நான் ஹீரோவா நடிச்சது தெரிஞ்சதும் ரஜினி சார் எனக்கு வாழ்த்து சொன்னாரு.. சூரி மகிழ்ச்சி!
சென்னை : நடிகர் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் நடிப்பில் இன்னும் சில தினங்களில் விடுதலை படம் ரிலீசாகவுள்ளது.
வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது.
முழுநேர காமெடி நடிகராக பட்டையை கிளப்பிவந்த நடிகர் சூரி தற்போது நாயகனாக மாறியுள்ளார். அடுத்தடுத்து மூன்று படங்களில் ஹீரோவாக கமிட்டாகியுள்ளார்.

விடுதலை படம்
நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வரும் மார்ச் 31ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது விடுதலை படம். வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தை தொடர்ந்து மூன்று ஆண்டுகள் கழித்து விடுதலை படம் ரிலீசாகவுள்ள நிலையில் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகவே காணப்படுகிறது. வெற்றிமாறன்-சூரி கூட்டணியில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் கைவிடப்பட்ட நிலையில் மூன்றாவது முயற்சியில் இவர்கள் இருவரும் இணைந்துள்ளனர்.

ஹீரோவாக மாறிய சூரி
முழுநேர நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் சூரி. தன்னுடைய பாடி லாங்வேஜ், டைமிங் காமெடி மூலம் ரசிகர்களை கட்டிப் போட்டவர். வெண்ணிலா கபடிக்குழு படத்தில் துவங்கிய இவரது திரைப்பயணம் தற்போதுவரை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் விடுதலை படத்தில் இவர் ஹீரோவாக களமிறங்கியுள்ளார். இந்தப் படத்தில் நடிப்பதற்காக அடுத்தடுத்த மூன்று படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் அதிகமான பணத்தையும் தான் இழந்துள்ளதாகவும் சூரி தனது சமீபத்திய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

இளையராஜா இசையில் பாடல்கள்
எப்போதும் வெற்றிமாறன் ஜிவி பிரகாஷ் இசையில்தான் கூட்டணி அமைப்பார். ஆனால் இந்தப் படத்தில் இளையராஜாவுடன் அவர் இணைந்துள்ளார். இளையராஜா இசையில் இந்தப் படத்தின் அடுத்தடுத்த மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. தனுஷ் வாய்சில் வெளியான உன்னோட நடந்தா மற்றும் இளையராஜா வாய்சில் அடுத்தடுத்து வழிநெடுக காட்டுமல்லி மற்றும் அருட்பெருஞ்சோதி ஆகிய பாடல்கள் ரசிகர்களை கட்டிப் போட்டுள்ளன.

மிரட்டலாக வெளியான ட்ரெயிலர்
பாடல்கள் மட்டுமில்லாமல் படத்தின் ட்ரெயிலரும் மிரட்டலாக அமைந்துள்ளது. இந்த ட்ரெயிலர் மூலம் படத்தின் சிறப்பும் வெளியாகியுள்ளது. இந்தப் படம் சூரிக்கு விருதுகளை பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் வேல்ராஜின் கேமரா மிகச்சிறப்பான பங்களிப்பை செய்துள்ளதும் ட்ரெயிலரில் வெளிப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் இரண்டாவது பாகமும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்த 3 படங்களில் ஹீரோ
விடுதலை படத்தில் ஹீரோவாக களமிறங்கிய ராசியோ என்னவோ, அடுத்தடுத்து மூன்று படங்களில் ஹீரோவாக தற்போது கமிட்டாகியுள்ளார். கொட்டுக்காளி, மதயானைக்கூட்டம் படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் ஒரு படம் மற்றும் அமீரின் இயக்கத்திலும் ஹீரோவாக இணைந்துள்ளார் சூரி. இனிமேல் காமெடி களத்தை விட்டுவிட்டு ஹீரோவாகவே சூரி தொடரவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. காமெடியனாகவே பார்க்கப்பட்ட சூரியின் பண்பட்ட நடிப்பை விடுதலை படம் வெளிப்படுத்தியுள்ள நிலையில், அடுத்தடுத்த வித்தியாசமான கேரக்டர்களிலும் நடிப்பிலும் அவரை பார்க்கலாம்.

சூரியை பாராட்டிய ரஜினிகாந்த்
இதனிடையே, தான் நாயகனாக நடிக்கும் செய்தியை கேட்டதும் நடிகர் ரஜினிகாந்த் தன்னை பாராட்டியதாக சூரி தெரிவித்துள்ளார். சூப்பர்ஸ்டாரின் பாராட்டு தனக்கு மேலும் உத்வேகத்தை அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக அண்ணாத்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் சூரியின் கூட்டணி சிறப்பாக அமைந்தது. படத்தில் சதீஷ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டவர்கள் இருந்தாலும், சூரி இறுதிவரை படத்தில் ரஜினியுடன் கைக்கோர்த்திருந்தார்.


Click it and Unblock the Notifications











