“விடுதலை“ மக்களுக்கான படம்.. அந்த படத்தில் நடித்ததே பெருமை.. நடிகர் சூரி பெருமிதம்!
சென்னை : விடுதலை திரைப்படம் மக்களுக்கான திரைப்படம், அந்த படத்தில் நடித்ததே எனக்கு கிடைத்த பெருமை என்று நடிகர் சூரி கூறியுள்ளார்.
தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் அசுரன் மற்றும் பாவக்கதைகள் படங்களைத் தொடர்ந்து நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரை வைத்து இயக்கும் படமாக விடுதலை.
இந்த படத்தின் மூலம் முதன்முதலாக இசைஞானி இளையராஜாவோடு பணியாற்றுகிறார் வெற்றிமாறன்.

விடுதலை
எழுத்தாளர் ஜெயமோகனின் 'துணைவன்' சிறுகதையை மையமாக வைத்து உருவாகிவரும் இப்படத்தை எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இதனிடையே இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விடுதலை படத்தின் படப்பிடிப்புகள் சத்தியமங்கலம், திண்டுக்கல் சிறுமலை, பன்ருட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகின்றன.

கடுமையான ஒர்க் அவுட்
இந்தப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வாத்தியார் என்ற நக்சலைட் போராளி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கௌதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நகைச்சுவை நடிகரான சூரி இப்படத்தில் போலீசாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கான கடுமையாக ஒர்க் அவுட் செய்து உடலைக் கட்டுக்கோப்பாக வைத்து இருக்கிறார் சூரி.

அனைவரையும் மகிழ்விக்கும்
நடிகர் சூரி, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் இன்று உணவகத்தை தொடங்கி உள்ளார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சூரி,விடுதலை திரைப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்து விட்டது. விடுதலை திரைப்படம் நிச்சயம் ஒரு மிகப்பெரிய திரைப்படமாக இருக்கும். சமீபத்தில் வெளியான திரைப்படங்கள் எல்லாம் எப்படி மிகப்பெரிய அளவில் ஹிட்டாகி வெற்றி பெற்றதோ அதே போல இந்த திரைப்படமும் வெளியாகி அனைவரையும் நிச்சயம் மகிழ்விக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றார்.

விடுதலை மக்களுக்கான படம்
இயக்குநர் வெற்றிமாறன் இந்த படத்தை மிகப்பெரிய படமாக எடுத்துக்கொண்டு இருக்கிறார். இந்த படத்தில் நானும் நடித்திருப்பதை நினைத்து பெருமை அடைகிறேன். இதற்காக வெற்றிமாறனுக்கு நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. விஜய் சேதுபதியும் படத்தில் இருப்பதால் இதற்கு தனி அந்தஸ்து கிடைத்து விட்டது. இந்தியாவிலேயே முக்கியமான படமாக விடுதலை இருக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. விடுதலை திரைப்படம் ஒரு மக்களுக்கான திரைப்படமாக இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இப்படம் நிச்சயம் பிடிக்கும் என்றார்.


Click it and Unblock the Notifications











