ஆரம்பத்தில் சூர்யா - ஜோதிகா காதலை எதிர்த்தேனா...? - சிவக்குமார் விளக்கம்
சென்னை: நடிகர் சிவக்குமாரின் மூத்த மகனான சூர்யா, , கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் நடிகை ஜோதிகாவைக் காதலித்து மணந்தார். தற்போது அவர்களுக்கு தியா, தேவ் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
ஆரம்பத்தில் சூர்யா - ஜோதிகா காதலை சிவக்குமார் எதிர்த்ததாகவும், பின்னர் சம்மதித்து அவர்களுக்கு திருமணம் செய்து வைத்ததாகவும் கூறப்படுவதுண்டு.
இது தொடர்பாக ஆனந்தவிகடனின், விகடன் மேடைப் பகுதியில் வாசகர் ஒருவர் நடிகர் சிவக்குமாரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு சிவக்குமார் அளித்துள்ள பதிலாவது :-

நானும் காதலிச்சிருக்கேன்...
நானே 150 படங்கள்லயாவது ஹீரோயின்களை ஆறு, மலை, மரங்களைச் சுத்தியும், மடியில் படுக்க வெச்சும் ‘காதலிச்சு' நடிச்சிருக்கேன். அப்புறம் நான் எப்படி காதலை எதிர்ப்பேன்? ஆனா, எது காதல்ங்கிறதுல ஒரு புரிதல் அவசியம்.

இனவிருத்திக்கான ஈர்ப்பு...
காதல்ங்கிறது இனவிருத்திக்கான ஓர் அடிப்படை ஈர்ப்பு. ஈ, எறும்பு, யானைனு சகல ஜீவராசிகளும் இனவிருத்தி செய்யுதுங்க. சேவல் சிறகடிச்சு, கொக்கொக்னு கத்திக் கத்திச் சுத்தி வந்து கோழியைத் தயார் பண்ற மாதிரி, மனுஷங்க கவிதை, வசனம், பாசம், அன்புனு அந்த ஈர்ப்பை வெளிப்படுத்துறாங்க.

காதல் பரவசம்...
20 மைல் தூரம் வேகாத வெயில்ல பைக்ல போய் மல்லிகைப் பூ, வியர்வையும் கலந்த வாடையோட பீச்ல காதலியைப் பார்க்கிறப்ப ஏர்படுற அதே பரவசம், அந்தப் பொண்ணு கல்யாணத்துக்குப் பிறகு விடியற்காலையில தலையை விரிச்சுப்போட்டு வாயில பிரஷ்ஷை வெச்சுக்கிட்டு கண்ணாடி முன் பல் துலக்குறப்பவும் இருக்குமா? அப்பவும் இருந்துட்டா அந்தக் காதலை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தலாம்.

சோதனைக்காலம்...
‘ஒருத்தரை ஒருத்தர் விரும்புறோம்'னு சூர்யாவும், ஜோதிகாவும் சொன்னப்ப, அந்தக் காதல் வலுவா இருக்கா, அது அன்புங்கற அடுத்த கட்டத்துக்குப் போயிருச்சானு சோதிக்கக் கால அவகாசம் எடுத்துக்கிட்டோம்.

அடுத்து டும்... டும்...டும் தான்
பையன் பொறுப்பா இருக்கான், பொண்ணு பக்குவமா இருக்கா, அவங்களுக்கு இடையில் காதல் வலிமையா இருக்குனு எங்களுக்கே நம்பிக்கை வந்த பிறகு மனசார வாழ்த்தி கல்யாணம் பண்ணி வெச்சோம்.

பெற்றோர் கடமை...
மத்தபடி, உன் குழந்தை உன் வழியாக வந்த இன்னோர் ஆத்மா. அந்தக் குழந்தையை வளர்த்து ஆளாக்கி ஒழுக்கத்தைச் சொல்லிக் கொடுக்கறதோட பெத்தவங்கக் கடமை முடிஞ்சிருது.

அஸ்தமனச் சூரியன்...
வெளிப்படையா சொன்னா, பிள்ளைங்க மேல அப்பா - அம்மா வெச்சிருக்கிற அன்பும், பாசமும், உச்சி வெயிலைத் தாண்டி அஸ்தமனத்தை நோக்கிப் போற சூரியன் மாதிரி தான்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











