Kottukkaali Box Office: சூரியை நம்பி பணம் போட்ட எஸ்.கேக்கு கிடைத்தது என்ன? கொட்டுக்காளி வசூல் விபரம்
சென்னை: கூழாங்கல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் வினோத் ராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், கொட்டுக்காளி. இந்தப் படத்தில் சூரி மற்றும் அன்னா பென் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தினை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். படத்தில் ஒரு பாடல் கூட இல்லை மேலும் பின்னணி இசை இல்லை. காரணம் படத்தில் இசை அமைப்பாளர் இல்லை. இந்தப் படம் உலகத்தில் பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருது பெற்றது. இந்நிலையில் படத்தின் வசூல் விபரம் குறித்து பார்க்கலாம்.
கொட்டுக்காளி படத்தை பார்த்த உலகநாயகன் கமல் ஹாசன், " கொட்டுக்காளி' என்ற மத்திய அரசுச் சான்றிதழ் திரையில் தோன்றும் கணத்தில் இருந்து ஆச்சரியங்கள் தொடங்குகின்றன. சான்றிதழில் 103 நிமிடங்கள் 44 செகண்டுகள் என்ற குறிப்பைப் பார்த்ததுமே தமிழ் சினிமா ராக்கூத்து யுகத்திலிருந்து மீண்டு நவீன கதைசொல்லி ஒருவனின் களமாகிவிட்டது புரிகிறது. தம்பி சூரியைத் தவிர எனக்குத் தெரிந்த முகங்கள் இல்லை மூன்று நிமிடங்களுக்குப் பிறகு அவரும் தெரியவில்லை.

ஆணாதிக்கத்தின் குறியீடுகளாக சேவல், சீறும் காளை, பாண்டியன், பூசாரி என்று பலர் இருந்தாலும் அவற்றை நாயகி எதிர்கொள்ளும் விதம், மாறிவிட்டதை காலம் மற்ற பாத்திரங்கள் புரிந்துகொள்ளாவிடினும் பார்வையாளர்களாகிய நமக்கு படம் பிடித்துக் காட்டப்படுகிறது" என பல விஷயங்களைக் குறிப்பிட்டு பாராட்டி எழுதி இருந்தார்.
பாலா: அதேபோல் படத்தைப் பார்த்த இயக்குநர் பாலா, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதி இருந்தார். அதில், " நம்முடைய தமிழ் திரைப்படத்துறையில் இருந்து, உலகம் வியக்கும் கலைஞர்கள் வந்து கொண்டே இருப்பார்கள் என்பதற்கான முக்கியமான சான்றுகளில் ஒன்று, இந்தக் கொட்டுக்காளி. ஆழமான இக்கதையை எளிமையாகவும் வலிமையாகவும் எடுக்க முடியும் என்று களமாடி, ஓர் அற்புதத்தை நிகழ்த்தியிருக்கிறார் இயக்குநர் வினோத்ராஜ்.

சவால்: குறிப்பாக, சூரி தனது கதாப்பாத்திரத்தை உணர்ந்து ஆர்ப்பாட்டமும் அமைதியும் ஒரு சேர இணைந்த நடிப்பை வெளிப்படுத்தி ஒரு நடிகராகத் திரையுலகில் ஆழ்ச்சுவடு பதித்து தாண்டவமாடியிருக்கிறார் என்றால் அது மிகையாகாது. படத்தின் தலைப்பிற்கே நியாயம் சேர்க்கும் வகையில் மிக அழுத்தமான நடிப்பைத் தந்திருக்கிறார் நாயகி அன்னா பென். படத்தில் நடித்திருக்கும் அனைவருமே. தாங்களும் ஒரு முக்கியக் கதாப்பாத்திரம்தான் என்று சவால் விட்டிருக்கிறார்கள்.
சிவகார்த்திகேயனுக்கு நன்றி: காட்சியை வழி நடத்திச் சென்ற ஒளிப்பதிவாளர் சக்திவேல் மிகவும் போற்றுதலுக்குரியவர். சிவகார்த்திகேயனுக்கு வினோத்ராஜ் சார்பாக எனது நன்றிகள் தெரிவித்தோடு, சூரி மற்றும் வினோத்ராஜ் போற்றப்பட வேண்டிய கலைஞர்கள் மட்டுமல்ல, கை கூப்பி வணங்கப்பட வேண்டியவர்கள். கொட்டுக்காளி படக்குழுவினர் அனைவரும் உயர்ந்து நிற்கிறார்கள்" என குறிப்பிட்டிருந்தார்.

வசூல் விபரம்: பலரது எதிர்பார்ப்பு மற்றும் பாராட்டுக்கு மத்தியில் ரிலீஸ் ஆன கொட்டுக்காளி படம் முதல் நாளில் பாக்ஸ் ஆஃபீஸில் மட்டும் ரூபாய் 50 லட்சம் வசூல் செய்துள்ளது என கூறப்படுகின்றது. வார இறுதி நாட்களில் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகின்றது. இது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படம் பார்த்த பலரும் சூரியின் நடிப்பை வெகுவாக பாராட்டி வருகின்றனர். சென்னை ரோகினி திரையரங்கிற்கு ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்க்க வந்த நடிகர் சூரிக்கு அவரது ரசிகர்கள் சிறப்பான வரவேற்பைக் கொடுத்தனர்.


Click it and Unblock the Notifications











