Soori: தேங்காய் பன்னுக்காக அலைந்தேன்... மாமன் ப்ரோமோஷனில் கண்கலங்கிய நடிகர் சூரி!
சென்னை: திருப்பூரில் தேங்காய் பன்னுக்காக அலைந்து திரிந்து இருக்கிறேன். ஆனால், இன்று அதே இடத்திற்கு சிவப்பு கம்பளத்தில் என்னை அழைத்து வந்தது போல இருக்கிறது என்று நடிகர் சூரி, மாமன் திரைப்படத்தின் ப்ரோமோஷன் விழாவில் கண் கலங்கி பேசினார். சூரி நடித்த மாமன் திரைப்படம் மே 16ஆம் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது.
நடிகர் சூரி, இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள மாமன் திரைப்படத்தில் நடித்துள்ளார். தாய் மாமன் உறவை மையப்படுத்தி உருவாகி உள்ள இந்த படத்தில், சூரிக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார். மேலும், பாபா பாஸ்கர், ராஜ்கிரண், லப்பர் பந்து புகழ் ஸ்வாஸிகா, பால சரவணன், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர், கீதா கைலாசம், நிகிலா சங்கர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கருடன் படத்தைத் தயாரித்த லார்க் ஸ்டுடியோஸ் குமார் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

நடிகர் சூரி பேச்சு: இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி, திருப்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சூரி, நான் திருப்பூரில் கம்பெனியில் வேலை செய்த போது, தேங்காய் பன்னு நன்றாக இருக்கும். ஆனால், அதை வாங்கி சாப்பிடுவதற்கு என்னிடம் பணம் இருக்காது. அப்போது, தேங்காய் பன்னின் விலை ஒன்னேகால் ரூபாய், அதை சாப்பிட்டு விடலாம் என்று மனசு சொல்லும், காசை கணக்கு போட்டுக்கொண்டே வருவேன். ஆனால், கடைசியில் ஒரு டீயை மட்டும் குடித்துவிட்டு தேங்காய் பன்னை சாப்பிடாமலே சென்று விடுவேன். அங்கு இருக்கும் அனைவரும் பன்னை சாப்பிட்டுக்கொண்டு இருப்பார்கள். சாப்டீயா...என்று கேட்பார்கள். நான் டீ குடித்தேன், மறுபடியும் 3 மணிக்கு வருவோம், நைட்டும் வருவோம். இப்படியே இன்னைக்கு நாலு ரூபாய் செலவாகி விடும், பிறகு ஊருக்கு பணம் அனுப்பும் போது குறையும், என்று சொல்லிவிட்டு டீயை மட்டும் குடித்துவிட்டு சென்றுவிடுவேன்.
கண் கலங்கினார்: நான் பட்ட கஷ்டத்திற்கு என்னை நீங்கள் இந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறீர்கள். இதை விட எனக்கு வேறு எந்த மரியாதையும் வேண்டாம். இந்த இடத்தில் நான் நடந்து வரும் போது சிவப்பு கம்பளம் விரித்து அதில், என்னை அழைத்து வருவது போல உணர்ந்தேன். இன்று, இந்த இடத்திற்கு நான் வந்திருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் என்னுடைய கடுமையான உழைப்பு தான், நான் தலைக்கு மேல் இருந்து வளர்ந்தவன் இல்லை, தரைக்குக் கீழே இருந்து வளர்ந்தவன் என்று நடிகர் சூரி அந்த விழாவில் கண்கலங்கி பேசுகின்றார்.
ஜாலியான ஒரு குடும்ப கதையை கொண்ட படத்தில் நடிக்க வேண்டும் என நினைத்தேன். அப்போது தான் எனக்கு இந்த கதை மனத்தில் தோன்றியது. இதற்காக நான் பேப்பர், பேனாவை வைத்து சிந்தித்து எழுத வில்லை. பலர் வாழ்க்கையில் நடந்ததை அப்படியே படமாக எடுத்து இருக்கிறோம். குடும்ப உறவுகளின் பின்னணியில் உருவாகியுள்ள மாமன் படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படத்தின் வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனமான ஸ்ரீகுமரன் பிலிம்ஸ் பெற்றுள்ளது, டிஜிட்டல் உரிமையை பிரபல நிறுவனமான ஜீ5 கைப்பற்றியுள்ளது.


Click it and Unblock the Notifications











