SJ Surya: மார்க் ஆண்டனி படத்தின் 2வது பாகம்.. காத்திருக்கும் எஸ்ஜே சூர்யா!
சென்னை: நடிகர்கள் விஷால், எஸ்ஜே சூர்யா லீட் கேரக்டர்களில் நடித்துள்ள மார்க் ஆண்டனி படம் நேற்றைய தினம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ரிலீசானது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் டைம் ட்ராவலை மையமாக கொண்டு வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இரும்புத்திரை படத்தை தொடர்ந்து 7 படங்கள் விஷாலுக்கு சரியாக அமையாத நிலையில், தற்போது மார்க் ஆண்டனி படம் சிறப்பாக கைகொடுத்துள்ளது.

மார்க் ஆண்டனி படத்தின் இரண்டாவது பாகத்திற்காக காத்திருப்பதாக எஸ்ஜே சூர்யா பேட்டி: நடிகர் விஷால் இரும்புத்திரை படத்தை தொடர்ந்து எனிமி, லத்தி உள்ளிட்ட 7 படங்களில் நடித்துள்ளார். ஆனால் இந்தப் படங்கள் அவருக்கு சிறப்பாக கைகொடுக்கவில்லை. மாறாக கலவையான விமர்சனங்களையே பெற்றுத் தந்தன. ஆனாலும் வெற்றிக்காக போராடிவந்த அவர் தற்போது மார்க் ஆண்டனி படம் மூலம் அதை சாதித்துள்ளார். டைம் டிராவலை மையமாக கொண்டு இந்தப் படம் வெளியாகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.
படத்தில் எஸ்ஜே சூர்யா, ரிது வர்மா, செல்வராகவன், அபிநயா உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். படத்தில் மார்க் மற்றும் ஆண்டனி என இருவேறு கெட்டப்புகளில் விஷால் நடித்துள்ளார். விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா இந்தப் படத்தில் போட்டிப் போட்டுக் கொண்டு நடித்துள்ளனர். படத்தின் திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகள் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளது. எப்போதும்போல தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை அதிகமாக எஸ்ஜே சூர்யா கவர்ந்துள்ளார்.
அஜித் குறித்த சில விஷயங்களையும் ஆதிக் இந்தப் படத்தில் சேர்த்துள்ளார். மேலும் இந்தப் படம் உருவாக அஜித் தான் காரணம் என்றும் அவர் தனது சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். தன்னுடைய ஜானரை மாற்றி, மார்க் ஆண்டனி படத்தை தான் இயக்க அஜித்தான் உத்வேகம் அளித்ததாகவும் அவர் நெகிழ்ச்சி தெரிவித்திருந்தார். அவருக்கும் இந்தப் படம் சிறப்பாக கைக்கொடுத்துள்ள நிலையில், அடுத்ததாக மார்க் ஆண்டனி 2 படம் உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

படத்திற்கு அதிகமான பிரமோஷன்களும் மேற்கொள்ளப்படாத நிலையில், நல்ல கதையம்சத்துடன் இருந்தால், நாங்கள் எப்போதுமே ஆதரவு கொடுப்போம் என்பதை ரசிகர்கள் மீண்டும் நிரூபித்துள்ளனர். ரசிகர்களின் வார்த்தைகள் செய்யும் ஜாலத்தில் படத்திற்கு சிறப்பான ப்ரமோஷன் தொடர்ந்து கிடைத்து வருகிறது. நேற்றைய தினம் முதல் நாளிலேயே 10 கோடி ரூபாய்க்கும் மேல் படம் வசூலித்துள்ள நிலையில், இனி வரும் நாட்களில் இந்த வசூல் எண்ணிக்கை எகிறும் என்று எதிர்பார்க்கலாம்.
இதனிடையே இந்தப் படத்திற்காக எஸ்ஜே சூர்யா கொடுத்துள்ள பேட்டியில், மார்க் ஆண்டனி 2 படத்திற்காக தான் காத்திருப்பதாகவும் விரைவில் இதற்கான ஸ்கிரிப்ட் பணிகளை படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மேற்கொள்வார் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ், தெலுங்கு மொழிகளில் இந்தப் படத்திற்காக தொடர்ந்து 25 நாட்கள் 22 மணிநேரங்கள் தான் டப்பிங் செய்த அனுபவத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications