அதுக்கு பைத்தியமாயிட்டேன்.. ரசிகர்களும் ஆவாங்க.. கேம் சேஞ்சர் குறித்து எஸ்ஜே சூர்யா!
சென்னை: நடிகர் ராம்சரண் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள கேம் சேஞ்சர் படம் ஷங்கர் இயக்கத்தில் இன்னும் இரு தினங்களில் ரிலீசாகவுள்ள நிலையில் படக்குழுவினர் அடுத்தடுத்த பிரமோஷன்களில் ஈடுபட்டு வருகின்றனர். இயக்குநர் ஷங்கர் ஒருபுறம் பேட்டிகளாக கொடுத்து தள்ளும் நிலையில் எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட படக்குழுவினரும் அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்து வருகின்றனர்.
ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கும் அரசியல்வாதிக்கும் இடைப்பட்ட மோதலை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற கதைக்களங்கள் சினிமாவிற்கு புதிதில்லை என்றபோதிலும் ஷங்கர் அதை தன்னுடைய ஜானரில் எப்படி வித்தியாசப்படுத்தியுள்ளார் மற்றும் பிரம்மாண்டப்படுத்தியுள்ளார் என்பதை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கேம் சேஞ்சர் படம்: நடிகர் ராம்சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்ஜே சூர்யா, சமுத்திரக்கனி, பிரம்மானந்த் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள கேம் சேஞ்சர் படம் வரும் 10ம் தேதி பொங்கல் கொண்டாட்டமாக சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் ரிலீசுக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் அடுத்தடுத்த பிரமோஷன்களை படக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி உள்ளிட்டவை நடத்தப்பட்டுள்ளன. தமன் இசையில் படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் லிரிக் வீடியோக்களாக வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் சில விமர்சனங்களையும் பெற்றுள்ளன.
பாடல்களுக்கு 75 கோடி செலவு: இந்தப் படத்தின் பாடல்களுக்காக மட்டுமே 75 கோடி ரூபாய்கள் செலவழிக்கப்பட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். இந்த படத்திற்காக ராம் சரணை சப்போர்ட் செய்து நடிகரும் ஆந்திராவின் துணை முதல்வருமான பவன் கல்யாணும் பேசியுள்ளார். தான் சென்னையில் ஜென்டில்மேன் உள்ளிட்ட ஷங்கரின் படங்களை பிளாக்கில் டிக்கெட் வாங்கி பார்த்ததாக அவர் பேசியுள்ளார். இந்தப் படத்தின்மூலம் தெலுங்கில் என்ட்ரி கொடுத்துள்ள ஷங்கர், தெலுங்கு ரசிகர்களுக்கு தான் புதியவன் இல்லை என்றும் தன்னுடைய அனைத்து படங்களும் தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
தயாரிப்பாளரின் செலவு: இதனிடையே நடிகர் எஸ்ஜே சூர்யாவும் படம் குறித்த அடுத்தடுத்த உற்சாகத்தை பகிர்ந்து வருகிறார். படத்தின் மெயின் வில்லனாக அரசியல்வாதியாக அவர் நடித்துள்ளார். ராம்சரணுக்கு எதிரான இவரது ஆக்ரோஷம் படத்தின் ட்ரெயிலரில் வெளிப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் வெற்றிக்கு இவர் முக்கியமான காரணமாக அமைவார் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்தப் படத்திற்காக தயாரிப்புத்தரப்பு 500 கோடி அளவில் செலவிட்டுள்ளதாகவும் அதற்கான வட்டியை கணக்கிட்டால் எங்கேயோ போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பைத்தியமான எஸ்ஜே சூர்யா: தில் ராஜுக்கு ஷங்கர் மீது மிகப்பெரிய பிரியம் உள்ளதால் அவரது பிரம்மாண்டத்திற்கு அவர் சிறப்பான வகையில் சப்போர்ட் செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தப் படத்தின் ஜருகண்டி பாடலை முன்னதாகவே லிரிக் வீடியோவாக படக்குழுவினர் வெளியிட்டுள்ளதாகவும் அந்தப் பாடல் சமூக வலைதளங்களில் லீக்கானதால் வெளியிடப்பட்டதாகவும் கூறிய எஸ்ஜே சூர்யா, தற்போதுதான் அந்தப் பாடலை தான் பார்த்ததாகவும் ரசிகர்கள் கொடுக்கும் காசு, அந்தப் பாடலுக்கே சரியாக போகும் என்றும் தெரிவித்துள்ளார். பிரபுதேவா மாஸ்டரின் கொரியோகிராபியும் அந்தக் பாடலுக்கு அழகை சேர்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹான்ட்சம் என்ற வார்த்தைக்கு அர்த்தம்: ஹான்ட்சம் என்ற வார்த்தைக்கு இந்தப் பாடலில் ராம்சரணும் பியூட்டிஃபுல் என்ற வார்த்தைக்கு கியாராவும் அர்த்தம் தந்துள்ளதாகவும் எஸ்ஜே சூயா பாராட்டு தெரிவித்துள்ளார். தங்களுக்கு கொடுக்கப்பட்ட சம்பளத்திற்கு இந்தப் பாடலிலேயே அவர்கள் இருவரும் தங்களது திறனை கொடுத்துவிட்டதாகவும் இந்தப் பாடலை பார்த்துவிட்டு தான் பைத்தியமாகிவிட்டதாகவும் பார்க்கும் ரசிகர்களும் பைத்தியமாவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது மட்டுமில்லாமல் மொத்த படமும் ரசிகர்களுக்கு போனசாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











