Jigarthanda XX: நடிப்புக்கு பாதை போட்டுக் கொடுத்தவர்.. எஸ்ஜே சூர்யா சொன்னத பாருங்க!
சென்னை: நடிகர் எஸ்ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகியுள்ளது ஜிகர்தண்டா XX படம்.
இந்தப் படம் தீபாவளியையொட்டி கடந்த 10ம் தேதி ரிலீசான நிலையில், ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வெற்றிநடை போட்டு வருகிறது.

கார்த்தியின் ஜப்பான் படத்துடன் ஜிகர்தண்டா XX படமும் தீபாவளி ரிலீசாக வெளியான நிலையில், ஜப்பான் படம் ரசிகர்களை கவர தவறியுள்ளது.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம்: நடிகர்கள் ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா, நிமிஷா விஜயன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள ஜிகர்தண்டா XX படம் கடந்த 10ம் தேதி தீபாவளி ரிலீசாக வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா படம் மிகப்பெரிய வரவேற்பையும் தேசிய விருதையும் பெற்றது. இந்தப் படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர்.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் டீம் உற்சாகம்: இந்நிலையில் 9 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்நிலையில் இந்தப் படம் கொடுத்த வெற்றியால் படக்குழுவினர் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். தொடர்ந்து செய்தியாளர்களையும் சந்தித்து வருகின்றனர். தற்போது கோவையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்து, வார நாட்களிலும் படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வெற்றிகரமாக ஓடி வருவதாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.
செய்தியாளர் சந்திப்பு: இந்த செய்தியாளர் சந்திப்பில் ராகவா லாரன்ஸ், கார்த்திக் சுப்புராஜ் மற்றும் எஸ்ஜே சூர்யா பங்கேற்றனர். முதலில் பேசிய எஸ்ஜே சூர்யா, தான் நடிக்கும் ஆர்வத்தில்தான் சினிமாவிற்கு வந்ததாகவும் தன்னுடைய நடிப்புக்கு தீனி போடும்வகையில் இறைவி என்ற படத்தில் நடிக்க தனக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தவர் கார்த்திக் சுப்புராஜ் என்று பாராட்டு தெரிவித்தார். இந்தப் படம் தன்னுடைய கேரியரில் மேஜிக் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
வெற்றிப் பாதை போட்டுக் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்: இந்தப் படத்தின்மூலம்தான் முன்னணி இயக்குநர்கள் டைரக்ஷனில் நடிக்கும் வாய்ப்பு தனக்கு அதிகமாக கிடைத்ததாகவும் எஸ்ஜே சூர்யா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தொடர்ந்து தற்போது ஜிகர்தண்டா XX படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பையும் கார்த்திக் சுப்புராஜ் கொடுத்துள்ளதாகவும் உற்சாகத்துடன் பகிர்ந்துக் கொண்டார். இதன்மூலம் தனக்கு மேலும் ஒரு நடிப்பு பாதையை அவர் உருவாக்கிக் கொடுத்துள்ளதாகவும் அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சூப்பர் டூப்பர் ஹிட் என பாராட்டு: மேலும் இந்த ஜிகர்தண்டா XX படத்தின் வெற்றி திரையுலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளதாகவும் ரசிகர்களின் ரசிப்புத் தரம் உயர்ந்துள்ளது தங்களுக்கு மேலும் உத்வேகத்தை அளிப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். வார நாட்களில் கிரிக்கெட்டையும் தாண்டி 100 சதவிகிதம் ஆடியன்சை திரையரங்குகளுக்கு ஜிகர்தண்டா XX படம் வரவழைத்துள்ளதாகவும் இதுவே படம் சூப்பர் டூப்பர் ஹிட் என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
ரஜினியின் பாராட்டு: நடிகர் ரஜினிகாந்த் தன்னை நடிகவேள் எம்ஆர் ராதாவுடன் ஒப்பிட்டு பேசியுள்ளது குறித்து உற்சாகத்தை எஸ்ஜே சூர்யா பதிவு செய்துள்ளார். சிவாஜி, எம்ஜிஆரை காட்டிலும் நடிப்பு ஜாம்பவானா திகழ்ந்த நடிகவேளுடன் தன்னை ஒப்பிட்டது இந்த பிறவியில் கிடைத்த மிகப்பெரிய பாராட்டாக தான் பார்ப்பதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அடுத்ததாக கில்லர் என்ற படத்தில் தான் கமிட்டாகியுள்ளதாகவும் அந்தப் படத்திற்கு இந்த பாராட்டு மிகப்பெரிய உத்வேகத்தை கொடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











