கல்யாணம் செய்து வைக்கலனா அவ்ளோதான்.. சிவக்குமாரை ப்ளாக் மெயில் செய்த சூர்யா - ஜோதிகா
சென்னை: தங்களுக்கு திருமணம் செய்துவைக்கவில்லை என்றால் இப்படியே இருந்துவிடுவோம் என சூர்யாவும், ஜோதிகாவும் தன்னிடம் கூறியதாக நடிகர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
சூர்யாவும், ஜோதிகாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு தேவ், தியா என்ற இரு குழந்தைகள் உள்ளனர். கடந்த 2006ஆம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் ஆனது. கோலிவுட்டின் நட்சத்திர தம்பதிகளாக வலம் வரும் இருவரும் ஒருவரை ஒருவர் முழுவதுமாக புரிந்துவைத்திருக்கின்றனர்.

ஜோதிகா எனும் மகா நடிகை
ஜோதிகா வாலி படத்தின் திரையுலகில் அறிமுகமானார். முதல் படத்தில் ஒரு பாடலில் மட்டும் வந்தாலும் அடுத்தடுத்து ஹீரோயினாக நடித்தார். தொடர்ந்து 90கள் மற்றும் 2000த்தின் ஆரம்பம் வரை முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகாவின் நடிப்புக்கு பலர் ரசிகர்கள். குறிப்பாக சந்திரமுகி, மொழி உள்ளிட்ட படங்கள் ஜோதிகா எவ்வளவு பெரிய நடிகை என்பதை பறைசாற்றியது. திருமணத்திற்கு பிறகு நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்த சமீபகாலமாக மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

கோலிவுட்டின் ஸ்டார் சூர்யா
சூர்யா நேருக்கு நேர் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படம் விஜய்யுடன் நடித்து அடையாளப்பட்ட சூர்யா போகப்போக தனது திறமையை வளர்த்துக்கொண்டார். அதனையடுத்து கதைகளில் கவனம் செலுத்திய சூர்யா கோலிவுட்டின் தவிர்க்க முடியாத ஹீரோக்களில் ஒருவர் ஆனார். சமீபத்தில் அவர் நடித்த சூரரைப் போற்று, ஜெய் பீம் ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தன. அவர் தற்போது சிவா இயக்கத்தில் நடித்துவருகிறார்.

சூர்யா - ஜோதிகா இடையே மலர்ந்த காதல்
வாலி படத்தில் அறிமுகமான ஜோதிகா வசந்த் இயக்கத்தில் சூர்யா இரண்டாவது முறையாக நடித்த பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடித்தார். இந்தப் படம்தான் சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து நடித்த முதல் படமாகும். முதல் படத்திலேயே இருவரும் நெருங்கி பழகினர். அந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் தீவிரமாக காதலித்துவந்த சூழலில் நடிகரும், சூர்யாவின் தந்தையுமான சிவக்குமார் இவர்களது காதலுக்கு மறுப்பு தெரிவித்ததாக அப்போது பேசப்பட்டது.

சிவக்குமாரை ப்ளாக்மெயில் செய்த சூர்யா, ஜோதிகா
இந்நிலையில் சிவக்குமார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சூர்யா - ஜோதிகா திருமண விவகாரம் குறித்து பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "சூர்யாவும், ஜோதிகாவும் காதலிப்பதை எங்களிடம் சொல்லிவிட்டு நான்கு வருடங்கள் காத்திருந்தனர். ஒருநாள் என்னிடம் வந்து இருவரும், 'எங்களுக்கு நீங்கள் திருமணம் செய்து வைக்கவில்லை என்றால் இப்படியே இருந்துவிடுவோம்' என்றனர். இதனையடுத்து திருமணம் நடத்திவைக்கப்பட்டது.
என்னைப்பொறுத்தவரை குழந்தையை பெற்று படிக்க வைத்து அவர்கள் வேலை பார்த்து சுயமாக சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டால் அவர்களது வாழ்க்கை பற்றி முடிவெடுக்க அவர்களுக்கு முழு உரிமை உண்டு" என கூறினார்.


Click it and Unblock the Notifications











