அந்த மனசுதான் சார் கடவுள்.. ஊழியர்களுக்கு சம்பளத்துடன் லீவு.. சேஃப்பாய் இருக்க சொன்ன நடிகர் சூரி!
சென்னை: தனது ஹோட்டலில் வேலை பார்க்கும் தொழிலார்களுக்கு சம்பளத்தை பிடிக்காமல் லீவு கொடுத்து பாதுகாப்பாய் இருக்குமாறு கூறியிருக்கிறார் நடிகர் சூரி.
Recommended Video
கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 100 தாண்டியுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4000 தாண்டிவிட்டது. நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு போட்டும் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.

பெரும் அவதி
தொழில் நிறுவனங்கள் பலவும் முடங்கியிருப்பதால் நாட்டின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அன்றாட தினக்கூலியை நம்பியிருந்த தொழிலாளர்களும் பெரும் அவதியடைந்து வருகின்றனர். திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும், தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர்.

குடும்பத்தினருடன் சூரி
இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான நடிகர் சூரியும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். கொரோனா பாதிப்பால் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், குடும்பத்தினருடன் நேரத்தை செலவழித்து வருகிறார் நடிகர் சூரி.

லீவு முழு சம்பளம்
சமையல் செய்வது, குழந்தைகளை குளிக்க வைப்பது என நாள்தோறும் ஒரு வீடியோவை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் நடிகர் சூரி, தன்னுடைய ஹோட்டலில் பணிபுரியும் 350 தொழிலாளர்களுக்கும் விடுமுறை கொடுத்து சம்பளத்தில் எந்த பிடித்தமும் செய்யாமல், முழு சம்பளத்தையும் கொடுத்துள்ளார்.

பாதுகாப்பாக இருக்க வேண்டும்
இதேபோல் வறுமையில் வாடும் நாடக நடிகர்-நடிகைகளுக்கு நடிகர் சங்கம் மூலம் ரூ.1 லட்சம் கொடுத்துள்ளார் சூரி. மூன்றாம் உலகப்போர் வந்தது போல் ஒரு அச்சத்தை கொரோனா ஏற்படுத்தி இருப்பதாக கூறியுள்ள சூரி எல்லோரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

பாராட்டப்படும் சூரி
கொரோனா வைரஸால் நாடே கதி கலங்கி நிற்கும் நிலையில் கோடி கோடியாக சம்பளத்தை வாங்கி குவிக்கும் முன்னணி நடிகர்கள் பலரும் வாய் திறக்காமல் உள்ளனர். ஆனால் நகைச்சுவை நடிகரான சூரி, தன்னால் முடிந்த வரை மற்றவர்களுக்கு சைலன்ட்டாய் உதவி செய்து மக்களிடையே பாராட்டை பெற்று வருகிறார்.


Click it and Unblock the Notifications











