ஐஸ்வர்யா லட்சுமியின் துப்பட்டாவை வாங்கி அணிந்து கொண்ட சூரி.. ஓவர் அலப்பறை.. எதுக்கு தெரியுமா?
சென்னை: நடிகர் சூரி, ஐஸ்வர்யா லட்சுமி, ராஜ்கிரண், ஸ்வாசிகா, பாபா பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாமன். இந்த படம் வரும் 16ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில், படத்தின் புரோமோசன் பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் புரோமோசன் நிகழ்ச்சியில் நடிகர் சூரி, நடிகை ஐஸ்வர்யா லட்சுமி அணிந்திருந்த துப்பட்டாவை வாங்கி அணிந்து கொண்டு, அலப்பறை செய்தார். அது தொடர்பாக இந்த தொகுப்பில் காணலாம்.
அதாவது, நகைச்சுவை நடிகராக இருந்து கதையின் நாயகனாக உருமாறி தற்போது கதாநாயகனாக வளர்ந்து நிற்கிறார் சூரி. இவர் அவ்வப்போது படங்களுக்கான கதைகளையும் எழுதி வருகிறார். அப்படி அவர் எழுதி வைத்த கதைகளில் ஒன்றுதான் மாமன் என்ற படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தை புரூஸ்லி மற்றும் விலங்கு வெப் சீரீஸை இயக்கிய இயக்குநர், பிரசாந்த் இந்த படத்தை இயக்கியுள்ளார். படத்தின் போஸ்டர் தொடங்கி படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்கள் மத்தியில் தனி கவனம் பெற்றுள்ளது. மேலும் படத்தின் கதையை சூரி எழுதியுள்ளார் என்பதால் ரசிகர்கள் படத்தின் ரிலீஸ்க்காக காத்துக் கொண்டு உள்ளார்கள்.
படம் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை அதாவது வரும் 16ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதால், படத்தின் புரோமோஷன் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நமது பிலிமி பீட் யூடியூப் சேனலுக்கு சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி அளித்த பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்கள். குறிப்பாக இந்த படத்தின் கதையை எனது சொந்த வாழ்க்கையில் இருந்து எடுத்திருப்பதாக நடிகர் சூரி கூறினார்.

மற்றொரு உதாரணம்: நகைச்சுவை நடிகர், கதையின் நாயகன், அதன் பின்னர் கதாநாயகன் இப்போது கதாசிரியர் என சூரி தமிழ் சினிமாவில் நாளுக்கு நாள் மெருகேறி கொண்டே செல்கிறார். சூரிக்கு என்று அவர் தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். வெற்றிக்கு திறமையும் விடாமுயற்சியும் இருந்தால் போதும் என்பதற்கு தமிழ் சினிமா உலகத்தில் இருந்து சூரி மற்றுமொரு உதாரணம்.
சூரி - ஐஸ்வர்யா லட்சுமி: இந்நிலையில் படத்தின் புரோமோசனில் கலந்து கொண்ட போது, ரசிகர் ஒருவர் சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதன் பின்னர் அந்த ரசிகர், தான் ஏற்கனவே வாங்கி வந்திருந்த டைரி மில்க் சாக்லெட்டை நடிகை ஐஸ்வர்யா லட்சுமிக்கு கொடுத்தார். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத சூரி, தனக்கு சாக்லெட் எதுவும் வாங்கிக் கொண்டு வரப்பட வில்லை என்பதை தெரிந்து கொண்டார். உடனே நடிகை ஐஸ்வர்யா லட்சுமி அணிந்திருந்த துப்பட்டாவை அவரிடம் இருந்து வாங்கி, அதை அவர் உடுத்திக் கொண்டார்.
துப்பட்டா: அவர் அந்த துப்பட்டாவை உடுத்திக் கொண்டது மட்டும் இல்லாமல், தனக்கும் சாக்லெட் வேண்டும் என்று அந்த ரசிகரிடம் கேட்டார். இதை எதிர்பார்க்காத ரசிகர், சிரித்துக் கொண்டே ஷாக் ஆனார். மேலும் அந்த துப்பட்டாவை சூரி தனது தலை மற்றும் முகத்தை மூடியது போலவும் அணிந்தும் சாக்லெட் வேண்டும் என்று கேட்கிறார். சூரியின் இந்த அலப்பறை வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள், மனுசன் செஞ்சுட்டான், சூரி என்னங்க இப்படி அலப்பறை எல்லாம் செய்யறாரு என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.
முன்னதாக நமது பிலிமி பீட் தளத்திற்கு அளித்த பேட்டியில் மாமன் படத்தின் நாயகி ஐஸ்வர்யா லட்சுமி பேசுகையில், “ இந்த படத்தின் கதையைக் கேட்டதும் படத்தில் நடிக்க வேண்டும் என நான் உடனே முடிவு செய்துவிட்டேன். நான் சிறிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பெண். கதை கேட்கும் போது மிகவும் குறைவான உறவுகளே எனது மனதிற்கு வந்து போனார்கள். எங்கள் வீட்டில் நடக்கும் மிகப்பெரிய விழாவிற்கே மொத்தம் மிகக் குறைவான ஆட்கள்தான் இருப்பார்கள். படத்திலும் அப்படித்தான் இருப்பார்கள் என்று வந்து பார்த்தேன். ஆனால் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து பார்த்தால், ஒவ்வொரு காட்சிக்கும் பல கதாபாத்திரங்கள் இருக்கிறார்கள். அதுவே எனக்கு ஆச்சரியமாக இருந்தது. படத்தை பார்க்கும்போது எனக்கும் இதுபோல ஒரு மாமன் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது” என்று கூறினார்.
அதேபோல் மாமன் படத்தின் கதாசிரியரும் நடிகருமான சூரி கூறும் போது, " நான் சினிமாவில் வாய்ப்பு தேடிக் கொண்டு இருக்கும்போது நானாகவே 7 நாடகங்களுக்கான கதைகளை எழுதி நடித்துள்ளேன். சினிமாவில் வாய்ப்பு தேடிக் கொண்டு இருக்கும் போது கதைகள் எழுதி நடிக்கச் செய்தேன். மாமன் படத்தின் கதையை நான் கொரோனா காலகட்டத்தில் எழுதினேன். கொரோனா காலகட்டத்தில் நான் சுமார் ஆறு, ஏழு கதைகளை எழுதினேன். அதில் ஒரு கதைதான் மாமன். இயக்குநர் நான் எழுதிய சில கதைகளைப் பார்த்துவிட்டு இந்த கதையைத் தேர்வு செய்தார். மாமன் கதையை நான் எழுதியுள்ளதால் அந்த படத்தில் நானே நடிக்க முக்கிய காரணம் கிடையாது. எனக்கு எந்த கதாபாத்திரம் பொருத்தமாக இருக்கும் என்று எனக்கே தெரியும் அல்லவா. அதனால்தான் நான் இந்த படத்தில் நடிக்க முடிவு செய்தேன்.
இது மட்டும் இல்லாமல், மாமன் படத்தின் கதையை எனது சொந்த வாழ்க்கையில் இருந்தும் என்னைச் சுற்றி உள்ள உறவுகளில் இருந்தும் எடுத்துள்ளேன். எனக்கு பொதுவாக கதை எழுதும் பழக்கம் உள்ளது. காரில் பயணிக்கும்போது, யாரிடமாவது பேசும்போது, ஏதாவது யோசிக்கும்போது தோன்றுவதை எழுதியோ, வாய்ஸ் ரெகாட் செய்தோ வைத்துக் கொள்வேன். மாமன் உறவு அதுவும் தாய்மாமன் உறவு என்பது எப்போதும் மற்ற உறவுகளில் இருந்து மிகவும் வித்தியாசமானது மட்டும் இல்லாமல் ஸ்பெஷலானது. ஒருவர் மாமன் ஆன பின்னர் அவரது வாழ்க்கை முடியும் வரை மாமன் என்பது தனிப்பட்ட பந்தம். அதைப் பற்றி பேசுகிற படமாக மாமன் படம் இருக்கும்.
இந்த படத்தின் கதையைக் கேட்டதும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறேன் என்று சொன்னதும், அவர் இந்த கதை மீது எவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளார் என்பதை நான் புரிந்து கொண்டேன். கதை அவருக்கு மிகவும் பிடித்துப் போனதால், அவரது கதாபாத்திரத்தை நன்கு உணர்ந்து படத்தில் சிறப்பாக நடித்துள்ளார்" என்று பகிர்ந்து கொண்டார். இந்த படத்தை இயக்குநர் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் கதையை சூரி எழுதியுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் படம் தனி கவனம் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











