Soori: எல்லா குடும்பங்களிலும் இருக்கும் ஒருவன்தான் பாண்டி.. கொட்டுக்காளி சீக்ரெட் சொன்ன சூரி!
சென்னை: நடிகர் சூரி காமெடியனாக தன்னுடைய பயணத்தை துவங்கிய போதிலும் கடந்த ஆண்டில் சூரி நாயகனாக நடித்து வெளியான விடுதலை மற்றும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான கருடன் படங்கள் அவருக்கு ஹீரோவாக மிகச் சிறப்பான ஓப்பனிங்கை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன.
தொடர்ந்து ஹீரோவாகவே நடிப்பேன் என்று கூறியுள்ள சூரி, அடுத்ததாகவும் ஹீரோவாக நடித்துள்ள கொட்டுக்காளி படம் வரும் ஆகஸ்ட் 23ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன்களை படக்குழுவினர் அடுத்தடுத்து மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, படம் குறித்து நடிகர் சூரி சமூக வலைதளத்தில் தன்னுடைய உற்சாகத்தை பகிர்ந்துள்ளார். இந்த படத்தில் தான் பாண்டி என்ற கேரக்டரை ஏற்று நடித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நடிகர் சூரி: சூரி சினிமாவில் தன்னுடைய பயணத்தை காமெடியனாக துவங்கி முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடை போட்டவர். சிவகார்த்திகேயன், ரஜினிகாந்த் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்து ஏராளமான ரசிகர்களை தன்னுடைய பாடி லாங்குவேஜ் மற்றும் டைமிங் காமெடியால் கவர்ந்த சூரி. சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்தில் தன்னுடைய சிக்ஸ் பேக்கை வெளிப்படுத்தியிருந்தார். காமெடியனாக இருந்தாலும் அவரது இந்த முயற்சி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் கண்களுக்கு இவருக்குள் இருந்த ஹீரோ வெளிப்பட்ட நிலையில் இவரை வைத்து விடுதலை என்ற படத்தை கடந்த ஆண்டில் கொடுத்திருந்தார் வெற்றிமாறன்.
விடுதலை படம்: இந்த படத்தில் குமரேசன் என்ற கான்ஸ்டபிள் கேரக்டரில் நடித்து மாஸ் காட்டியிருந்தார் சூரி. இந்த படம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து மிகப்பெரிய அளவில் வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து, தொடர்ந்து தான் ஹீரோவாகத்தான் நடிக்க உள்ளதாக சூரி அறிவித்திருந்தார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான கருடன் படமும் அவருக்கு மிகச் சிறப்பான வரவேற்பை பெற்றுக் கொடுத்துள்ளது. இந்த படத்தில் நடிகர்கள் சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் உள்ளிட்டவர்களுடன் இணைந்து நடித்திருந்தார் சூரி.
கொட்டுக்காளி குறித்து சூரி: இதனிடையே அவர் ஹீரோவாக நடித்துள்ள கொட்டுக்காளி படம் வரும் ஆகஸ்ட் 23ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்த படத்தின் ட்ரெயிலர் உள்ளிடவை முன்னதாக வெளியாகி மாஸ் காட்டியுள்ள நிலையில் இந்தப் படம் அவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுத்தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மண்ணின் மனம் சார்ந்த கதையாக இந்த படமும் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ள சூழலில் தற்போது படம் குறித்த தன்னுடைய பகிர்வை நடிகர் சூரி சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார், தன்னுடைய முந்தையப் படங்களான விடுதலை, கருடன் படங்களில் இருந்து இந்தப் படம் முற்றிலும் மாறுபட்ட திரைப்படமாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கும் ஒருவன்: இந்தப் படம் உண்மைக்கு நெருக்கமான படமாக உருவாகியுள்ளதாகவும் இந்தப் படத்தில் தான் ஏற்று நடித்துள்ள பாண்டி என்ற கேரக்டர் ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கும் ஒருவன்தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சமூகம் சொல்லிக்கொடுத்த உறவு முறைகளையும் நம்பிக்கைகளையும் பெரிதும் நம்பும் கேரக்டராக பாண்டி அமைந்துள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த சமூகம் உருவாக்கிய பாண்டி என்ற கேரக்டருக்கும் பாண்டி என்ற தனிப்பட்ட மனிதனுக்கும் நடக்கும் மனப்போராட்டத்தை இந்தப் படம் பிரதிபலிப்பதாகவும் ரசிகர்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய படமாக கொட்டுக்காளி நிச்சயம் இருக்கும் என்றும் சூரி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











