விஐய்யை விளாசிய சூரி என பரவிய பொய் செய்தி.. டக்குனு ரியாக்ட் செய்த சூரி.. அடடே சிறப்பு!
சென்னை: நடிகர் சூரி தமிழ் சினிமாவில் இன்றைக்கு முக்கியமான கதாநாயகனாக உயர்ந்து நிற்கிறார். இப்படி இருக்கும்போது, இவரது படங்களும் பாக்ஸ் ஆபிஸில் அதிரிபுதிரியாக வெற்றிகளைக் குவித்து வருகிறது. ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்து தனது திரை வாழ்க்கையைத் தொடங்கிய சூரி, அதன் பின்னர் நகைச்சுவை நடிகராக மாறி, தற்போது கதையின் நாயகனாகவும், கதாநாயகனாகவும் மாறி நிற்கிறார். இப்படி இருக்கையில் நடிகர் சூரி, நடிகர் விஜய்யை விமர்சித்ததாக பரவிய பொய் செய்திக்கு சூரியின் பதில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது, பேரழிவோ, பெருந்துயரமோ, ஒரு அரசியல் கட்சி அன்றாடம் மக்களுடன் நிற்க வேண்டும். ஆனால் ஒரு குறிப்பிட்ட கட்சி அதன் அலுவலகத்திற்கு பூட்டு போட்டு விட்டது, அதன் தலைவரோ பனையூரில் பதுங்கிக் கொண்டார்" என்று தெரிவித்ததாக பொய் செய்தி பரவியது. முதலில் இதை பலரும் உண்மை என்றே நினைத்து ரியாக்ட் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சிலரோ, சூரி இவ்வாறு சொன்னாரா இல்லையா என்பதை ஆராயாமல் சூரியை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதேபோல் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த சிலரும் அதன் உண்மைத் தன்மையை ஆராயாமல் விஜய்க்கு எதிராக சூரி தைரியமான விமர்சனத்தை முன் வைத்துவிட்டார் என்று ஃபயர் விடத் தொடங்கி விட்டார்கள்.

சூரி ரியாக்ஷன்: இது குறித்து தெரிந்து கொண்ட சூரி தனது எக்ஸ் பக்கத்தில் தான் பேசியதாக பரவிய பொய் செய்தித் துணுக்கை பகிர்ந்து, தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதாவது, " தம்பி, தவறான தகவலை பரப்புவது எப்போதும் சமூகத்திற்கு தீங்கையே தரும். ஆகையால் நம்முடைய ஒவ்வொரு செயலிலும் நிதானமும் முதிர்ச்சியும் காட்டுவோம். இந்த சமூகம் நல்ல மாற்றங்களை பெற தகுதியானது, அதனால் நன்மையும் அன்பும் பரப்புவதில் உங்கள் சிறந்ததைச் செய்யுங்கள். எனக்கும் பல வேலைகள் உள்ளன, உங்களுக்கும் செய்ய வேண்டியவை இருக்கின்றன. ஆகையால் இப்போது நம்முடைய பணிகளில் முழு கவனம் செலுத்துவோம்" என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

சூரியின் அணுகுமுறை: சூரி நினைத்தால் தான் சொல்லாத கருத்தை சொன்னதாக பொய் செய்தி பரப்பியவர்கள் மீது வழக்கு தொடுத்து சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் ஆனால் அவர் அதுபோல செய்யாமல், நேரத்தை ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு பயன்படுத்து என்று தெரிவித்துள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதேபோல் இந்த தீபாவளியை நடிகர் சூரி தனது உறவினர்களுடன் மகிழ்ச்சியாக கொண்டாடியதை வீடியோவாக பதிவிட்டிருந்தார்.
தீபாவளி கொண்டாட்டம்: அதற்கு பல ரசிகர்கள் இணையவாசிகள் லைக்குகளை அள்ளி வீசினர். வெகு சிலர் இந்த கொண்டாட்டம் நன்றாக இருப்பதாக எல்லாம் கமெண்ட் தெரிவித்தார்கள். அதில் ஒரு இணையவாசி, ” திண்ணைல கிடந்தவனுக்கு திட்டுக்குன்னு வந்துச்சாம் வாழ்க்கை" என்று மோசமாக கமெண்ட் போட்டார். அதற்கு சூரி தனது ஸ்டைலில், “ திண்ணையில் இல்லை நண்பா, பல நாட்களும் இரவுகளும் ரோட்டில்தான் இருந்தவன் நான்... அந்த பாதைகள் தான் எனக்கு வாழ்க்கையின் உண்மையும் மதிப்பையும் கற்றுத் தந்தது. நீயும் உன் வளர்ச்சியில் நம்பிக்கை வைத்து முன்னேறினா, வெற்றி நிச்சயம் உன்னைத் தேடி வரும்” என்று பதிவிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











