நில மோசடி வழக்கு.. முன்னாள் டிஜிபிக்கு எதிராக ஆதாரம் இருக்கிறது.. நடிகர் சூரி தகவல்!
சென்னை: நில மோசடிப் புகாரில், நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலாவுக்கு எதிராக ஆதாரம் உள்ளது என உயர் நீதிமன்றத்தில் நடிகர் சூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல நகைச்சுவை நடிகர் சூரி. இவர் வெண்ணிலா கபடி குழு படத்தில் இடம்பெற்ற பரோட்டா காமெடி மூலம் பிரபலமானார்.
விஜய், அஜித், விஷால், சூர்யா உள்பட முன்னணி ஹீரோக்கள் படங்களில் காமெடி வேடங்களில் நடித்துள்ளார்.

சிறுசேரியில் நிலம்
இவர், நடிகர் விஷாலுடன் வீரதீர சூரன் என்ற படத்தில் நடித்துள்ளார். இதற்கான சம்பளம் ரூ.40 லட்சத்துக்குப் பதில், சிறுசேரியில் ஒரு நிலத்தை தருவதாக அந்தப் படத்தின் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன், விஷ்ணு விஷால் தந்தையும் ஓய்வு பெற்ற டி.ஜி.பி.யுமான ரமேஷ் குடவாலா கூறியுள்ளனர்.

சரியாக நடவடிக்கை
அந்த நிலத்துக்காக இருவரும் தன்னிடம் இருந்து 2.70 கோடியை கூடுதலாக பெற்று மோசடி செய்து விட்டதாக போலீசில் நடிகர் சூரி புகார் செய்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் பதிவான வழக்கை தற்போது மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்தநிலையில், தனது புகார் மீது போலீசார் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை.

மாற்ற வேண்டும்
எனவே, விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனக்கோரி நடிகர் சூரி உயர் நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ரவீந்திரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சூரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ரமேஷ் குடவாலா சதி செய்ததற்கான ஆடியோ பதிவு மற்றும் ஆதரங்களை தாங்கள் வைத்திருப்பதாக் கூறினார்.

தள்ளி வைத்தார்
இதை விசாரணை அதிகாரியிடம் மனுதாரர் ஒப்படைக்கலாம், அதன் மீது போலீசார் விசாரிக்க தயாராக உள்ளதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இதை பதிவு செய்த நீதிபதி, நடிகர் சூரி தன்னிடம் உள்ள ஆதாரங்களை அடையாறு காவல் அதிகாரியிடம் ஒப்படைத்து விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு கூறி வழக்கை 4 வாரத்திற்கு தள்ளி வைத்தார்.


Click it and Unblock the Notifications











