சோறு, தண்ணி இல்லாம கஷ்டப்பட்டான்.. சூரியை நினைத்து கண்கலங்கிய அவரது தாய்!
சென்னை : நடிகர் சூரி இந்த இடத்திற்கு வர சோறு,தண்ணி இல்லாம கஷ்டப்பட்டான் என்று அவரது தாய் கண்கலங்கி கூறியுள்ளார்.
காமெடியன் மற்றும் குணச்சித்திர நடிகராக பல படங்களில் நடித்துள்ள சூரி, வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார்.
அடிதடி ஆக்ஷன் சண்டை காட்சிகள் நிறைந்த இப்படத்தை, பாலு மகேந்திராவின் மாணவரான வெற்றிமாறன் இயக்கியுள்ளார். இதில், விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ,கெளதம் மேனன், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலரும் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

வெற்றிமாறனின் விடுதலை
எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி உள்ள விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது.அடர்ந்த காடுகளில் பெரும் பொருட்செலவில் உருவாகி உள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். அசுரன் படத்தின் வெற்றிக்குப் பின்னர் வெற்றிமாறன் இயக்கும் படம் என்பதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு பல மடங்காக உள்ளது.

சோறு, தண்ணி இல்லாம
இந்நிலையில், சூரியின் தாயார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், என் மகன் மிகவும் கஷ்டப்பட்டுத்தான் இந்த இடத்திற்கு வந்து இருக்கிறான். சின்ன கதாபாத்திரத்திற்காக சோறு,தண்ணீர் இல்லாமல் பல சிரமங்களை அனுபவித்து இருக்கிறான். அனைத்து மக்களும் என் மகனின் வெற்றிக்காக உதவி செய்து இருக்கிறார்கள்.

வெற்றிமாறனுக்கு நன்றி
இவை அனைத்தையும் தாண்டி வெற்றி மாறனை, நான் கடவுளாக நினைப்பதா, என் மகனாக நினைப்பதா, என் குலதெய்வமாக நினைப்பதா என்று எனக்கு தெரியவில்லை. என் மகனுக்கு இந்த படத்தில் ஹீரோவாக வாய்ப்பு கொடுத்திருக்கிறார். வெற்றி மாறனுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கையில் அடிபட்டு காயம்
விடுதலை ஷூட்டிங்கின் போது, சூரிக்கு கையில் அடிபட்டு தையல் போட்டுள்ளார்கள். சூரி இதுபற்றி எனக்கு எதுவுமே சொல்லவில்லை. சொன்னால் நான் கஷ்டப்படுவேன் என்று அப்படியே மறைத்துவிட்டார். என் மகள் தான் அந்த சண்டை காட்சி வீடியோவை காட்டினாள். அதைப் பார்த்ததும் நான் பதறிப்போனேன்.

மகிழ்ச்சியாக இருக்கிறது
சூரி பெரிய நடிகராக ஆன போதும், நடிகர் என்கிற மாதிரி எல்லாம் நடந்து கொள்ள மாட்டார். மதுரைக்கு வந்தார் என்றால், அவருக்கு பிடித்த பழைய சாதத்தை தயிர் ஊற்றி சாப்பிட்டு விட்டு வெறும் தரையில் தான் படுப்பார். என் மகன்களை கஷ்டப்பட்டு நல்லவர்களாக வளர்த்து விட்டேன், இன்று அவன் வளர்ச்சியை பார்க்கும் போது மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கு என்று சூரியின் தாயார் பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











