என் 60 ஆண்டு அனுபவத்தில் அத்தனை லட்சணமும் நிறைந்த ஒரே நடிகை வைஜெயந்தி மாலாதான்.. சிவக்குமார்
சென்னை: கடந்த 60 ஆண்டுகளில் நான் பார்த்த நடிகைகளில் அத்தனை சாமுத்திரிகா லட்சணமும் ஒருங்கே அமைந்த ஒரே நடிகை வைஜெயந்தி மாலாதான் என்று நடிகர் சிவக்குமார் கூறியுள்ளார்.
ஒருவரை சிலையாக வடிக்கலாம் என்றார் வைஜெயந்தி மாலாதான் அதற்கு முழுமையாக தகுதியானவர் என்றும் சிவக்குமார் கூறினார்.
சென்னை பார் அசோசியேஷனின் 150வது ஆண்டு விழாவையொட்டி நேற்று உயர்நீதிமன்ற வளாகத்தில் நடந்த சொற்பொழிவில் கலந்து கொண்டு சிவக்குமார் உரையாற்றினார். அப்போதுதான் இப்படிக் கூறினார் சிவக்குமார்.
சிவக்குமார் பேச்சிலிருந்து...

அழகி முகம்..
சிறுவயதில் சிலரது முகம் அழகற்று இருக்கலாம். ஆனால் அவர்களின் நல்ல வாழ்க்கை முறையின்படி பின்னர் அழகிய முகத் தோற்றத்தைப் பெற்றுக்கொள்கின்றனர். காந்தியடிகள், ஆபிரகாம்லிங்கன் ஆகியோர் இதற்கு நல்ல உதாரணம்.

166 முறை பிரணாயாமம் செய்தால்
ஒவ்வொரு நாளும் 166 முறை பிரணாயாமம் செய்தால் 166 ஆண்டுகள் வாழலாம் என்று முன்னோர் கூறியுள்ளனர். ஆனால், அது மிகவும் கடினமான விஷயம். நான் தினமும் 84 முறை பிரணாயாமம் செய்கிறேன்.

இரு பக்கமும் சமம்... சிலரே!
மனிதர்களில் இரண்டு பக்க முகமும் சமஅளவில் இருப்பவர்கள் அபூர்வம். ஏதாவது ஒரு பக்கத்தில் ஒரு விஷயம் இருக்கும். எனக்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இடது தாடை சற்று பெரிதாக இருக்கும். எம்.ஜி.ஆருக்கும், சிவாஜி கணேசனுக்கும் வலது தாடை சற்று பெரிதாக அமைந்திருக்கும்.

சாமுத்திரிகா.. வைஜெயந்தி
கடந்த 60 ஆண்டுகளில் நான் பார்த்த அளவில் எல்லா லட்சணமும், அதாவது சிலை வடிக்கும் அளவுக்கு சாமுத்திரிகா லட்சணங்கள் ஒருங்கே அமைந்த நடிகை வைஜந்தி மாலாதான்.

பசிச்சா சாப்பிடுங்க
தினமும் காலை 4 மணிக்கு எழுந்து ஆறரை மணி வரை நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை செய்ய
வேண்டும். பசித்த பின்னர் சாப்பிடும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும். இதனால் ஆயுளில் 10 ஆண்டுகள் கூடும்.

7 மணி நேரம் கண்டிப்பா தூங்குங்க
அதுபோல் தினமும் 7 மணி நேரம் தூங்க வேண்டும். 5 மணி நேரம் மட்டும் தூங்கினால் இருதய நோய் வருவதற்கு 40 சதவீதமும், 3 மணி நேரம் மட்டுமே தூங்கினால் அந்த நோய் வருவதற்கு 70 சதவீதமும் வாய்ப்புள்ளது என்றார் சிவக்குமார்.


Click it and Unblock the Notifications











