Soori: இனி இப்படி நடக்காது.. ரசிகரிடம் மன்னிப்பு கேட்ட சூரி!
சென்னை: விடுதலை படத்திற்கு பின் தமிழ் சினிமாவின் ஆக்ஷன் ஹீரோவாக மாறிவிட்டார் நடிகர் சூரி. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து வெளிவந்த கருடன், மாமன், விடுதலை 2 ஆகிய படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது சூரி மண்டாடி என்கிற படத்தில் நடித்து வரும் நிலையில் இப்படத்தில் பவுன்சர்கள் மோசமாக நடந்து கொள்வதாக ஒருவர் புகார் கூறிய நிலையில், நடிகர் சூரி அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
நடிகர் சூரி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம்தான் மண்டாடி. இப்படத்தை இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்க தெலுங்கு நடிகர் சுஹாஸ் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். மேலும், மஹிமா நம்பியார், சத்யராஜ் ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். மீனவர்களின் படகு ரேஸை மையமாக வைத்து உருவாகி வரும் மண்டாடி படத்தின் பட்ஜெட் ரூ. 80 கோடி என கூறப்படுகிறது. சூரியின் திரை வாழ்க்கையில், அவர் ஹீரோவாக நடிக்கும் படங்களில் இதுவே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் படமாகும்.

நடிகர் சூரி: இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், எக்ஸ் தளத்தில் ஒருவர் நடிகர் சூரியை டேக் செய்து, அன்புள்ள சூரி அண்ணா, உங்கள் பட சூட்டிங் எங்கள் ஊரில் நடப்பது எங்களுக்கு மகிழ்ச்சியே இரவு நேர படப்பிடிப்பில் வேடிக்கை பார்க்க வரும் எங்கள் பகுதி மக்களிடம் உங்களது பவுசன்கர்கள் கொஞ்சம் கடுமையாக நடந்து கொள்கிறார்கள் தயாரிப்பு நிறுவனத்திடம் கொஞ்சம் சொல்லி வைக்கவும் நன்றிகள் என பதிவிட்டு இருந்தார்.
நல்ல பண்பு: இந்த பதிவிற்கு பதில் அளித்து இருக்கும் நடிகர் சூரி, தம்பி, உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றி. படப்பிடிப்பில் ஏற்பட்ட தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இதை தயாரிப்புக் குழுவிடமும், பவுன்சர்ஸ் சகோதரர்களிடமும் தெரிவித்து இனி மிகுந்த கவனத்துடன் இருக்கச் சொல்கிறோம். எப்போதும் போல உங்கள் அன்பே எங்களுக்கு பலம். மீண்டும் நன்றி என பதிவிட்டுள்ளார். நடிகர் சூரியின் இந்த பண்புதான் அவரை இந்த இடத்திற்கு கொண்டு வந்துள்ளது என பலர் அவரை புகழ்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











