பண மோசடி வழக்கு.. கூலி பட நடிகர் கைதா?.. என்ன நடந்தது?.. அவரே கொடுத்த விளக்கம்
சென்னை: மலையாள திரையுலகை சேர்ந்த சௌபின் சாஹிர் இப்போது வேறு மொழிகளிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் கூலி படத்திலும் சௌபின் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். இந்நிலையில் அவர் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் பரவிய சூழலில் அதுகுறித்து விளக்கமளித்திருக்கிறார்.
கேரளாவை சேர்ந்த சௌபின் சாஹிர் பிரேமம் படத்தில் ஏற்றிருந்த பிடி வாத்தியார் ரோல் மூலம் பிரபலமானவர். அந்தப் படத்துக்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர்; பிஸியான நடிகராக வலம் வர ஆரம்பித்திருக்கிறார். நகைச்சுவை, சீரியஸ், எமோஷனல் என எதை கொடுத்தாலும் அதை அசால்ட்டாக செய்து ஸ்கோர் பண்ணும் வித்தை தெரிந்த சௌபினுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
மஞ்சும்மல் பாய்ஸ்: ஏகப்பட்ட படங்களில் தனது திறமையை நிரூபித்து அப்ளாஸை அள்ளும் சௌபின் சாஹிர்; மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் மூலம் மேற்கொண்டு பிரபலமானார். குகைக்குள் விழுந்த நண்பரை க்ளைமேக்ஸில் தூக்கிக்கொண்டு மேலே வரும்போது படம் பார்த்த ரசிகர்கள் அத்தனை பேரும் எமோஷனல் ஆனார்கள். அந்தப் படத்தில் நடித்தது மட்டுமின்றி தனது தந்தை பாபு சாஹிருடன் இணைந்து தயாரிக்கவும் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பிற மொழிகளில்: மலையாளத்தில் மட்டும் நடித்துவந்த சௌபின் சாஹிர் பிற மொழிகளிலும் இப்போது நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த்தை வைத்து இயக்கியிருக்கும் கூலி திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் அவர் மீதும், தந்தை பாபு சாஹிர் மீதும் பண மோசடி புகார் கொடுக்கப்பட்டது.
என்ன புகார்: அதாவது மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை தயாரிப்பதற்காக சிராஜ் ஹமீத் என்பவரிடம் சௌபின் சாஹிர் ஏழு கோடி ரூபாய் பெற்றதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் லாபத்தில் 40 விழுக்காடு ஷேரை தருவதாகவும் அவர் சொன்னார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் படம் சம்பாதித்த லாபத்தில் 40 விழுக்காடையும், வாங்கிய ஏழு கோடி பணத்தையும் சௌபின் கொடுக்கவில்லை என்று சிராஜ் புகார் அளித்தார்.
சௌபின் விளக்கம்: காவல் துறை நடத்திய விசாரணையில் பண மோசடி நடந்தது உறுதியானதாக கூறப்பட்டது. தொடர்ந்து சௌபின் சாஹிர், பாபு சாஹிர் ஆகியோருக்கு முன் ஜாமீன் நீதிமன்றம் வழங்கியிருந்தது. ஆனால் சௌபின் கைது செய்யப்பட்டுவிட்டதாக திடீரென தகவல் பரவியது. இந்நிலையில் அதுகுறித்து விளக்கமளித்திருக்கிறார் அவர்.
என்ன கூறியிருக்கிறார்?: இதுகுறித்து அவர் கூறுகையில், "என்னை யாரும் கைது செய்யவில்லை. இந்த வழக்கில் தேவை ஏற்படும்போது அழைப்பதாக நீதிமன்றம் கூறியிருக்கிறது. என்னை இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரித்தபோதே அனைத்து வரவு செலவும், கடனாக வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்ததற்கான ஆதாரத்தை எல்லாம் சமர்ப்பித்துவிட்டேன். காவல் துறை மற்றும் நீதிமன்றத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எனது பக்கமுள்ள நியாயமும் அவர்களுக்கு புரிந்திருக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











