச்சியுடன் ரிப்ளை செய்வதுமாக இந்த வீடியோ மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சிவகார்த்திகேயனா என்று கேட்குமளவிற்கு இந்த வீடியோவில் பாந்தமாக பொருந்தியுள்ளார் அவர்.
தீபாவளி ரிலீஸ்: படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளதாக இரு தினங்களுக்கு முன்பு ஜிவி பிரகாஷ்குமார் கூறியிருந்தநிலையில், அதைத்தான் படக்குழுவினர் இன்றைய தினம் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சாய் பல்லவியின் இன்ட்ரோவை மிகச்சிறப்பாக பதிவு செய்துள்ளது. அடுத்ததாக சிவகார்த்திகேயனின் இன்ட்ரோ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராணுவ வீரரின் பயோபிக்காக இருந்தபோதிலும், இதில் அழகான காதலும் இழையோடும் என்பது இந்த வீடியோ மூலம் வெளிப்பட்டுள்ளது. இதனிடையே தீபாவளி ரிலீசையும் படக்குழுவினர் இந்த வீடியோ மூலம் உறுதி செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











